பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாரூக்கான் ஓடிடி நிறுவனத்தை துவக்குவதாக அறிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் சமீப ஆண்டுகளில் ஓடிடி தளங்களின் ஆதிக்கம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தியேட்டர்கள்கூட தேவையில்லை.. ஓடியிலேயே படங்கள் வெளியானால் போதும் என்று பல முன்னணி தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை ஓடிடி தளங்களிலேயே வெளியிட்டு வருகிறார்கள்.
இதனால் இந்தியாவில் ஓடிடி தளங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. டிஸ்னி ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேஸான் பிரைம் வீடியோ போன்ற வெளிநாட்டு ஓடிடி தளங்களுடன், உள்ளூர் ஓடிடி தளங்களும் நிறையவே இருக்கின்றன.
இந்த நிலையில் ‘பாலிவுட் பாதுஷா’ என்று அழைக்கப்படும் ஹிந்தி படவுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான ஷாரூக்கான், ஓடிடி தளம் ஒன்றை ஆரம்பிக்கப் போவதாக இன்றைக்கு அறிவித்திருக்கிறார்.
இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் இன்று அவர் ஒரு போஸ்டரை வெளியிட்டு அதில் “ஓடிடி உலகில் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது…” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புதிய ஓடிடி தளத்திற்கு ‘எஸ்.ஆர்.கே. பிளஸ்’ என்று பெயர் வைத்துள்ளார் ஷாரூக்கான்.
இந்தச் செய்தியறிந்த பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் ஷாரூக்கானுக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட்டின் இன்னொரு சூப்பர் ஸ்டாரான சல்மான்கான், “உங்கள் பக்கத்திலிருந்து இன்றைய பார்ட்டி.. உங்களின் புதிய ஓடிடிக்கு எனது வாழ்த்துகள்…” என்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.