இரண்டு தலைசிறந்த இசையமைப்பாளர்கள் ஒரு பாடலுக்கு ஒன்றிணைந்தால், நிச்சயமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அளவே இருக்காது. அப்படி ஒரு பாடலாக உருவாகி இருக்கிறது ‘போகன்’ திரைப்படத்திற்காக டி.இமான் இசையமைத்து, அனிருத் பாடியிருக்கும் ‘டமாலு டுமீலு’ பாடல்.
‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ சார்பில் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே.கணேஷ் இணைந்து தயாரிக்கும், ‘போகன்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி – அரவிந்த் சுவாமி – ஹன்சிகா மோத்வானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் இயக்குநரான லஷ்மண் இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘டமாலு டுமீலு’ பாடல் சமீபத்தில் ஹிட்டாகி இசை ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் நவம்பர் 29-ம் தேதி வெளியாக இருக்கும் இந்த பாடலின் முன்னோட்ட காணொளியை, நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா சமீபத்தில் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். 29 வினாடிகள் மட்டுமே ஓடக் கூடிய இந்த வீடியோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
இந்தப் பாடல் பற்றிப் பேசிய இயக்குநர் லஷ்மண், “என்னுடைய முதல் படமான ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் அனிருத் – இமான் கூட்டணியில் உருவான ‘டண்டணக்கா’ பாடல், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதே வெற்றி கூட்டணி தற்போது என்னுடைய அடுத்த படமான ‘போகன்’ படத்திலும் மீண்டும் கை கோர்த்திருக்கின்றது. நிச்சயமாக இந்த ‘டமாலு டுமீலு’ பாடல் ரசிகர்களுக்கு ஒரு கிறிஸ்துமஸ் விருந்தாக இருக்கும் என பெரிதும் நம்புகிறோம்…” என்று உற்சாகமாக கூறினார்.