பரம ரகசியமாக பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆபாச படங்களை பளிச்சென்று சில நூறு பேர் பார்த்துக் கொண்டிருக்கும் அரங்கத்தில் ஒளிபரப்பினால் எப்படியிருக்கும்..? அப்படியொரு சூழல் நேற்று முன்தினம் மும்பையில் நடந்தேறியுள்ளது.
‘Desi Kattey’ என்ற இந்தி படத்தை ஆனந்த் குமார் தயாரித்து இயக்கியிருக்கிறார். இதில் சுனில் ஷெட்டி, அஸுதோஷ் ராணா, டியா பாஜ்பாய், சாஸா ஆஹா, அகில் கபூர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா மேடையில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது.
படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயிலர் திரையில் ஓடிக் கொண்டிருக்கும்போது திடீரென்று நடுவில் ஆபாச பட காட்சிகளும் ஓடியதாம்.. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அத்தனை பேரும் இதனை பார்த்து அதிர்ச்சியாகிவிட்டார்களாம். இந்த ஆபாச வீடியோ வந்திருந்த அனைத்து தொலைக்காட்சி கேமிராக்களிலும் பதிவாகியிருக்கிறதாம்.
பாடல்களையும், டிரெயிலரையும் டிவிடியில் காப்பி செய்த தொழில் நுட்ப அலுவலர் ஒருவர் செய்த தவறினால்தான் இது நிகழ்ந்துவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர் தரப்பு சொல்லியிருக்கிறது.
ஆனாலும், “இத்தனை பெரிய கூட்டத்தில் ஒளிபரப்பவுள்ள வீடியோவில் நடுப் பகுதியில் யாராவது ஆபாச வீடியோ காட்சிகளை தெரியாமல் திணிக்க முடியுமா.. இது அந்தப் படத்திற்கு எதிராக பின்னப்பட்ட சதி வலையாகவும் இருக்கலாம்…” என்றும் மும்பை மீடியாக்கள் கருதுகின்றன.









