ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வரும், ஜீ-5 தமிழில் தொடர்ந்து தரமான வெற்றிப் படங்களை தந்து வருகிறது.
தற்போது இயக்குநர் கே.எம்.சர்ஜுன் இயக்கத்தில் பிரியா பவானி சங்கர், ஷிரிஷ், கிஷோர் நடிக்கும் ‘பிளட் மணி’ (Blood Money) என்ற திரைப்படத்தை வழங்குகிறது. இப்படம் டிசம்பர் 24 அன்று நேரடியாக ஜீ5 OTT தளத்தில் வெளியாகிறது.
இதனையொட்டி, படக் குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கையாளர்களுக்கு இப்படம் சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் படத்தின் இயக்குநரான கே.எம்.சர்ஜூன் பேசும்போது, “ஒரு எழுத்தாளருக்கு இயக்குநர் ஆக வேண்டும் என்றும், ஒரு இயக்குநருக்கு எழுத்தாளர் ஆக வேண்டும் என்கிற கனவும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து இருக்கிறது. ஆனால், அதை இந்த ஓடிடி தளங்கள் மாற்றி வருகின்றன.
இந்தப் படத்திற்குள் நான் வரும்போது இந்தப் படத்திற்கா கதை, திரைக்கதை இரண்டுமே ரெடியாக இருந்தது. நான் அதை திரையில் மட்டும் எப்படி கொண்டு வருவது என்பதை மட்டுமே செய்துள்ளேன். நாயகி பிரியா பவானி சங்கர் மிகவும் புரபஷனலானவர். ஷூட்டிங்கில் ஒரு நாள்கூட எந்த தொந்தரவும் கொடுக்காமல், அவரது வேலையை மிகச் சரியாக செய்து கொடுத்தார். மிகவும் கச்சிதமாக நடித்திருக்கிறார் பிரியா. மேலும் படத்தில் நடித்த ஷிரிஷ், கிஷோர் உள்ளிட்ட அனைவருமே நன்றாக நடித்துள்ளார்கள்.
சூர்யா ராஜீவன் துபாய் செட், நியூஸ் ரூம் செட் எல்லாம் அட்டகாசமாக செய்து கொடுத்தார். ஒளிப்பதிவாளர் பாலமுருகன் மிக கடுமையாக உழைத்திருக்கிறார்.
கோவிட் எங்களையும் தாக்கியது. அதையும் தாண்டி, தயாரிப்பாளர் இர்பான் மாலிக் இப்படத்தை கொண்டு வந்துள்ளார். எப்போதும் நல்ல படத்திற்கு ஆதரவு தரும் தமிழக மக்கள் இதற்கும் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்..” என்றார்.









