அஜ்மல், நாசர், ஆரூஷி நடித்து ஆந்திராவில் வெற்றி பெற்ற திரைப்படம் ‘பிரபஞ்சனம்’.
இந்தப் படம் இப்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்படவுள்ளது. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் செய்த படத்தையும் தயாரித்தவர் பாஸ்கர்ராவ் வேன்றோத்தி.
படம் பற்றிப் பேசிய பாஸ்கர்ராவ், “இந்தியாவில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு 68 வருடங்களான பின்னரும் மேல்தட்டு மக்களுக்கும், கீழ்த்தட்டும் மக்களுக்கான இடைவெளி இன்னமும் குறையவில்லை.
இதற்குக் காரணம் அரசியல் அமைப்பா? அல்லது சமுதாயமா? அல்லது அரசங்கமா..? என்கிற கேள்விகளுக்கு பதிலோடு, தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையிலும் இந்தப் படம் உருவாகியுள்ளது.
படத்தில் முதல் மந்திரியாக கோட்டா சீனிவாசராவும், எதிர்க்கட்சித் தலைவராக கொல்லப்புடி மாருதிராவும் நடித்துள்ளனர். ஆர்.பி.பட்நாயக் இசையமைத்துள்ளார்..” என்றார்.
எல்லாஞ்சரி.. இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது என்கிறீர்களா..? அதுதான் படத்தின் டைட்டில். படத்துக்கு ‘நல்லவாயன் நாறவாயன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். கதைப்படி பார்த்தால் தேர்தலுக்கு முன்பு நல்லவாயன்களாக இருந்த அரசியல்வாதிகள் தேர்தலுக்கு பின்பு நாறவாயன்களாக மாறிவிடுகிறார்கள் என்பதையே சொல்கிறார்கள் போலும்..!
படத்தின் கதையின்படி இந்தப் படத்திற்கான தலைப்பு இப்படியிருப்பது பொருத்தமானதே..!









