“ஓய்’ என்ற டைட்டில் எதற்காக..?” இயக்குநரின் விளக்கம்..!

“ஓய்’ என்ற டைட்டில் எதற்காக..?” இயக்குநரின் விளக்கம்..!

மார்க் ஸ்டூடியோ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ‘ஓய்’ என்ற பெயரில் ஒரு புதிய படத்தினை தயாரித்துள்ளது.

இதில் நாயகனாக கீதன் பிரிட்டோவும், நாயகியாக ஈஷாவும் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சங்கிலி முருகன் தாத்தா வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை பிரான்சிஸ் மார்கஸ் இயக்கியிருக்கிறார்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் பிரான்சிஸ் மார்கஸ், “காதல், நகைச்சுவை கலந்த குடும்பப் படமாக இந்த ‘ஓய்’ தயாராகியுள்ளது.

நாயகனும், நாயகியும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறார்கள். காதலிக்கிறார்கள். தொடர்ந்து அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் தனித்தனியே பிரிந்து செல்ல முடிவெடுக்கிறார்கள். இந்த நேரத்தில் நாயகனை பார்த்து நாயகி ‘ஓய்’ என்று அழைக்கிறாள். ஆனால் நாயகனோ அவளைத் திரும்பிப் பார்க்காமலேயே செல்கிறான்.

இதனால் கோபம் கொண்ட நாயகி நாயகனின் வீட்டுக்குப் போய் அவனையும், தன்னையும் சம்பந்தப்படுத்தி நடக்காத சில விஷயங்களை மிகைப்படுத்தி நாடகமாடுகிறாள். இது நாயகியே எதிர்பார்க்காத பல விஷயங்களையும், திருப்பங்களையும் ஏற்படுத்துகிறது.

இது என்ன என்பதும், அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.

படத்தில் கூடவே சிலம்பம் விளையாட்டுக்கும் மிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். இசைஞானி இளையராஜா இந்தப் படத்தின் கதையைக் கேட்டுவிட்டு இசையமைக்க சம்மதித்தார். அவருடைய இசையில் ஒரு ராப் பாடலும் படத்தில் இடம் பெறுகிறது. அவரே ஒரு பாடலை எழுதியிருக்கிறார். மேலும் விவேகா, ஏகாதசி ஆகியோரும் பாடல்களை எழுதியுள்ளனர்.

படத்திற்கு சென்சாரில் ‘யு’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது. இதை படத்துக்குக் கிடைத்துள்ள முதல் வெற்றியாக நாங்கள் கருதுகிறோம்..” என்றார்.

Our Score