பிகில் – சினிமா விமர்சனம்

பிகில் – சினிமா விமர்சனம்

AGS Entertainment நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்திருக்கிறார். நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.

இவர்களுடன் ஜாக்கி ஷெராப், ஆனந்த்ராஜ், விவேக், யோகிபாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா, டேனியல் பாலாஜி, செளந்தர்ராஜன், அமிர்தா ஐயர், தேவதர்ஷிணி, மனோபாலா மற்றும் பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – அட்லீ, ஒளிப்பதிவு – விஷ்ணுகுமார், இசை – ஏ.ஆர்.ரஹ்மான், கலை இயக்கம் – டி.முத்துராஜ், படத் தொகுப்பு – ரூபன், பாடல்கள் – விவேக், சண்டை இயக்கம் – அனல் அரசு, மக்கள் தொடர்பு – நிகில் முருகன், புகைப்படங்கள் – மணீஷா, நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.எம்.வெங்கட் மாணிக்கம், தயாரிப்பு உருவாக்கம் – அர்ச்சனா கல்பாத்தி, தயாரிப்பு நிறுவனம் – ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மெண்ட், தயாரிப்பாளர்கள் – கல்பாத்தி S.அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ்.

விளையாட்டை மையப்படுத்தியே கடந்த சில ஆண்டுகளாக பல திரைப்படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. அந்த அனைத்துத் திரைப்படங்களிலிருந்தும் சில, சில காட்சிகளை அப்படியே சுட்டு, ஒரு முழுப் படமாக இந்த ‘பிகிலை’ கொடுத்திருக்கிறார் இயக்குநர் அட்லீ.

கூடவே ஒரு வித்தியாசத்திற்காக ‘தளபதி’ படத்தில் இருந்தும் மிக முக்கியமான ஒரு காட்சியை அப்படியே சுட்டிருக்கிறார் அட்லீ.

இவருடைய முந்தைய படங்களான ‘ராஜாராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களுமே முன்னர் வெளிவந்த பல தமிழ்த் திரைப்படங்களின் கதையில் இருந்து சுட்டவைதான். இப்போது மிகப் பெரிய சுட்ட படமாக இந்த ‘பிகில்’ அமைந்திருக்கிறது. இது அட்லீக்கு பெருமையா இல்லையா என்பதை அவரே நினைத்துப் பார்க்கட்டும்..!

‘பிகில்’ என்ற இந்தப் படத்தின் தலைப்பு விளையாட்டுப் போட்டிகளில் நடுவர்கள் பயன்படுத்தும் ‘விசில்’ என்பதன் அடையாளப் பெயர்தானாம்.. இதனால் இந்தப் படத்திற்கு இது ஏகப் பொருத்தம் என்கிறார்கள் விஜய்யின் ரசிகர்கள்.

‘மைக்கேல்’ என்ற விஜய் தற்போது சென்னையில் ஒரு தாதா போல திகழ்கிறார். அமைச்சரையே பெயர் சொல்லி மிரட்டும் அளவிற்கு வல்லமை படைத்தவர். இவருடைய நெருங்கியவரும், தம்பி போன்றவருமான கதிர் சென்னைக்கு வருகிறார்.

கதிர் தமிழக பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளர். இவருடன் காரில் செல்லும்போது திடீரென்று வரும் ரவுடி டேனியல் பாலாஜி கதிரை கத்தியால் குத்திவிட்டு விஜய்யையும் தாக்குகிறார். உயிர் போகும் நிலையிலும் விஜய்யால் காப்பாற்றப்படுகிறார் கதிர்.

பயிற்சியாளர் மருத்துவமனையில்  இருக்கும் நிலையில் கால்பந்து போட்டியில் எப்படி விளையாடுவது என்று வீராங்கனைகள் யோசித்துக் கொண்டிருக்கும்போது, மைக்கேலை பயிற்சியாளராக்கும்படி கதிர் சொல்கிறார். அப்போதுதான் இந்த ‘மைக்கேல்’ யார் என்கிற மர்மம் உடைபடுகிறது.

‘மைக்கேலின்’ தந்தையான ‘ராயப்பனும்’ ஒரு விஜய்தான். ஆனால் ‘வேலு நாயக்கரை’ போன்ற தாதா. இவரது எதிரி விஜயன். விஜயனின் மகன்தான் டேனியல் பாலாஜி. ‘மைக்கேல்’ தமிழக கால்பந்து அணியில் கேப்டனாக இருக்கிறார். தேசிய அணிக்கு தேர்வு செய்யப்பட வேண்டிய நிலையில் திடீரென்று நிராகரிக்கப்படுகிறார்.

இதனை எதிர்பார்க்காத தந்தை ‘ராயப்பன்’ தேர்வுக் கமிட்டித் தலைவரான ஜாக்கி ஷெராப்பை ரவுண்டு கட்டி மைக்கேலையும், அவரது நண்பர்களையும் தேசிய அணியில் சேர்க்கிறார். தேசிய சேம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கக் கிளம்பிய மைக்கேலை வழியனுப்பி வைக்க, ரயில் நிலையத்திற்கு வருகிறார் ராயப்பன்.

அங்கே திடீரென்று தனது ஆட்களுடன் வந்த விஜயன். ராயப்பனை கொலை செய்கிறார். தன் கண் எதிரிலேயே தனது தந்தையைக் கொலை செய்ததைப் பார்த்த மைக்கேல், அந்தக் கணமே அப்பாவின் தாதா வேலையை தான் கையில் எடுத்துக் கொண்டு விஜயனை போட்டுத் தள்ளுகிறார். இப்போது விஜயனின் மகன் டேனியல் பாலாஜியும் ‘மைக்கேலை’ கொலை செய்ய நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

கதிரின் இந்தக் கதையைக் கேட்டுவிட்டு உடனடியாக ‘மைக்கேலை’ தமிழக பெண்கள் கால்பந்து அணியின் கோச்சாக நியமிக்கிறார்கள். ஆனால் அணியில் இருக்கும் வீராங்கனைகள் இதனை ஏற்க மறுக்கிறார்கள். ‘ஒரு ரவுடி தங்களுக்குக் கோச்சாக இருப்பதா?’ என்று சொல்லி அவரைப் புறக்கணிக்கிறார்கள்.

ஆனாலும் பயிற்சியாளர் ‘மைக்கேல்’, இந்தப் புறக்கணித்தலையும் தாண்டி வீராங்கனைகளை அரவணைத்து எப்படி தேசிய சேம்பியன்ஷிப் பதக்கத்தை தமிழக பெண்கள் அணியைப் பெற வைக்கிறார் என்பதுதான் இந்த ‘பிகில்’ படத்தின் கதை.

அப்பா தாதா.. மகன் சந்தர்ப்பவசத்தால் அப்பாவின் மரணத்திற்கு நியாயம் வழங்க தாதாவாவது.. என்பதை பல கமர்ஷியல் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள்.

மற்றபடி இரண்டாம் பாதியில் இருக்கும் விளையாட்டு, வீராங்கனைகள், பயிற்சியாளர் மோதல்.. தேர்வுக் கமிட்டியின் பாரபட்சம்.. தமிழகத்தைப் புறக்கணிப்பது.. தமிழக வீராங்கனைகளை திட்டமிட்டு வெளியேற்றுவது.. இதையெல்லாம் விளையாட்டு சம்பந்தமான பல திரைப்படங்களில் பார்த்திருக்கலாம்.

அதை எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸில் போட்டு அரைத்தாற் போன்று இத்திரைப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் அட்லீ. அதிலும் ‘இறுதிச் சுற்று’, ‘வெண்ணிலா கபடி குழு’, ‘கனா’, ‘கென்னடி கிளப்’ ஆகிய படங்களின் பாதிப்பு நிறையவே இந்தப் படத்தில் உண்டு.

‘இறுதிச் சுற்றில்’ குத்துச் சண்டை, ‘வெண்ணிலா கபடி குழு’, மற்றும் ‘கென்னடி கிளப்பில்’ கபடி, ‘கனா’ படத்தில் கிரிக்கெட்.. இதில் கால்பந்து.. அவ்வளவுதான் வித்தியாசம்.

விஜய்யின் ரசிகர்களுக்காகவே அவரது கேரக்டர் ஸ்கெட்ச் அதே பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்காக அடிக்கடி உடலைக் குறுக்கிக் கொண்டு செல்லம் கொஞ்சுவதெல்லாம் ரொம்பவே டூ மச்சு செல்லம்.. இனி இந்தக் கண்றாவியைக் கண்ணிலேயே காட்டாமல் இருந்தால் விஜய்க்கு நல்லது.

சண்டை காட்சிகளில் அனல் அரசுவின் சிறப்பான இயக்கத்தினாலும், தொழில் நுட்பத்தின் உதவியினாலும் யூத்தாக பறந்து விளையாடியிருக்கிறார் விஜய்.

மொத்தப் படத்திலும் இரண்டு காட்சிகள்தான் குறிப்பிடத்தக்கவையாக அமைந்துள்ளன. ஒன்று வர்ஷா பொல்லம்மாவை அவருடைய வீட்டிற்கே வந்து கால்பந்து விளையாட அழைப்பது..

இந்தக் காட்சியில் விஜய் பேசாமல் விஜய்யின் இணையான நயன்தாராவைவிட்டு பேச வைத்திருப்பதுகூட ஒரு அழகுதான். “ஒவ்வொரு மனைவிகளுக்கும் ஒரு கனவும், லட்சியமும் இருக்குங்க..” என்று நயன்தாரா எடுத்துச் சொல்லும் காட்சி அழகு.

இன்னொன்று, ஆசீட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணை சந்திக்க வரும் விஜய், கதவுக்கு அருகில் அமர்ந்து அவருக்குத் தைரியம் சொல்லும் காட்சி. ‘திறமையும் தன்னம்பிக்கையும் முகத்தின் அடையாளத்தில் இல்லம்மா’ என்று பேசி, அந்தப் பெண்ணைத் தனிமைச் சிறையில் இருந்து மீட்கும் காட்சி. மிகச் சிறப்பான காட்சியமைப்பில், சிறப்பாக நடித்திருக்கிறார் விஜய்.

ஆனால், நிஜத்தில் இது போன்று தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில், போட்டிக்கு முதல் நாளெல்லாம் ஒரு வீரரின் பெயரை லிஸ்ட்டில் திடீரென்று சேர்ப்பதென்பது நிச்சயமாக முடியாது. சினிமாவுக்காக என்றாலும் லாஜிக் அவுட்டுக்கு ஒரு லிமிட்டேஷன் இல்லையா அட்லீ…?

அப்பா விஜய் ‘ராயப்பனாக’ நடித்திருப்பவருக்கு கொஞ்சம் திக்கு வாய்.. கரகரப்பான குரலில் ஒரேயொரு குங்குமப் பொட்டையும், வெள்ளி முடியையயும் வைத்து வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள். “மைக்கேல் கப்பு முக்கியம்…” என்று அப்பா ‘ராயப்பன்’ சொல்லும் வசனம் இனி பல மீம்ஸ்களில் குறியீடாகத் தென்படலாம்.

நாயகி நயன்தாராவுக்கு அதிகம் வேலையில்லை. ரயில்வே ஸ்டேஷனில் மைக்கேல் வாங்கி வரும் கப்ப பிடுங்கி அடித்து நெளிய வைக்கும் காட்சியில் மட்டுமே கொஞ்சம் நடித்திருக்கிறார். மற்றபடி அவரது அழகான முகத்தை பல கோணங்களில் காட்டியே காட்சியை முடித்துவிட்டார்கள். அதிலும் அநியாயமாக திடீரென்று பிஸியோதெரபிஸ்ட்டாக அவரையும் அணிக்குள் கொண்டு வந்து இணைத்திருக்கிறார் அட்லீ. இதெல்லாம் விஜய்யின் படத்தில் மட்டுமே சாத்தியமானது.

விஜய், ஞானசம்பந்தம், ஜார்ஜ், நயன்தாரா சம்பந்தப்பட்ட கல்யாண காட்சி படு திரைபையான திரைக்கதை. சர்ச்வரைக்கும் கல்யாணத்திற்காக வந்துவிட்டு திருமணம் வேண்டாம் என்று சொல்லும் நயன்தாராவையும் இதனை ஏற்றுக் கொள்ளும் அவருடைய அப்பாவான ஞானசம்பந்தத்தையும், உலகத்தில் எந்த மூலையிலும் யாரும் பார்க்கவே முடியாது. எதுக்கு இந்த அர்த்தமற்றக் காமெடி..?

‘மைக்கேலை’ கோச்சாக ஏற்கத் தயங்கும் இந்துஜா, மோனிகா ரெபா ஜான், அமிர்தா ஐயர் போன்றோருக்கு நடிப்புக்கான ஸ்கோப் நிறைய கொடுத்து அழகாக நடித்திருக்கிறார்கள். இடைவேளைக்கு பின்பு ரசிகர்களை அதிகம் கவர்வது இவர்கள்தான்.

இவர்களுக்கு கோச்சிங் கொடுக்கும் காட்சிகள் உண்மையிலேயே திரையைக் கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது. ஆனால் அதற்காக காலை 5 மணி என்று சொல்லி பட்டப் பகலில் ஷூட் செய்திருக்கக் கூடாது.. உதவி இயக்குநர்கள் இதனைக் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.

கூடவே 2018-ம் ஆண்டில் ஹாலிவுட் இயக்குநரான Sean McNamara-வின் இயக்கத்தில் வெளியான ஹாலிவுட் படமான The Miracle Session படத்தில் இருக்கும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு பயிற்சி கொடுக்கும் காட்சிகளை அப்படியே சுட்டு இதில் காட்சிப்படுத்தியிருக்கும் அட்லியின் தைரியத்தைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்(!). பாவம்.. தமிழ்ச் சினிமாவுலகம்.. நாளைய வரலாறு தமிழ்ச் சினிமாக்களை எந்த அளவுக்குக் கேவலப்படுத்தப் போகிறதோ.. தெரியவில்லை..!

மைக்கேலுடன் ஆனந்த்ராஜ், சாய் தீனா, யோகிபாபு மற்றும் பலர் எப்போதும் இருக்கிறார்கள். இதே கூட்டம் டோர்னமெண்ட்டின்போதும் உடன் இருப்பது திகைப்பைத் தருகிறது. அதோடு இவர்களுக்கான நடிப்பு வாய்ப்பும் இல்லை. இடைவேளைக்கு பின்பு டெல்லியில் தென்படும் விவேக்கும் சில நிமிட துளிகள் புன்னகைக்க வைத்திருக்கிறார்.

தளபதி நடிக்கும் படத்தில் சின்ன தளபதிகளெல்லாம் ச்சும்மா வந்து போனாலே போதும் என்று அட்லீ நினைத்துவிட்டார் போலிருக்கிறது.

வில்லனாக ஜாக்கி ஷெராப். பிறர் கையைத் தொட்டதுக்காகவே லோஷன் போட்டுக் கையைத் துடைத்துக் கொள்ளும் பிறவியாக தன்னைக் காட்டிக் கொள்பவருக்கு ராயப்பன் கொடுக்கும் அதிரடி டிரீ்ட்மெண்ட்டும் அதைத் தொடர்ந்து ‘மைக்கேல்’ எப்படி தேசிய அணியில் இடம் பிடித்தார் என்பதைச் சொல்லும் இடமும் சரிதான்.

என்றாலும், “ஒரு வில்லனே தான் இப்படி ஒரு நாள் உன் அப்பனிடம் அசிங்கப்பட்டேன், என்று சொல்வானா..?” என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. ஜாக்கி ஷெராப் அப்படியொரு காட்சியில் நடிக்க ஒத்துக் கொண்டதே பெரிய விஷயம். இதற்காக அவருக்கு நமது பாராட்டுக்கள்..!

‘தளபதி’ படத்தில் கலெக்டர் முன்னிலையில் நடைபெறும் சமரசப் பேச்சு போலவே இந்தப் படத்திலும் ஒரு காட்சி அப்பட்டமாக வைக்கப்பட்டிருக்கிறது. கூச்சமெல்லாம் பார்த்தால் வெற்றிகரமான இயக்குநராக முடியாது என்பதைத் தெள்ளத் தெளிவாகவே தெரிந்து வைத்திருக்கிறார் அட்லீ. ஆனாலும் இந்தக் காட்சியை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை.

ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு படத்தின் பட்ஜெட்டுக்கேற்றவாறு காஸ்ட்லியாகவே படப் பதிவினைச் செய்திருக்கிறது. ஒவ்வொரு பிரேமிலும் 50 பேராவது இருக்கிறார்கள். அந்த அளவுக்கு படத்தின் ரிச்னெஸ்ஸை எடுத்துக் காட்டியிருக்கிறது ஒளிப்பதிவு.

கால்பந்து போட்டியை வடிவமைத்தவர்கள் அதனைச் சொதப்பலாக செய்து வைத்திருப்பதால் அதில் இருக்க வேண்டிய ஸ்பிரிட்.. ஆர்வம்.. பரபரப்பு எல்லாமே மிஸ்ஸிங். ஆனால் மைதானம், விளையாட்டு காட்சிகளில் கொஞ்சம்தான் கேமிராவும் விளையாடியிருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ‘சிங்கப் பெண்ணே’ பாடல் காட்சியில் வெற்றிகரமாக இசையமைப்பாளரும், இயக்குநரும் முகத்தைக் காட்டியிருக்கிறார்கள். அதற்காகவே அந்தப் பாடலை வைத்திருக்கிறார்கள் போலும். டூயட் பாடல் காட்சி அதிகம் கவரவில்லை. ‘வெறித்தனம்’ பாடல் காட்சி விஜய்யின் ரசிகர்களுக்கு வெறியூட்டுவதற்காகவே வைக்கப்பட்டுள்ளது போலும்.

எப்படியும் 5 மணி நேரம் படமாக உருவாக்கப்பட்டு 3 மணி நேரமாக சுருக்கியிருக்கிறார்கள் போலும். இதுவே மிக அதிகமாக உள்ளது. பல சமயங்களில் படத்தின் நீளமே நமக்கு அயர்ச்சியையும், சோர்வையும் தருகிறது.

அப்பா சம்பந்தப்பட்ட காட்சிகளை அறவே நீக்கியிருக்கலாம். வில்லன் கோஷ்டி மோதலையும் தூக்கிவிட்டு கால்பந்து விளையாட்டு சம்பந்தமான படமாகவே இதனை உருவாக்கியிருக்கலாம். இடைவேளைக்குப் பின்பும் டேனியல் பாலாஜியின் திடீர் தாக்குதல் காட்சியும் அது தொடர்பான செண்டிமெண்ட் காட்சிகளெல்லாம் எதற்காக என்றே தெரியவில்லை. தேவையற்று நமது கவனத்தைத் திசை திருப்பியிருக்கின்றன.

‘பெண்களை போற்றுதும்’ என்றே படம் முழுக்க சொல்லி வந்து கடைசியில் பாண்டியம்மாளை ‘குண்டம்மா..’ ‘குண்டம்மா…’ என்று சொல்லி அவரது கோபத்தைக் கிளப்பி கோல் போட வைக்கிறாராம் விஜய். இது எவ்வளவு பெரிய தவறு என்பதை அட்லீ உணரவில்லை என்றாலும் விஜய்யுக்காவது தெரிந்திருக்க வேண்டாமா..?

நாளை குண்டான பெண்களைப் பார்த்தால் அனைவருமே இதே போன்றுதான் சகஜமாக ‘குண்டம்மா’ என்று சொல்லப் போகிறார்கள். பெண்ணியத்தைப் போற்றுகிறோம் என்று சொல்லும் படத்திலேயே இந்தக் கதை.. ம்ஹூம்..

மேலும் பாண்டியம்மாள் போன்ற தோற்றத்தில் இருப்பவர் இது போன்ற கால்பந்து விளையாட்டில் வீராங்கனையாக இருக்கவே முடியாது என்பதையும் அட்லீயின் துணை இயக்குநர்கள் யாரும் சொல்லவில்லை போலும். எந்த நாட்டு அணியிலாவது யாராவது இப்படி இருப்பார்களா..? என்னவோ போடா மாதவா..!

180 கோடி பட்ஜெட்டில் வெறும் 20 கோடி ரூபாய் லாபத்தில் தயாரிப்பாளருக்கு போட்ட காசை எடுத்துக் கொடுத்துவிட்டதால், இந்தப் படத்தின் தயாரிப்பாளரின் ‘தலை தப்பியது தம்பிரான் புண்ணியமாகிவிட்டது’..!

இந்த ‘பிகில்’ திரைப்படம் விஜய்யின் ரசிகர்களுக்கானது. அவர்களின் கொண்டாடட்டத்திற்கு குறையில்லாமல் காட்சிகளை அமைத்துப் படமாக்கியிருப்பதால், நிச்சயமாக படம் பேசப்படும். ஓடி விடும்..!

அடுத்தப் படத்திலாவது இயக்குநர் அட்லீ, தனது சொந்தக் கதையை படமாக்குவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Our Score