தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் தயாரிப்பில் அவருடைய மருமகனான நடிகர் ஜெயம் ரவி நடித்திருக்கும் ‘பூமி’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்பதே தெரியாத நிலையில் அந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று சொல்லி கார்த்திக் கே.பாலாஜி என்ற ஒரு இணை இயக்குநர் சர்ச்சையைக் கிளப்பியிருந்தார்.
‘பூமி’ படத்தை எந்த ஓடிடியில் கொடுப்பது என்கிற பஞ்சாயத்திலேயே ஓடிக் கொண்டிருந்த அதன் தயாரிப்பாளருக்கு இந்தக் கதை சர்ச்சையும் இன்னொரு பக்கம் தலைவலியைக் கொடுத்தது.
கார்த்திக் கே.பாலாஜி இந்தப் புகாரை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் கொடுத்திருந்தார். சங்க நிர்வாகிகள் ‘பூமி’ படத்தின் இயக்குநரான லஷ்மணிடம் அவருடைய கதையையும், கார்த்திக் கே.பாலாஜியின் கதையையும் வாங்கிப் படித்துவிட்டு ‘இரண்டும் ஒன்று’தான் என்று தடாலடியாகச் சொல்லிவிட்டார்கள்.
இதனால், இந்த விஷயத்தில் ஏதாவது காம்பரமைஸ் செய்தாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது தயாரிப்பாளர் தரப்பு. இதையடுத்து ‘பூமி’ படத்தின் தயாரிப்பாளர் கதை சர்ச்சையைக் கிளப்பிய இணை இயக்குநர் கார்த்திக் கே.பாலாஜிக்கு 10 லட்சம் ரூபாயை சன்மானமாகக் கொடுத்து பஞ்சாயத்தை முடித்திருக்கிறார்.
இது குறித்து இயக்குநர் லஷ்மணிடம் கேட்டபோது, “படத்தின் மையக் கருத்தான மரபணு மாற்று விதை பற்றி மட்டுமே இரண்டு பேரும் ஒண்ணா தின்க் பண்ணியிருக்கோம். இதுதான் ஒற்றுமை. அவ்வளவுதான். வேறு எதுவுமில்லை. இருந்தாலும், இந்தப் பிரச்சினையை முடிக்கணுமேன்றதுக்காகத்தான் பணம் கொடுத்திருக்கோம்.
டைட்டில்ல ‘எங்களைப் போன்று ‘மரபணு மாற்று விதை’ பற்றி சிந்தித்த இணை இயக்குநர் கார்த்திக் கே.பாலாஜிக்கு நன்றி’ன்னுதான் போடப் போறோம்.. வேற என்ன ஸார் செய்றது..?” என்று விரக்தியாகப் பேசுகிறார்.
எப்படியோ பஞ்சாயத்து முடிஞ்சிருச்சுல்ல.. விடுங்கப்பூ.. படத்தை சீக்கிரம் கொண்டாங்கப்பூ..!