கடந்த 2017-ம் ஆண்டு நள்ளிரவில் சிலரால் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகை பாவனா தற்போது முதல்முறையாக மனம் திறந்து தனது கசப்பான கடந்த காலத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார்.
இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் அவர் எழுதியிருப்பது இதுதான் :
“பாதிக்கப்பட்டவரில் இருந்து ஒரு போராளியாக மாறும் இந்த பயணம் எனக்கு எளிமையானதாக அமைந்துவிடவில்லை.
கடந்த 5 ஆண்டுகளாக என் பெயர், என் அடையாளம் அனைத்தும் மறைக்கப்பட்டது. காரணம், எனக்கு நடந்த குற்றத்தின் ஆழம்தான்.
என்னதான் நான் குற்றம் செய்யாதவராக இருந்தாலும், என்னை தனிமைப்படுத்த, என்னை ஒதுக்க பல முயற்சிகள் நடந்தன. அந்த நேரத்தில் எனக்காக குரல் கொடுக்க சிலர் என் வாழ்வில் நுழைந்தார்கள். தற்போது எனக்கு பல குரல்கள் கேட்கும்போது, எனக்கான நீதிக்காக நான் மட்டும் இல்லை; இங்கு நிறைய நபர்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்பது தெரிகின்றது.
நீதியை நிலைநாட்டவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் என்னைப்போல் இன்னொருவர் இதனை அனுபவிக்கக் கூடாது என்பதற்காகவும், என்னுடைய இந்த போராட்ட பயணத்தை தொடர்வேன். எனக்காக என்னுடன் துணையாக நின்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்…” என்று நடிகை பாவனா முதல்முறையாக பகிரங்கமாக தன் அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார்.









