“பாக்யராஜ் கூடுதலாக வாங்கிக் கொடுத்த சம்பளம்..” – பாரதிராஜா சொன்ன தகவல்..!

“பாக்யராஜ் கூடுதலாக வாங்கிக் கொடுத்த சம்பளம்..” – பாரதிராஜா சொன்ன தகவல்..!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ‘ஸ்டோன் பென்ச் கிரியேஷன்’ என்கிற தலைப்பில் ஒரு புதிய நிறுவனத்தைத் துவக்கியுள்ளார். இதில் குறும்பட வெளியீடு, நடிகர் நடிகைகளுக்கான கேஸ்டிங் உதவி, திரைப்படத் தயாரிப்பு என்று பல்வேறு வகையான பணிகளைச் செய்யப் போகிறாராம்..!

இதன் துவக்க விழா நேற்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று நிறுவனத்தைத் துவக்கி வைத்து வாழ்த்தினார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

Stone Bench Creations Launch Event Stills (18)

அவர் பேசும்போது, “நான் இந்தத் தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தபோது எனக்கு சினிமா எடுக்க மட்டும்தான் தெரியும். வியாபாரம் பண்ணத் தெரியாது. சம்பளம் பேசத் தெரியாது.

முதல் இரண்டு படங்களை ஹிட் கொடுத்துவிட்டு மூன்றாவது படத்திற்கு என்ன சம்பளம் பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. நான் இயக்கிய முதல் படத்துக்கு சம்பளம் கிடைக்கவில்லை. இரண்டாவது படத்துக்கு ஒரு காரை கொடுத்து, பாதி தவணையை நீயே கட்டிக் கொள் என்று சொல்லிவிட்டார்கள்.

மூன்றாவது படமான ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்திற்கு பத்தாயிரம் வாங்கலாமா..? இருபதாயிரம் கேட்கலாமா என்கிற குழப்பத்தில் இருந்தேன். ஒரு புதிய தயாரிப்பாளர் வந்தார். செட்டியார். அவரிடம் தயங்கித் தயங்கி, ‘என்னை வேறு சில கம்பெனிகளில் படம் இயக்க அழைக்கிறார்கள். இருந்தாலும் நீங்கள் 15000 சம்பளமாக கொடுத்தால் உங்களுக்கு படம் இயக்கித் தருகிறேன்’னு கேட்டேன். ‘கொடுக்கிறேன்..’ என்று அவரும் சொல்லிவிட்டார்.

சந்தோஷமாக எனது அறைக்குத் திரும்பி அறையில் இருந்த உதவி இயக்குநர்களிடத்தில் இதைச் சொன்னேன். இதில் ஒரு சிக்கல் இருந்தது. என்னன்னா, இந்த 15000 ரூபாய் சம்பளத்தில்தான் எனது உதவி இயக்குநர்களுக்கும் நான் சம்பளம் தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சொல்லிவிட்டார். இருப்பதில் இவர்களுக்கும் கொடுத்துவிட்டால், மிச்சம் எனக்கு எவ்வளவு இருக்கும் என்று முதலில் நான் யோசிக்கவே இல்லை..

அறையில் இருந்த எனது அஸிஸ்டெண்ட் பாக்யராஜிடம் இதைச்  சொன்னபோது, தலையில் அடிச்சுக்கிட்டான். ‘இப்படியா ஸார் சம்பளம் கேட்குறது..? கூட கேக்க வேண்டியதுதானே?’ என்றான். ‘எனக்கு தோணியிருந்தா, தைரியம் இருந்தா கேட்டிருக்க மாட்டேனா..?’ன்னு சொன்னேன். ‘இங்கயே இருங்க. நான் போய் பேசி வாங்கிட்டு வரேன்..’ என்று சொல்லிட்டு தயாரிப்பாளரிடம் போன பாக்யராஜ், அவரிடம் பேசி ‘அவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்துக்கிட்டிருக்கு. உங்களுக்குத்தான் படம் பண்ணனும்னு இருக்காரு. கூட கொடுத்தால்தான் நல்லாயிருக்கும்’னு சொல்லி அந்தச் சம்பளத்தை முப்பதாயிரமா உயர்த்தி வாங்கிட்டு வந்தான்..

இப்போதும் நான் வியாபாரம் செய்யத் தெரியாதவனாத்தான் இருக்கேன். அந்தக் காலத்தில் நடிகர்களுக்கும் இந்த அளவுக்குச் சம்பளம் கிடையாது. 16 வயதினிலே படத்தில் ரஜினிகாந்திற்கு 3 ஆயிரம் சம்பளம் பேசி, 2 ஆயிரத்து 500-தான் கொடுத்தோம். இன்னமும் 500 ரூபாய் கொடுக்கவில்லை..

ஆனால் இன்றைக்கு சினிமாவுலகத்துக்கு வரும் இளைஞர்கள், ஒன்றிரண்டு படங்களில் நடித்தவுடனேயே, இயக்கியவுடனேயே வாழ்க்கையில் செட்டிலாகிவிடும் அளவுக்கு புத்திசாலிகளாக இருக்கிறார்கள். இப்படித்தான் இருக்க வேண்டும்.. காலத்திற்கேற்ப அவர்களும் தங்களை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்..” என்றார்.

Our Score