“இங்க எவனும் சோத்துல உப்பு போட்டு திங்குறதில்ல..!” – நடிகர் சங்கத்தின் மீது பாயும் பாரதிராஜா..!

“இங்க எவனும் சோத்துல உப்பு போட்டு திங்குறதில்ல..!” – நடிகர் சங்கத்தின் மீது பாயும் பாரதிராஜா..!

‘பெப்ஸி’யின் பெயர் ‘பெப்டா’ என்று மாற்றப்பட இருப்பதை இயக்குநர் அமீர், சேரனின் C2H Network அறிமுக விழா மேடையில் சொ்ல்லிவிட்டுச் செல்ல…. பின்னால் பேச வந்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அதை வழிமொழிந்து அமீரை மிகவும் பாராட்டினார். கூடவே “நடிகர் சங்கத்தின் பெயரையும் உடனடியாக மாற்ற வேண்டும்..” என்று கோரிக்கை விடுத்தார்.

பாரதிராஜாவின் பேச்சில் இருந்து சில பகுதிகள்..!

“இந்த மேடையில் பேசும்போது நல்ல செய்தி சொன்னான் அமீர். பெப்ஸியின் பெயர் மாறப் போகுதுன்னு.. சீக்கிரமா ‘தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்’ வரணும். ‘தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் அமைப்புன்னு பேர் இருக்கிறவரை நான் உங்களை அங்கீகரிக்கப் போறதில்ல… உங்களை வேலைக்கு எடுக்கவும் போறதில்லே’ன்னு முன்னாடியே சொன்னேன்.  ‘என்னைக்கு தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் அமைப்புன்னு சொல்லுகிறாயோ, அன்னைக்குத்தான் உங்களை அங்கீகரிப்பேன்’னு அமீர்கிட்ட சொன்னேன். அது இவ்வளவு காலத்துக்கு அப்புறம் வந்துருக்கு. இன்னைக்கு மாத்துறதுக்கு உத்திரவாதம் கொடுத்துட்டான். அவனுக்கு என்னுடைய நன்றி.

எல்லாரும் ஒற்றுமையா இருந்தா எல்லாவற்றையும் உரிமையோட கேட்டு வாங்கலாம். ஆனா நம்மகிட்ட ஒற்றுமை இல்ல. இதுல வேற சில பேர் இந்த விழாவுக்கு வரலாமா? வேண்டாமான்னு போன் பண்ணி கேட்டாங்களாம். அப்புறம் என்ன இங்க இருக்கு..?

இப்படித்தான், ‘தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம்’ன்ற பெயரை ‘தமிழ்நாடு திரைப்பட நடிகர் சங்கம்’னு மாத்தச் சொல்லி பல வருஷமா போராடிக்கிட்டிருக்கேன். எத்தனை போராட்டம்தான் பண்ணுறது…? எத்தனை மேடைகள்லதான் கத்துறது..? இங்க எவனும் உப்பு போட்டு சோறு திங்கிறது இல்ல…! அவன்தான் ஒட்டும் வேணாம்.. உறவும் வேணாம்ன்னு பிரிச்சுட்டு தனித்தனியா போய்ட்டானே. அப்புறம் என்ன பெரிய தென்னிந்திய நடிகர் சங்கம்…? தமிழனான நீங்கெல்லாம் என்னைக்குடா முதுகெலும்போட நிக்கப் போறீங்க..?

பேர் மாத்துறதால என்ன ஆகிறப் போகுது..? நீ தெருவுக்கா வரப் போற..? நீ இங்க வரும்போது இருக்கிற சொத்தையெல்லாம் எடுத்துட்டா சென்னைக்கு வந்த..? வெறும் 300 ரூபாயோட வந்திருப்பே… நானே 310 ரூபாயோட சென்னைக்கு லாரில ஏறி வந்தவன்.. இதனால என்னத்தை இழக்கப் போற..?

சீக்கிரத்திலேயே இந்த நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் எல்லாம் தமிழ்நாடுங்கிற பேருக்கு கீழ வரணும். வந்தாகணும்.. அதுக்கு நாம ஒற்றுமையா இருக்கணும். இருந்தால்தான் இதையெல்லாம் சாதிக்க முடியும்.. நம்மகிட்ட ஒற்றுமையே இல்லை. ஏதாவது நல்ல விஷயத்துக்காச்சும் ஒண்ணு சேருங்க.. உங்ககிட்ட இருக்கற பிரச்சனையெல்லாம் ஓரங்கட்டிட்டு திரைத்துறைக்காக இணைஞ்சு பாடுபடுங்க…” என்றார்.

“தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம்’ என்ற இந்தப் பெயரை என் உயிர் உள்ளவரை மாற்ற விடமாட்டேன்…” என்று சபதம் மேற்கொண்டு கண்ணும், கருத்துமாக தென்னிந்திய நடிகர் சங்கத்தை கட்டி காப்பாற்றி வருகிறார் அண்ணன் ராதாரவி.. இதனாலேயே இவர்கள் இருவருக்குமிடையில் பல காலமாக பூசல்கள், கருத்து மோதல்கள் நடந்து வருகின்றன..

“இங்க எவனும் சோத்துல உப்பு போட்டு திங்கறதுல்ல..” என்ற பாரதிராஜாவின் இந்த கமெண்ட்டுக்கு விரைவில் ஏதாவது ஒரு மேடையில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர், இளைய நடிகவேள் ராதாரவி நிச்சயம் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கலாம்..!

Our Score