full screen background image

சித்ரா லட்சுமணனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்..!

சித்ரா லட்சுமணனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்..!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் பட்டறையில் வெளிவந்த தயாரிப்பாளர், இயக்குநர், நடிகரான சித்ரா லட்சுமணன் இன்றைக்கு படு பிஸியான நடிகராக கோடம்பாக்கத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நிஜத்தில் பத்திரிகை தொடர்பாளராக தன்னுடைய பணியை கோடம்பாக்கத்தில் துவங்கிய சித்ரா லட்சுமணன், தன்னுடைய காயத்ரி பிக்சர்ஸ் சார்பில் ‘மண்வாசனை’ படத்தை தயாரித்து தமிழ்ச் சினிமாவுலகில் தயாரிப்பாளராகவும் மாறினார். இதற்குப் பின்பு ‘ஜல்லிக்கட்டு’, ‘வாழ்க்கை’, ‘சின்னப்பதாஸ்’ போன்ற படங்களையும் தயாரித்தார். ‘சூரசம்ஹாரம்’, ‘பெரியதம்பி’, ‘சின்ன ராஜா’ ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

‘ஜப்பானில் கல்யாணராமன்’ படத்தில் நடிக்கத் துவங்கிய சித்ரா லட்சுமணன் இதுவரையில் 100-க்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டார்.. இத்தனை பிஸியிலும் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படத்தில் இவர் ஏற்றிருந்த வேடம், இவரது பெயரை கோடம்பாக்கத்தில் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது. இப்போதும் அதிகமான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான இவர் ஆரம்ப நாட்களில் கமல்ஹாசனுக்கு பி.ஆர்.ஓ.வாகவும் பணியாற்றியவர். அந்தக் காலக்கட்டத்தில் கமல்ஹாசனின் நடிப்பில் ‘சூரசம்ஹாரம்’ திரைப்படத்தை எழுதி இயக்கி தயாரித்த இவர், இப்போது ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் பி.ஆர்.ஓ.வாகவே நடிக்கிறாராம். இது நிச்சயம் யாருக்கும் கிடைத்திருக்காத வாய்ப்பு..

கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்டிரியா இயக்குனர் கே.விஸ்வநாத், கே.பாலசந்தர் ஆகியோரோடு இவர் நடித்த காட்சிகள் சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டுள்ளன.

மேலும், சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘அரண்மனை’ திரைப்படத்தில் அந்த அரண்மனைக்கு சொந்தக்காரராக ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார். ஜெகதீஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் – நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘நண்பேண்டா’ படத்தில் சந்தானம் பணியாற்றும் ஓட்டலின் முதலாளியாகவும் நடித்துள்ளார். சேது – சந்தானம் நடிக்க சாய் கோகுல் ராம்னாத் இயக்கும் ‘வாலிப ராஜா’ திரைப்படத்தில் சேதுவின் தந்தையாக நடிக்கும் இவர் அப்படத்தில் ஏற்றுள்ள பாத்திரத்தின் பெயரும் சித்ராதானாம்.

இப்போதெல்லாம் ஹீரோ, ஹீரோயின்கள் போட்டியைவிடவும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்கள்தான் அதிகம் போட்டியிட்டு நடித்து வருகின்றனர்.. அதில் முதல் வரிசை நடிகராக திகழும் சித்ரா லட்சுமணனை மென்மேலும் உயர  வாழ்த்துவோம்..!

Our Score