“தமிழகத்தில் நம்பர் ஒன் ஸ்டார் விஜய்தான் என்பதால், ‘வாரிசு’ படத்திற்கு கூடுதல் தியேட்டர்களை ஒதுக்க வேண்டும். இது தொடர்பாக, ‘துணிவு படத்தின் வெளியீட்டாளரான ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதியை சந்திக்க போகிறேன்” என்று ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ பேட்டியில் சொன்னது அஜித் ரசிகர்களிடமும், தமிழ் சினிமா வட்டாரத்திலும் ஹாட் டாபிக்காக மாறியது.
இது தொடர்பாக திரையரங்க உரிமையாளரான திருப்பூர் சுப்ரமணியம் அளித்த பேட்டியில், “அந்தத் தயாரிப்பாளர் தில் ராஜு ஹைதராபாத்தில் உட்கார்ந்துக்கிட்டு என்ன அர்த்தத்தில் இப்படி பேசுறாருன்னு எனக்கு புரியலை. ரெட் ஜெயன்ட் நிறுவனம் ‘துணிவு’ படத்தை ரிலீஸ் செஞ்சாலும் தமிழ்நாட்டில் இன்னும் ஒரு தியேட்டரைக்கூட கன்ஃபார்ம் செய்யவில்லைலை. ஒரு யூகத்தில்தான், தில் ராஜு இப்படி பேசுகிறார்.
ஒருவேளை ரெட் ஜெயன்ட் தியேட்டர்களை கன்ஃபார்ம் செய்து, தியேட்டர்களை பிளாக் செய்து வைத்திருந்தால், அவர் இப்படி பேசுவதில் நியாயம் இருக்கிறது. ஆனால் இப்போதுவரையிலும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் ‘துணிவு’ படத்துக்காகத் தியேட்டர்களை ஒதுக்கும்படி எங்களிடம் கேட்கவே இல்லை.
தியேட்டர் ஓனர்களைப் பொறுத்தவரை விஜய், அஜித் இருவரின் படங்களுக்கும் எந்தவிதமான வித்தியாசத்தையும் காட்ட மாட்டார்கள். இருவருமே வெற்றி கொடுக்கக் கூடிய முன்னணி நடிகர்கள். எங்களுக்குத் ‘துணிவு’தான் வேணும், ‘வாரிசு’ வேண்டாம் என்ற எந்த பாகுபாடும் எங்களிடம் கிடையாது.
ரெட் ஜெயன்ட் நிறுவனம் புக்கிங் கொடுத்தால்தான், தங்களுக்கு எந்தப் படம் வேண்டும் என்பதை தியேட்டர் ஓனர்கள் முடிவு செய்வார்கள். அதற்குள்ளாகவே, “எங்களுக்கு அதிக தியேட்டர்கள் வேண்டும்” என்று கேட்டால் எப்படி..?
அதேமாதிரி “விஜய்தான் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஸ்டார்” என்றும் தயாரிப்பாளர் தில் ராஜு சொல்லி இருக்கார். சினிமாவில் நம்பர் ஒன் ஸ்டார் என்பதெல்லாம் ஒரு யூகம்தான். இது காலத்துக்குக் காலம் மாறும். படம் நன்றாக இருந்தால் எந்த ஹீரோ நடித்திருந்தாலும் அது நிச்சயமாக வெற்றி பெறும்.
சமீபத்தில் தொடர்ச்சியாக அஜித், விஜய், கமல்ஹாசன் நடித்த படங்கள் வந்தது. இவற்றுடன் ஒப்பிடும்போது, ‘பொன்னியின் செல்வன்’ படம் வசூலை வாரிக் குவித்தது. அப்போ, இங்கே மிக முக்கியமானது கதைதானே..? அதிலும் கமல் நான்கு வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் ‘விக்ரம்’ வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அப்போ, விஜய், அஜித்தைவிட கமல்தான் நம்பர் ஒன் நடிகர் என்று சொல்லணும் இல்லையா.? அப்படி சொல்ல முடியுமா..?
எந்தப் படம் வெற்றி பெறுகிறதோ அந்தப் படத்தில் நடித்த ஹீரோதான் அப்போதைக்கு சூப்பர் ஹீரோ. மக்கள் நடிகர்களின் முகத்திற்காக மட்டும் தியேட்டருக்கு வருவது கிடையாது. படம் நல்லாயிருந்தால்தான் வருவார்கள். அப்படி, பார்த்தால் ‘பீஸ்ட்’ படமே தோல்விதான்.
நிலைமை இப்படி இருக்கும்போது இந்த தில் ராஜு ஆந்திராவில் உட்கார்ந்து கொண்டு தில்லா, ‘எனக்குத்தான் அதிக தியேட்டர் கொடுக்க வேண்டும். விஜய்தான் நம்பர் ஒன் ஹீரோ’ அப்படீன்னு சொல்றதெல்லாம் வெறும் காமெடிதான்..” என்றார் திருப்பூர் சுப்ரமணியம்.










