full screen background image

உண்மையாகவே பயமுறுத்த வரும் பேய் படம் ‘பயம் ஒரு பயணம்’..!

உண்மையாகவே பயமுறுத்த வரும் பேய் படம் ‘பயம் ஒரு பயணம்’..!

Octo spider என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் எஸ் துரை மற்றும் எஸ் சண்முகம் தயாரிக்கும் புதிய தமிழ்த் திரைப்படம்  ‘பயம் ஒரு பயணம்.’

இந்தப் படத்தில் ‘உன்னை போல் ஒருவன்’ பரத், விசாகா சிங், மீனாட்சி தீட்சித், ஜான் விஜய், ராம்தாஸ், சிங்கம்புலி, ஊர்வசி, ஞானவேல், யோகி பாபு, ‘லொள்ளு சபா’ மனோகர் என்று ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஒளிப்பதிவு – ஐ.ஆண்ட்ரூ, இசை – ஒய்.ஆர்.பிரசாத், படத் தொகுப்பு – எல்.வி.கே.தாஸ் டேனியல், கலை இயக்கம் – எம்.ஆர். கார்த்திக் ராஜ்குமார், நடன இயக்குநர் – சங்கர் ஐயா, சண்டை பயிற்சி – ஸ்டன்னர் சாம், பாடல்கள் – மோகன்ராஜ், அமுதவன், பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திரா, தயாரிப்பு – எஸ்.துரை, எஸ்.சண்முகம், எழுத்து, இயக்கம் –  மணிஷர்மா.

இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் நடந்து முடிந்தது.

இந்தப் படம் பற்றி பேசிய இயக்குநர் மணிஷர்மா, “பேய் படங்கள் எண்ணிக்கையில் அடங்காத அளவுக்கு வெளி வந்துள்ளதையும், வெளிவர உள்ளதையும் நான் அறிவேன். ‘பயம், ஒரு பயணம்’ மற்ற பேய் படங்களில் இருந்து நிச்சயம் மாறுபட்டதாக இருக்கும்.

பேய் படங்கள் என்றப் பெயரில்  எடுக்கப்படும் படங்கள் நகைச்சுவை படங்களாகவோ, அல்லது செண்டிமெண்ட் படமாகவோதான் இருக்கும்.

ஆனால் இந்தப் படம் முழுக்க, முழுக்க பயமுறுத்தும். பயத்தை பிரதானமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் வெளி வந்த ‘தி எக்சோர்சிஸ்ட்’, ‘தி ஓமன்’, ‘Evil death’, ‘conjuring’ ஆகிய படங்களைப் போலவே இந்தப் படமும் முழுக்க முழுக்க பயமுறுத்தும் பேய் படமாகவே இருக்கும்.

இதய மருத்துவரும், ‘உன்னை போல் ஒருவன்’ படத்தில் ஒரு பிரதான கதாபாத்திரத்தில் நடித்தவருமான பரத் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பேயாக நடிக்கும் கதாநாயகி பாத்திரத்துக்கு பலரை சிந்தித்தோம்.. அவர்களில் சிலரை சந்தித்தோம். விசாகா சிங்கை பார்க்கும்வரை… கதை கேட்ட மாத்திரத்திலே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இவ்வளவு  அழகான பேய் இருக்குமா என்பதிலும் எங்களுக்கு சந்தேகம்தான். அந்த அளவுக்கு அவர் அழகு. பாத்திரத்துக்கு ஏற்ப தன்னை அவர் அகோரப்படுத்த ஒப்புக் கொண்டதே தொழில் மீது அவருக்கு உள்ள மரியாதையை புரிய வைத்தது.

மூணாறில் இடைவிடாத 20 நாட்கள் இரவு பகல் என்றுப் பாராமல், அட்டை கடி, விஷப் பூச்சி, மழை என்று எல்லா சவாலையும்  எதிர்கொண்டு அவர் நடித்தது அவர் மேல் உள்ள மரியாதையை கூட்டியது.

தனது தோற்றத்தையும், படப்பிடிப்பின்போது  இருந்த அசாதாரண சவாலையும் அவர் மேற்கொண்ட விதத்தை கண்டு படப்பிடிப்பு குழுவில் இருந்த அனைவரும் அசந்து போனோம். வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கு அவரைப் போன்ற நடிகைகள் கிடைப்பது அதிர்ஷ்டமே  என்பேன்.

ஊர்வசி மேடம் போன்ற வாழும் சாதனையாளருடன்  பணியாற்றுவது எங்களைப் போன்ற புதிய கலைஞர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் எனலாம்.

‘பயம் ஒரு பயணம்’ படத்தின் மிக பெரிய பலமே படத்தின் இசைதான் என்று கூறலாம். புதிய இசை அமைப்பாளர் ஒய் .ஆர். பிரசாத் பின்னணியில் மட்டுமின்றி, பாடல்களிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார். பொதுவாகவே பேய் படங்கள் என்றாலே பின்னணி இசைக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். ஆனால் ‘பயம் ஒரு பயணம்’ படத்தின் பாடல்கள் நிச்சயம் ஹிட் ஆகும்.

என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு நான் காலம் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். படத்தை மேம்படுத்த ஒரு இயக்குநராக நான் எதைக் கேட்டாலும் அவர்கள் அதைத் தர தயங்கியதே இல்லை. ஒரு புதிய இயக்குநரான எனக்கு இதைவிட வேறென்ன வேண்டும்..?” என்று உவகையோடு வினவுகிறார்.

Our Score