full screen background image

‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ இந்திப் படத்தை வெளியிட நிரந்தரத் தடை..!

‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ இந்திப் படத்தை வெளியிட நிரந்தரத் தடை..!

‘நான்தான் ரஜினிகாந்த்’ என்ற பெயரில் உருவான இந்தி படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற இந்தி படத்தை ஃபைசல் சயீப் என்பவர் இயக்கியுள்ளார். இதில் ‘பொய்’, ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பில்லா-2′, ‘வில்லு’ ஆகிய தமிழ்ப் படங்களில் வில்லனாக நடித்த ஆதித்ய மேனன் ஹீரோவாக நடித்திருக்கிறார். கவிதா ராதேஷ்யாம் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

படத்தில் நாயகனுக்கு பெயர் ‘கில்லர் ரஜினிகாந்த் ராவ்’ என்பதாம்.. பொறுக்கித்தனம், கிறுக்குத்தனம்மிக்க சி.பி.ஐ. அதிகாரி வேடமாம் அவருக்கு. ரஜினியின் இமேஜைக் கெடுக்கும் அத்தனை விஷயங்களையும் படத்தில் காட்சிகளாக வைத்துள்ளார்களாம்.

 இது பற்றி கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தை திரையிடுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

தன்னுடைய மனுவில், “இந்திய சினிமா துறையில் புகழ் பெற்ற, முன்னணி நடிகராக உள்ளேன். என்னுடைய சிறந்த நடிப்பு, இணையற்ற நடத்தை, வசன உச்சரிப்பு, ‘ஸ்டைல்’, கடின உழைப்பு உள்ளிட்ட சிறப்பு அம்சங்களால் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்து, ‘சூப்பர் ஸ்டார்’ என்று பலரால் அழைக்கும் அளவுக்கு முன்னேறி உள்ளேன்.

எனக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால், என்னுடைய பெயர், என்னுடைய உருவ அமைப்பு, ஓவியம், வசன உச்சரிப்பு உள்ளிட்டவைகளை யாராவது தவறாக பயன்படுத்தினால், அது எனக்கு மிகப் பெரிய தீங்கை விளைவிக்கும். பொதுமக்கள் மத்தியில் எனக்குள்ள நன்மதிப்புக்கு களங்கம் ஏற்படும்.

இந்த நிலையில், மும்பையில் உள்ள ‘வர்ஷா புரடக்ஷன்‘ என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ (நான்தான் ரஜினிகாந்த்) என்ற பெயரில் இந்தி படத்தை தயாரித்து வருகிறது. இதற்காக என்னிடம் எந்தவித முன் அனுமதியினையும் அந்நிறுவனம் பெறவில்லை.

இந்த படத்தில் என்னை போன்ற உருவ அமைப்புள்ள நடிகரை வைத்து என்னைப் போலவே ‘ஸ்டைலான’ வசனம் பேசி, என் நடிப்பை போல் நடித்து, எனக்கு உள்ள புகழை சீர்குலைக்கவேண்டும் என்ற உள்நோக்கத்துடனும், என் பெயரை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.

எனவே, ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்..” என்று கோரியிருந்தார் ரஜினி.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.தமிழ்வாணன், ‘நான்தான் ரஜினிகாந்த’ என்ற படத்துக்கு இடைக்கால தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கிற்கு வர்ஷா புரோடக்ஷன் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வர்ஷா புரோடக்ஷன் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், “மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற தலைப்பில் எடுக்கப்படும் படம், ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படம் இல்லை. இந்த படத்தில் ரஜினிகாந்தை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ‘ரஜினிகாந்த்’ என்ற பெயர் காப்புரிமை பெற்ற பெயரும் இல்லை. அந்த பெயர் யாருக்கும் சொந்தமானதும் கிடையாது. மேலும், மனுதாரர் ரஜினிகாந்த்தை அவதூறாக இந்த படத்தில் எந்த இடத்திலும் சித்தரிக்கவில்லை.

மேலும், இந்த வழக்கு தொடர்வதற்கு முன்பு எனக்கு மனுதாரர் எந்த ஒரு வக்கீல் நோட்டீசு எதுவும் அனுப்பவில்லை. மேலும், இந்த படத்தை நாங்கள் தயாரிக்கும்போதே அது தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, படம் வெளியாகும் கடைசி நேரத்தில் இங்கு வழக்கை தொடர்ந்து, எங்களது படத்துக்கு ரஜினிகாந்த் தடை பெற்றுள்ளார். இது நியாயமற்றது.

மேலும், தன்னை அவதூறாக சித்தரித்துள்ளனர், அதற்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று வழக்கு தொடர்ந்த பின்னர், எங்களது படத்தை வெளியிட தடை விதிக்க தேவையில்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும். எங்கள் படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்..” என்று சொல்லியிருந்தார்கள்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில் “சுப்ரீம் கோர்ட்டு மற்றும் மும்பை ஐகோர்ட்டு பல்வேறு வழக்குகளில் பிறப்பித்துள்ள தீர்ப்புகளின்படி, மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவரது பெயரை பயன்படுத்தும்போது, அதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நபரிடம் அனுமதி பெற வேண்டும் என்று கூறியுள்ளது.  மேலும், ஒரு பிரபலத்தின் பெயரை பயன்படுத்தி ஒரு காரியத்தை செய்யும்போது, அதை பார்க்கும் பொதுமக்களுக்கு, அந்த பிரபலத்தின் நினைவுதான் வரும்.

இந்த வழக்கில், பிரபல நடிகர் ரஜினிகாந்த் பெயரை எதிர்மனுதாரர் தன் படத்துக்கு அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளார். அந்த படத்தின் பெயரை பார்க்கும்போது, அது ரஜினிகாந்தைத்தான் குறிக்கும். எனவே இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்ததில், இந்த ஐகோர்ட்டு ஏற்கனவே ‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற படத்துக்கு விதித்துள்ள இடைக்கால தடையை, நிரந்தர தடையாக மாற்றி உத்தரவிடுகிறது..” என்று தீர்ப்பளித்தார்.

எதிர்த் தரப்பினர் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்குச் செல்லவிருக்கிறார்களாம்.!

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவெனில் இந்த ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ படத்தில் ‘ரஜினிகாந்த்’ என்ற ஹீரோ கேரக்டரில் நடித்திருப்பவர் தமிழ் நடிகர் ஆதித்ய மேனன். 

இவரை தமிழில் நடிகராக அறிமுகப்படுத்தியவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் குருவான ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தர்தான். ‘பொய்’ படத்தில்தான் இந்த ஆதித்ய மேனன் முதன்முறையாக தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score