full screen background image

“பக்ரீத்’ போன்று எந்த படமும் வந்ததில்லை. இனியும் வராது” – நாயகன் விக்ராந்தின் பேச்சு..!

“பக்ரீத்’ போன்று எந்த படமும் வந்ததில்லை. இனியும் வராது” – நாயகன் விக்ராந்தின் பேச்சு..!

எம்-10 புரொடக்‌ஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’.

இந்தப் படத்தில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் ரோகித் பதாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் ஒளிப்பதிவும் செய்திருக்கிறார் ஜெகதீசன் சுபு.

Team (1)

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மதியம் பிரசாத் பிரிவியூ தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் முருகராஜ், இயக்குநர் ஜெகதீசன் சுபு, நாயகன் விக்ராந்த், நாயகி வசுந்தரா, நடிகர் ரோகிப் பதாக், மோக்லி, பேபி ஸ்ரூத்தீகா, பாடலாசிரியர்கள் ஞானகரவேல், மணிஅமுதவன், கலை இயக்குநர் மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நாயகன் விக்ராந்த் பேசும்போது, ‘நான் சினிமா உலகிற்கு வந்து 11 வருடம் ஆகுது. ஆனால் இந்த மேடை எனக்கு ரொம்ப புதுசு. இப்போது பெரிய நம்பிக்கையோடு நிற்கிறேன். இந்தப் படம் அந்த தைரியத்தைக் கொடுத்து இருக்கிறது. கண்டிப்பாக இந்தப் படம் போல ஒருபடம் இதுவரை வந்ததில்லை. இனியும் வராது.

இயக்குநர் ஜெகதீசன் அவர்களோடு மீண்டும் பணியாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன். தயாரிப்பாளர் முருகராஜ் அண்ணன்தான் இந்தப் படத்தை பெரிதாக கொண்டு வர வேண்டும் என்றார். இசையமைப்பாளர் இமான் சார், படத் தொகுப்பாளர் ரூபன் போன்றவர்கள் இந்தப் படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை செய்தார்கள்.

vikranth (3) 

உண்மையிலேயே தயாரிப்பாளருக்கும், ஒட்டகத்திற்கும்தான் மிகப் பெரிய நன்றியைச் சொல்லணும்.  தயாரிப்பாளர் முருகராஜ் அண்ணனை எனக்கு 13 வருடமாக தெரியும். இந்தக் கதை மீது அவருக்கு மிகப் பெரிய நம்பிக்கை இருந்தது. இந்தப் படத்தில் வரும் ஒட்டகத்தை சென்னைக்கு கொண்டு வருவதற்கு அவ்வளவு சிரமப்பட்டார்.

ஓட்டகம் மீது நிறைய பஞ்சாயத்து இருக்கு. அந்த ஒட்டகத்தை அனுமதி வாங்கி கொண்டு வர 8 மாதங்கள் ஆகியது. குட்டி பெற்றோர்களைப் பிரிந்து தனியாக இருக்காது என்று சொல்லிவிட்டார்கள். எனவே, ஒட்டகத்தின் தாய், தந்தையையும் சேர்த்தே அழைத்து வர வேண்டியிருந்தது.

ராஜஸ்தானில் இருந்து வரும் வழியில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒட்டகம் நல்ல உடல் நிலையுடன் இருக்கிறது என்று சர்டிபிகேட் வாங்கிய பின்புதான் டிராவல் செய்ய முடிந்தது.

movie stills (2)

ஒட்டகத்திற்கு பயிற்சி கொடுத்து, அதனுடன் நாங்கள் பழக மேலும் ஒரு மாதம் ஆகியது. மேலும் அந்த ஒட்டகத்தை 100 நாளில் ஒப்படைக்க வேண்டும் என்ற டெட்லைன் வேறு இருந்தது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஒட்டகத்தை அழைத்து சென்று படப்பிடிப்பு நடத்தினோம். வானிலை, மழை என பல பஞ்சாயத்து இருந்தது.

இப்படத்தில் ஒரு கிராபிக்ஸ் காட்சிகள்கூட இல்லை. படத்தைப் பார்த்த அனைவருமே பெரிதாகப் பாராட்டி இருக்கிறார்கள். நிச்சயம் இந்த நல்ல படத்தை பத்திரிகையாளர்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன்…” என்றார்.

Vasundhra (2)

நடிகை வசுந்தரா பேசும்போது, “நல்ல படங்களுக்கு பத்திரிகையாளர்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள். மிகச் சிறந்த படமாக பக்ரீத் வந்திருக்கிறது. இது போன்ற ஒரு அனுபவம் எந்தப் படத்திலும் எனக்கு கிடைத்தது இல்லை. டி.இமான் சாரின் இசை மிக அற்புதமாக இருக்கிறது. இயக்குநர் ஜெகதீசன் சாருடன் தொடர்ந்து வேலை பண்ண வேண்டும் என்று எல்லா நடிகர்களுக்கும் தோன்றும். விக்ராந்த் மிகச் சிறப்பான நடிகர். நிச்சயம் படம் உங்களை அழ வைக்கும்…” என்றார்.

Music Director Imman

இசையமைப்பாளர் டி.இமான் பேசும்போது, “இந்தப் படத்தை நான் ஒப்புக் கொள்ள முதல் காரணம் தயாரிப்பாளர் முருகராஜ்தான். அவர் மிக நல்ல மனிதர். இந்தப் படம் ரொம்ப அற்புதமான ஒன்லைன். அதை இயக்குநர் சொல்லும்போதே ரொம்ப நல்லா இருந்தது.

இந்தப் படத்தில் நடித்துள்ள விக்ராந்த் வசுந்தரா, குட்டிப் பொண்ணு என அனைவரும் அந்தந்த கேரக்டர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். படத்தில் வேலை செய்த அனைவருமே சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார்கள். இன்று சக மனிதர்கள் மீதே அன்பு செலுத்தாதபோது மிருகம் மீதான அன்பை வெளிப்படுத்தும் படமாக இது வந்திருக்கிறது.

அதுபோல் இப்படத்தில் பாடல் வேறு, பின்னணி இசை வேறு என்று பிரித்தறியாத அளவில் இசை அமைத்துள்ளேன். விக்ராந்த்துக்கு இந்த ‘பக்ரீத்’ படம் பெரிய அடையாளமாக இருக்கும்..” என்றார்.

Director Jagathesan Subu

இயக்குநர் ஜெகதீசன் சுபு பேசும்போது, “எனக்கு இது முதல் மேடை. தயாரிப்பாளர் இப்படத்தை ஒத்துக்கொண்ட பின் ஒரு சின்னப் படமாக எடுக்கலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் படம் படிப்படியாக வளர்ந்தது. படத் தொகுப்பாளர் ரூபன் சார் இந்தப் படத்தின் கதையை கேட்ட உடனேயே ‘நான் செய்கிறேன்’ என்றார்.

அதேபோல்தான் இமான் ஸாரும். நான் அவரின் மிகப் பெரிய ரசிகன். அவர் இந்தப் படத்திற்குள் வருவார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. கதையைக் கேட்டதும் இமான் சார், தயாரிப்பாளரிடம் ‘இப்படியான கதைகள் எல்லாம் பண்ணுவீர்களா..?’ என்று கேட்டார். அப்பொழுதே, இந்தப் படம் பெரிய படமாக வளர ஆரம்பித்தது.

இந்தக் கதை எழுதும்போது எனக்கு விக்ராந்த் நினைவில் வரவேயில்லை. ஆனால் அவர், ‘இந்தப் படத்திற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்’ என்றார். மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். வசுந்தராவின் வாய்ஸ் எனக்கு பிடிக்கும். அன்பைக்கூட அவர் சத்தமாகத்தான் வெளிப்படுத்துவார்.

இந்தப் படத்தின் பாடல்களை வெட்டி எடுக்க முடியாத அளவில் பாடல்கள் படத்தோடு ஒன்றியுள்ளது. பாடலாசிரியர்கள் சிறப்பாக ஒத்துழைத்து உள்ளார்கள். மேலும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி…” என்றார்.

Our Score