‘பைரவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானதன் காரணம் என்ன..?

‘பைரவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானதன் காரணம் என்ன..?

பி.நாகி ரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில்  பி.பாரதி ரெட்டி, இளைய தளபதி விஜய் நடிக்கும் ‘பைரவா’ படத்தை ஏராளமான பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறார். 

இப்படத்தில் இளைய தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.  இவர்களுடன் ஜெகபதிபாபு, சதீஷ், ஒய்.ஜி.மகேந்திரன், தம்பி ராமைய்யா, டேனியல் பாலாஜி, மைம் கோபி, ‘ஆடுகளம்’ நரேன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – எம்.சுகுமார், எடிட்டிங் – பிரவின் கே.எல்., இசை – சந்தோஷ் நாராயணன், பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, கலை இயக்குநர் – எம்.பிரபாகரன்,  நடனம் – தினேஷ், சண்டைப் பயிற்சி – அனல் அரசு, நிர்வாகத் தயாரிப்பு – ஏ.ரவிச்சந்திரன், எம்.குமரன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பரதன்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த ‘பைரவா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மிகச் சிறப்பான முறையில் படுவிமரிசையாக வெளியிட வேண்டும் என்ற எண்ணத்தில் விஜயா புரொடெக்சன்ஸ் நிறுவனம் தீவிரமாய் திட்டமிட்டு செயலாற்றி வந்த நிலையில், தற்போது ‘பைரவா’ படத்தின் இசை வெளியீட்டு விழா கைவிடப்பட்டுள்ளது.

இது பற்றி ‘பைரவா’ படத்தின் தயாரிப்பாளர்கள் பி.வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி.பாரதி ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பைரவா’  இசை வெளியீட்டு விழாவை படு விமரிசையாக நடத்த எண்ணியிருந்தோம். இந்நிலையில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின்  எதிர்பாராத இழப்பால்  இவ்விழா கைவிடப்பட்டுள்ளது.

காரணம், எங்களுடைய விஜயா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘நம்நாடு’ திரைப்படத்தில் ஜெயலலிதா நடித்திருந்தார். அதோடு மட்டுமல்லாமல், எங்களுடைய குடும்பத்தில் ஒருவராகவே ஜெயலலிதாவை நாங்கள் மதித்து வந்தோம். அவருடைய இழப்பின் காரணமாக எங்களுடைய தயாரிப்பில் உருவாகும் ‘பைரவா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை தற்போது ரத்து செய்துவிட்டோம்.

அதோடு, இளைய தளபதி விஜய் அவர்களும் மேற்கண்ட காரணத்திற்காக இசை வெளியீட்டை பிரமாண்ட விழாவாக நடத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார். அதனால், எளிமையான முறையில் வரும் டிசம்பர் 23-ம் தேதி பாடல்களை உலகெங்கும் நேரடியாக வெளியிட திட்டமிட்டுள்ளோம்..” என்று கூறியுள்ளனர்.

Our Score