பிரபல கன்னட நடிகையும், கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியுமான ராதிகா குமாரசாமி என்கிற குட்டி ராதிகா தற்போது ‘பைரா தேவி’ என்கிற படத்தில் அகோரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பதுடன் படத்தையும் தானே தயாரிக்கிறார் ராதிகா குமாரசாமி.
இந்தப் படத்தில் குட்டி ராதிகாவுடன், ரமேஷ் அரவிந்த், ரங்காயன ராஜூ, ரவிசங்கர் (பொம்மலி), ஸ்கந்தா அசோக், அனு முகர்ஜி, மாளவிகா அவினாஷ் மற்றும் சுசித்ரா பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
J.S.வாலி இந்தப் படத்தின் ஒளிப்பதிவை கையாள, கே.கே.செந்தில் பிரசாத் இசையமைக்கிறார். படத் தொகுப்பை C.ரவிச்சந்திரனும், சண்டைக் காட்சிகளை K.ரவிவர்மாவும் கவனிக்கின்றனர். நடன இயக்கத்தை மோகனும், கலை இயக்கத்தை மோகன் B.கெரேவும் கவனிக்கின்றனர்.
தெலுங்கு பாடல் வரிகளை ராமா ஜோகய்யா சாஸ்திரி மற்றும் ஸ்ரீ ஜெய்யும் தமிழ் பாடல் வரிகளை தாமரை மற்றும் ஸ்ரீ ஜெய் ஆகியோரும் எழுதியுள்ளனர்.
இயக்குநர் ஸ்ரீஜெய் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்குகிறார்.
ஒரு பெண் அகோரி பற்றிய கதையம்சத்துடன் இந்திய சினிமாவிலேயே உருவாகும் முதல் படம் இதுதான்.
குட்டி ராதிகாவின் பிறந்த நாளை முன்னிட்டு படக் குழுவினர் அந்தப் படத்தின் டீசரை நேற்று வெளியிட்டுள்ளனர்.
இந்த டீசர், ‘பைரா தேவி’ என்கிற டைட்டில் கதாப்பாத்திரத்தில் அகோரியாக நடித்துள்ள ராதிகா குமாரசாமியை அறிமுகப்படுத்துகிறது. பல அகோரிக்களுடன் சேர்ந்து ஒரு இறந்த உடலின் தலைப் பக்கம் அமர்ந்து ராதிகா குமாரசாமி, தாந்த்ரீக பூஜை செய்வது போல இந்த டீசரின் வீடியோ துவங்குகிறது.
அதன் பிறகு ஒரு ரவுடி கும்பலால் தாக்கப்பட்ட ஒரு பெண்ணை காப்பாற்ற முயற்சிக்கிறார் குட்டி ராதிகா. சீனியர் நடிகரான ரமேஷ் அரவிந்த்தையும் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்துகிறது இந்த டீசர்.
டீசர் நிஜமாகவே சிலிர்க்கவைக்கும்விதமாக இருப்பதுடன், ராதிகாவும் அகோரி கதாபாத்திரத்தில் வியப்பை ஏற்படுத்துகிறார்.
வாரணாசி, காசி, ஹரித்துவார், ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த ‘பைரா தேவி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.









