எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபாலி’ படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமை 27 கோடிக்கு விற்பனை..!

எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபாலி’ படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமை 27 கோடிக்கு விற்பனை..!

தெலுங்கில் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வரும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் படமான ‘பாகுபாலி’யின் தமிழ் வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன இணைந்து 27 கோடி ரூபாய்க்கு வாங்கியிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

தெலுங்குலகத்திலேயே இதுவரையில் இல்லாத அளவுக்கு 200 கோடி பட்ஜெட்டையும் தாண்டிய நிலையில் தயாராகியுள்ள படம் ‘பாகுபாலி’. இதில் அனுஷ்கா, ராணா டக்குபதி, பிரபாஸ், சத்யராஜ், நாசர், தமன்னா மற்றும் பல முக்கிய நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். 

இந்தப் படம் தற்போது நேரடியாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் தயாராகி வருகிறது. மேலும் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்படவுள்ளது.

இந்தப் படத்தின் தமிழ் உரிமையைக் கைப்பற்ற மிகப் பெரிய போட்டிகள் நடந்துள்ளன. ராஜமெளலி இயக்கிய ‘நான் ஈ’ திரைப்படம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய வெற்றியை பெற்றதையடுத்து இந்தப் படத்தையும் கைப்பற்ற விநியோகஸ்தர்கள் முயன்றுள்ளனர். கடைசியாக 27 கோடி ரூபாய் என்கிற மிகப் பெரிய தொகைக்கு இது விற்பனையாகியிருக்கிறதாம்.

இதனை வெளிப்படையாக ஒத்துக் கொண்டிருக்கும் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா, “யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நான் இதனை வாங்கியிருக்கிறேன். இந்தப் படத்தின் 45 நிமிட காட்சிகளை நான் பார்த்தேன். இந்தப் படம் நிச்சயமாக தமிழில் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்கிற எதிர்பார்ப்பு அப்போதே எனக்குள் ஏற்பட்டுவிட்டது…” என்று நம்பிககையுடன் கூறியுள்ளார்.

ஒரு தெலுங்கு திரைப்படத்தின் தமிழ் உரிமை இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனையாகியிருப்பது இதுவே முதல் முறையாகும்..!

Our Score