இந்தப் படத்தை விமர்சன ரீதியிலும், வணிக ரீதியிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ராட்சசன்’ படத்தைத் தயாரித்த ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு தயாரித்திருக்கிறார்.
பிரபல மாடல் அழகி திவ்யா பாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பகவதி பெருமாள், யு டியூப் ‘நக்கலைட்ஸ்’ புகழ் அருண் குமார் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்திருக்கிறார். சான் லோகேஷ் படத் தொகுப்பை செய்ய, ஒளிப்பதிவினை தேனி ஈஸ்வர் செய்திருக்கிறார்.
இயக்குநர் சசியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சதீஷ் செல்வகுமார் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார்.
கோயமுத்தூரிலிருந்து பெங்களூருக்கு வேலை செய்ய வரும் இளைஞன் ஒருவன், தன் நண்பர்களின் வாழ்க்கை முறைகளால் பெரிதும் கவரப்படுகிறான். இந்த பாதிப்புகள் அவன் வாழ்க்கையை எவ்வாறு தடம் மாற்றுகின்றன என்பதை இக்கால இளைஞர்களின் மாச, மோசமான வாழ்க்கைக் களனில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சதீஷ் செல்வகுமார்.
கோவை பகுதியைச் சேர்ந்த கிராமத்தில் இருந்து பெங்களூருக்கு ஐ.டி. துறையில் வேலை பார்க்க வருகிறார் ‘டார்லிங்’ என்ற ஜி.வி.பிரகாஷ்.
வந்த இடத்தில் 10-க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் இணைந்து ஒரு அறையில் தங்குகிறார். எதைப் பற்றியும் கவலைப்படாத குணத்தைக் கொண்டவராக இருப்பதால் யாராலும் அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை. குடியை முழுமையாகக் கற்றுக் கொண்டிருக்கிறார் நாயகன்.
பிரகாஷின் நண்பன் ஒருவன் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணுடன் லிவ்விங் டூ கெதராக வாழ்ந்து வருவதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட பிரகாஷ் அதே வீட்டில் நாயகி திவ்ய பாரதியை பார்க்கிறார். பார்த்தவுடன் காதல் கொள்கிறார்.
திவ்ய பாரதியை பார்க்க வேண்டும் என்பதற்காகவே அதே வீட்டில் தானும் தங்கிக் கொள்வதாக நண்பனை நச்சரித்து ஒப்புக் கொள்ள வைக்கிறார். இடையில் நண்பனும், அவன் காதலியும் திடீரென்று மும்பைக்கு மாறுதலாகிச் சென்றுவிட இப்போது அந்த வீட்டில் நாயகியும், நாயகனும் மட்டும்தான்.
ஒரு சுபயோக சுப தினத்தில் நாயகனும், நாயகியும் படுக்கையில் இணைகிறார்கள். அதன் பிறகே காதல் உணர்வை வெளிக்காட்டுகிறார்கள். நாயகி கர்ப்பம் தரிக்கிறாள். நாயகன் அதைக் கலைக்கும்படி சொல்கிறார். நாயகி அதை ஏற்க மறுத்து தன் ஊருக்குச் செல்கிறாள்.
அங்கே அவளது அக்கா கணவன் மிகப் பெரிய கிரிமினல் வக்கீல். விஷயம் தெரிந்த வக்கீல் தனது கிரிமினல் மைண்டை பயன்படுத்தி நாயகனின் குடும்பத்தையே தூக்கி ஜெயிலில் வைக்க பிளான் செய்கிறார்.
இதன்படி நாயகனும், நாயகியும் திருமணமான தம்பதிகள் போலவும், வரதட்சணை பிரச்சினையால் நாயகன் நாயகியை அடித்துத் துன்புறுத்தி துரத்திவிட்டதாகவும் வழக்குப் பதிவு செய்கிறார்.
இந்தச் சூழ்ச்சியில் சிக்கிய நாயகனின் அம்மா, அக்கா, அண்ணன் மூவரும் சிறைக்கு செல்கிறார்கள். இப்போது நாயகன் வேறு வழியில்லாமல் நீதிமன்றத்திற்கு ஓடி வந்து சரணடைகிறார். தொடர்ந்து ஜெயிலுக்கும் போக.. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது.
இன்னொரு பக்கம் நாயகியோ தன்னைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் சதி வலையில் சிக்கி மெளனமாக இருக்கிறார். நாயகனோ எப்படியாவது இந்த வழக்கில் இருந்து தப்பிக்கலாம் என்று எண்ணி காய் நகர்த்துகிறார். கடைசியில் யார் ஜெயித்தது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
‘பேச்சுலர்’ என்ற தலைப்புக்கேற்றபடி ஐடி துறையில் பணியாற்றும் முக்கால்வாசி பேச்சுலர்களின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்தப் படம் அமைந்துள்ளது.
ஜி.வி.பிரகாஷை ஒரு வழி பண்ணாமல் ஓய மாட்டார்கள் போலிருக்கிறது இளம் இயக்குநர்கள். அவருடைய தோற்றம் இளம் வயதாகவே இருப்பதால் இப்படி கேடு கெட்டவனாகவோ அல்லது கஞ்சா விற்பவராகவோ மிக எளிதாக உருவகப்படுத்துகிறார்கள். இது ஜி.வி.பிரகாஷின் கேரியருக்கு நல்லதல்ல. இப்போதே அவர் முழித்துக் கொள்வது அவருக்கு நல்லது.
அமைதியான குணம்.. ஆனால் அழுத்தமான நடவடிக்கைகள்.. ஏமாற்றும் வித்தைக்காரன்.. நயவஞ்சகன்.. காமாந்தாக்காரன்.. பிழைக்கத் தெரிந்தவன் என்று அத்தனை மொள்ளமாரித்தனத்திற்கும் அடையாளமாய் நடித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
சிற்சில காட்சிகளில் மட்டுமே பெரிதாக வசனம் பேசுபவர் படத்தில் முக்கால்வாசி நேரங்களில் மெளனமாக பார்த்தபடியே இருந்து நடித்திருக்கிறார். இயக்குநரின் இயக்கம் அப்படி. இவரைக் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை.
நாயகி திவ்யபாரதிதான் படத்தின் மிகப் பெரிய பலம். கவர்ச்சியான முகம். அழகான வடிவான தோற்றம். சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். இடைவேளைக்குப் பின்பு நீதிமன்றக் காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் முக பாவனைகளிலேயே “ஐயோ பாவம்” என்ற பீலிங்கை நமக்குக் கொண்டு வந்துவிட்டார். முத்தக் காட்சிகளில் துணிந்து நடித்திருக்கிறார். ஆனால், இதுவே இவருக்கு பின்னடைவாக இருக்கப் போகிறது.
முனீஸ்காந்தின் நடிப்புதான் இடைவேளைக்குப் பின்பு கொஞ்சமாச்சும் படத்தினைத் தாங்கிப் பிடித்திருக்கிறது. 10 நிமிடங்களே வந்தாலும் மிஷ்கின் அசர வைக்கிறார். ஏதோ செய்யப் போகிறார் என்பதைக் காட்டுவதைப் போல பில்டப் செய்திருந்தாலும் அது கதைக்கு உதவவில்லை.
நாயகனின் நண்பர்களாக நடித்தவர்களும் வேலை வெட்டியே இல்லாமல் சென்னைக்கு வந்து நாயகனுக்கு உதவி செய்பவர்களாகவே காட்டப்பட்டிருக்கிறார்கள். நாயகனின் அம்மாவாக நடித்தவரின் அவமான நடிப்பு ஓகே. அவரது அக்காவின் உண்மையான கோபப் பேச்சு நியாயமானது.
படம் முழுவதுமே அடல்ட் ஒன்லி படமாகவே உருவாக்கப்பட்டுவிட்டதால் இடைவேளைக்குப் பின்பான காட்சிகளில் பல முரண்பாடுகள் திரைக்கதையில் தெளிக்கின்றன.
படத்தின் கதையே தவறாக உள்ளது. இதை இயக்குநர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவரும் இளம் வயதுக்காரராக இருப்பதால் சிந்திக்கும் திறனை இழந்திருக்கிறார் போலும்.
“லிவ்விங் டூ கெதர் முறையே தவறு” என்று இந்தப் படத்தில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. கருவைக் கலைத்துவிடு என்று சொல்வது அந்தப் பெண்ணை எந்த அளவுக்குக் காயப்படுத்தும் என்பது பிள்ளையைக் கொடுக்கும் அறிவுள்ள நாயகனுக்குத் தெரியவில்லையென்றால் இவரெல்லாம் எதற்கு காதலிக்க வருகிறார்..?
நாயகி கருவைக் கலைக்க முடியாது என்று சொல்வதற்கு பாசம், அன்பினை மட்டுமே மையாக வைத்து இயக்குநர் வசனம் எழுதியிருக்க வேண்டும். ஆனால் அவரோ நாயகனைக் கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாயகனுக்கே புரியாத வகையில் நாயகியை பேச வைத்திருக்கிறார். என்ன கொடுமை சரவணா இது..?
நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு பொய்யானது என்பதை நாயகன் வெளிப்படையாகச் சொல்லி நியாயம் கேட்டிருக்கலாம். பி.இ. வரையிலும் படித்தவருக்கு இந்தப் பொது அறிவுகூட இல்லையென்றால் எப்படி.. அதிலும் தன்னை ஆண்மை இல்லாதவன் என்று சொல்லும் அளவுக்கு நாயகன் தரையிரங்குவது கேவலத்திலும் கேவலம்.
காதலே இல்லாமல் காமத்தை மட்டுமே மையமாக வைத்து நாயகியிடம் பழகியதாக நாயகனே மறைமுகமாச் சொல்வது போல இருக்கிறது இந்தத் திரைக்கதை. பின்பு எப்படி இந்தக் கதையிலும், கதையின் மாந்தர்கள் மேலும் ரசிகர்களுக்கு பற்றும், பாசமும் வரும்..?
முட்டாள்தனமான கதையில், சொல்லக் கூடாத வகையில் திரைக்கதையை எழுதி படத்தையும், படம் பார்க்க வருபவர்களையும் பயமுறுத்தியிருக்கிறார் இயக்குநர். இந்தப் படத்தைப் பார்க்கும் 18 வயது வாலிபர்களுக்கு இதெல்லாம் தப்பில்லை என்பது போலத்தான் தோன்றும். இது ஒரு மோசமான கலாச்சாரத்தை நமது பிள்ளைகளிடம் நாமே திணிப்பது போலாகும்..!
தேவையற்ற காட்சிகள் நிறையவே படத்தில் இருக்கின்றன. படத்தில் முக்கால் மணி நேரத்தைத் தயவு தாட்சண்யமே இல்லாமல் கத்திரி போட்டுத் தூக்கியிருக்கலாம்.
ஒளிப்பதிவு, பின்னணி இசை, டிரெஸ்ஸிங் என்று பல டெக்னிக்கல் சமாச்சாரங்களும் படத்தில் சிறப்பாக இருந்தாலும் மெயின் டிஷ்ஷான சாதமே குழைந்து போயிருப்பதால் கூட்டுப் பொரியல்கள் பற்றிப் பேசி பிரயோசனமில்லை.
இந்தப் ‘பேச்சுலர்’ ஒரு மோசமான பேச்சுலர் என்பது மட்டும் உண்மை.
RATINGS : 2 / 5