full screen background image

“பாகுபலி படத்தில் நடித்ததை அல்சீமர் நோய் வந்தால்கூட மறக்க முடியாது..!”

“பாகுபலி படத்தில் நடித்ததை அல்சீமர் நோய் வந்தால்கூட மறக்க முடியாது..!”

இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ‘பாகுபலி-2’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தொகுத்து வழங்கினார். “ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியைக்கூட பார்க்காமல் இங்கே இத்தனை பேர் திரண்டு வந்திருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது..” என்று ஆரம்பித்தவர் நிகழ்ச்சியை சுவையாக தொகுத்து வழங்கினார்.

முதலில் மைக்குடன் தரையிரங்கி அரங்கில் அமர்ந்திருந்தவர்களிடத்தில் ‘பாகுபலி  திரைப்படம்’ தொடர்பான சில கேள்விகளை கேட்டார்.

baahubali-audio-1

‘பாகுபலி’ படத்தின் கதை எங்கே நடைபெற்றது..? ‘பாகுபலி’யை கட்டப்பா ஏன் கொலை செய்தார்..? ‘பாகுபலி’ படத்தின் வில்லன் பெயர் என்ன..? ‘பாகுபலி’யின் கதைச் சுருக்கம் என்ன..? என்று அவர் கேட்ட கேள்விகளுக்கு வினோதமான பதில்களெல்லாம் வந்து துவக்கமே கலகலப்பாகவே இருந்தது.

‘பாகுபலி’ படத்தின் கதை ஆந்திரா, சென்னை, கேரளாவில் நடைபெறுகிறது என்றெல்லாம் சொன்னார்கள். கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார் என்ற கேள்விக்கு யாருமே சரியான பதிலை சொல்லவில்லை. அதேபோல் கதைச் சுருக்கத்தையும் ஏனோதானோவென்றுதான் சொன்னார்கள்.. வில்லன்களின் பெயர்களை மட்டும் ஒருவர் சரியாகச் சொன்னார்.

அதையடுத்து ‘பாகுபலி’யில் பேசியிருந்த வினோதமான கீகி மொழியில் பேசக் கூடியவர்கள் இங்கே யாராவது இருக்கிறார்களா என்று கேட்டார் பாலாஜி. அதற்கும் காமெடியாகவே பதில் சொன்னார்கள் சிலர்.

‘பாகுபலி-2’ படத்தை தமிழ்நாட்டில் விநியோகம் செய்யவிருக்கும் விநியோகஸ்தர் ராஜராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அவர் பேசும்போது, “இந்த ‘பாகுபலி-2’ படத்தை தமிழில் வெளியிடுவதில் நான் மிகவும் பெருமையடைகிறேன். மிக பெரிய செலவில் தயாரிக்கப்படும் இந்த பிரமாண்டமான படத்தில் நானும் ஏதோ ஒரு வகையில் இடம் பெற்றிருக்கிறேன் என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

உலகம் முழுவதிலும் இப்போது தமிழ்ப் படங்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ‘பாகுபலி’தான். அந்த வரிசையில் இந்தப் படம் மிக அதிகமான இடங்களில் திரையிடப்பட்டிருக்கிறது. இந்தச் சாதனையை ‘பாகுபலி’ படைத்திருக்கிறது..” என்றார்.

தொடர்ந்து சில பிரபலங்களை மேடைக்கு அழைத்து படம் பற்றிய அவர்களது கருத்தை பதிய வைத்தார் பாலாஜி.

Madhan Karky at Yen Endral Kadhal Enben Press Meet Stills

படத்தின் வசனகர்த்தாவான பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசும்போது, “ஐந்து வருடங்கள் இந்தப் படத்த்துடன் பயணித்திருக்கிறேன். இதற்காக பல வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். ஆனாலும் பிரம்மாண்டம் மற்றும் இந்தப் படத்தின் தன்மைக்காகவே இதில் பணியாற்றினேன்..” என்றார்.

திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவரான அருள்பதி பேசும்போது,  “இப்போது ஒட்டு மொத்த தமிழ்நாடும் இந்த ஒரு படத்துக்காகத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறது. எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் நிச்சயமாக இந்த படம் மாபெரும் வெற்றியை அடையும்..” என்று வாழ்த்தினார்.

அடுத்து படத்தின் டிரெயிலர் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இசைக் கச்சேரிகளும், நடனங்களும் அரங்கேறின. இடையிடையே பிரபலங்கள் மேடையேறி ‘பாகுபலி-2’ படம் பற்றிய தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

baahubali-audio-3

ராஜமெளலியின் அப்பா பேசும்போது, “நான் கே.பாலசந்தர், பாரதிராஜா போன்ற திரையுலக மேதைகளின் படங்களை பார்த்து திரையுலகில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்றெண்ணிதான் திரையுலகத்திற்குள்ளே வந்தேன்.

இந்தப் படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சிறந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ராஜமெளலி இவர்களுடன் நானும் பணியாற்றியிருப்பதை நினைத்தால் மிகப் பெரிய பெருமையாக இருக்கிறது.

தமிழின் மிகப் பெரிய கவிஞரான வைரமுத்துவின் மகனான மதன் கார்க்கியின் வசனத்தை பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி..” என்றார்.

Kalaipuli S Thanu @ Veerapandiya Kattabomman Movie Trailer Launch Stills

தயாரிப்பாளர் தாணு பேசும்போது, “இந்தியத் திரையுலகமே மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் இது. எத்தனையோ இயக்குநர்கள் என்னுடன் பணியாற்றியபோதும் எனக்கு ராஜமெளலியுடன் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை. 2004-ம் ஆண்டிலேயே நான் ராஜமெளலியுடன் பேசி ‘விஜய்யை வைத்து ஒரு படத்தை நீங்கள் இயக்க வேண்டும்’ என்றேன். ‘இப்போது இரண்டு பிராஜெக்ட்டுகளில் பணியாற்ற இருக்கிறேன். அப்புறம் பார்ப்போம்..’ என்று அவர் சொல்ல.. அது அப்படியே தள்ளித் தள்ளிப் போய் இன்றைக்கும் அப்படியே இருக்கிறது.

எங்களது சத்யராஜ்.. புரட்சித் தலைவரின் வாரிசு.. இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். அவர் வாள் எடுத்து வீசும் காட்சியை பார்த்தபோது அப்படியொரு சந்தோஷமாக இருந்த்து. அவரும் ஆந்திராவில் மிகப் பெரிய புகழைப் பெற்றுவிட்டார் என்பதை நினைக்கையில் எனக்கும் பெருமையாக இருக்கிறது..

இந்தப் படம் உலக அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருப்பதால் ‘பாகுபலி-1’ பெற்ற வெற்றியைவிடவும் மிகப் பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..” என்றார்.

Tamannah-1

அவந்திகாவாக நடித்திருக்கும் நடிகை தமன்னா பேசும்போது, “இந்த பிரமாண்டமான படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தமைக்காக இயக்குநர் ராஜமெளலி ஸாருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

நான் முதலில் இந்தப் படத்தோட கதையைக் கேட்கும்போது எனக்கு அப்போ இதுவொரு வரலாற்று சிறப்புமிக்க படம்ன்னு தோணலை. ஆனால் இப்போ ரொம்பப் பெருமையா இருக்கு. நான் உண்மையா ராஜமெளலி ஸாரோட தீவிர விசிறி. அவருடைய இயக்கத்தில் அற்புதமா, அழகா என்னை நடிக்க வைச்சிருக்கார். என்னுடைய கேரியரில் மிக முக்கியமான படம் இதுதான்னு நினைக்கிறேன். இந்தப் படத்தோட தயாரிப்பாளர் ரொம்ப சிம்பிள் மேன். ஆனால் இவ்ளோ பெரிய பட்ஜெட்டுல படத்தை எடுத்திருக்கார். அவருக்கும் எனது நன்றி.

பிரபாஸ், ஸ்வீட்டி அனுஷ்கா, ராணா எல்லோரும் எனக்கு ரொம்ப ஒத்துழைப்பு கொடுத்தாங்க. இந்தப் படத்தின் பாடல்களை எந்த இடத்துல கேட்டாலும் எனக்கு அந்த டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் தானா வந்திரும். அந்த அளவுக்கு இந்தப் படத்தின் பாடல்கள் எனக்குள்ள இருக்கு.. இந்த மாபெரும் படத்தில் நான் பங்கு கொண்டதற்காக மிகவும் பெருமைப்படுகிறேன்..” என்றார்.

anuskha-1

தேவசேனாவாக நடித்த நடிகை அனுஷ்கா பேசும்போது, “இந்தப் படத்தில் நடிக்க இப்படியொரு வாய்ப்பினை அளித்த இயக்குநர் ராஜமெளலி ஸாருக்கு எனது நன்றி. என்னுடைய கேரியரில் நான் பார்த்த சிறந்த இயக்குநர்களில் ராஜமெளலி ஸாரும் ஒன்று. கடந்த 5 வருடங்களாக என்னுடன் இந்தப் படத்தில் நடித்து, ஒத்துழைப்பு கொடுத்த அத்தனை பேருக்கும் எனது நன்றிகள்..” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

Nasser-1

பிங்கலத்தேவனாக நடித்த நடிகர் நாசர் பேசும்போது, “ராஜமெளலியின் இயக்கம் எனக்கு புதிதல்ல.. நான் ஏற்கெனவே ராஜமெளலியின் இயக்கத்தில் ‘சிம்மாத்ரி’ படத்தில் நடித்திருக்கிறேன்.

இந்தப் படத்தின் கதையை என்னிடம் வந்து அவர் சொன்னபோது வழக்கம்போல சிரித்துவிட்டு ‘நல்லாயிருக்கு’ என்றுதான் சொன்னேன். அப்போது எனக்கிருந்த ஒரேயொரு கேள்வி.. இவர் எப்படி இந்தக் கதையை எடுக்கப் போறார்ன்னுதான்.. ஆனால் அசத்தலா எடுத்துக் காட்டியிருக்கார்.

இந்தப் படம் மிக பிரம்மாண்டமான படம்.. மிகப் பெரிய செலவுன்னு சொல்றாங்க. எனக்கு அதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. ஆர்ட்டிஸ்ட்டுகளை இவங்க பார்த்துக்கிட்டவிதம் அப்படியொரு அற்புதம்.. அர்ப்பணிப்பு உணர்வோடு எல்லாரும் நடந்துக்கிட்டாங்க. கவனிப்புன்னா கேரவன் வேனை மட்டும் சொல்ல்லை. அதையும் மீறிய கவனிப்பு.. தங்களோட வீட்டுக்காரங்க மாதிரி எங்களை பார்த்துக்கிட்டாங்க..

20 வருடங்களுக்கு முன்பாக மோகன் காரே என்ற தெலுங்கு இயக்குநர் ‘எல்லம்மாள்’ என்ற சின்னப் பட்ஜெட் படத்தை தயாரித்து இயக்கினார். என்னை ரொம்ப கேட்டுக்கிட்டதால் நானும் அதில் நடிச்சேன். அவங்க மத்திய தர வர்க்கக் குடும்பத்தினர். மாதச் சம்பளத்துல கிடைத்த பணத்தை வைச்சுத்தான் அப்பப்போ ஷூட்டிங் நடத்துவாங்க. அந்தச் சமயத்துல அந்தக் குடும்பத்தினர் எப்படி என்னை கவனித்துக் கொண்டார்களோ, அதே போல இத்தனையாண்டுகள் கழித்து இந்தப் படத்துலதான் நான் அனுபவிச்சேன்.

கிட்டத்தட்ட இந்த 5 வருஷமா நாங்க இதுல ஒண்ணா சேர்ந்து நடிச்சதால இது எங்களோட வாழ்க்கைல ஒரு பகுதியாவே மாறியிருச்சு.. எங்களால மறக்க முடியாத வாழ்க்கைக் கட்டம் இதுன்னே சொல்லலாம். அல்சீமர் நோய் வந்தால்கூட எங்களால் இந்தப் படத்தை மறக்க முடியாது. ‘பாகுபலி-1’ எப்படி வெற்றி பெற்றதோ அதைவிட பல மடங்கு அதிகமாக இந்த ‘பாகுபலி-2’-வும் வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கு..” என்றார்.

கட்டப்பாவாக நடித்த நடிகர் சத்யராஜ் பேசும்போது, “இளையராஜா பாடல் ஒண்ணு இருக்கு. ‘ராஜா கைய வைச்சா அது ராங்கா போனதில்லை’ என்று..! அது இன்னிக்கு இங்கே மாத்தி பாட வேண்டியிருக்கு. ‘ராஜமெளலி கைய வைச்சா அது ராங்கா போனதில்லை’ என்று. ஏன்னா 11 படம் இதுவரைக்கும் ராஜமெளலி ஸார் இயக்கியிருக்காரு. அந்த 11 படமுமே வேற, வேற கதைகள்.. இந்த அளவுக்கு திறமைசாலி இயக்குநர் ராஜமெளலி..” என்றார்.

Rajamouli-1

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி பேசும்போது, “எங்கப்பா மொதல்ல இந்தப் படத்தோட கதையை சொல்லலை.. கேரக்டர்களை மட்டும்தான் சொன்னார். அவர் சொன்ன முதல் கேரக்டர் சிவகாமி. அப்புறம் பாகுபலி, தேவசேனா, பல்லவா, அவந்திகான்னு அவர் சொல்லச் சொல்ல அத்தனை கேரக்டர்களும் என் மண்டைக்குள்ள போய் உட்கார்ந்திட்டாங்க. ஏதோ செய்யவும் ஆரம்பிச்சிட்டாங்க.

அவங்களை வைச்சு ஏதோ செய்யணும்னு தோணுச்சு. அப்புறம்தான் இந்த பிராஜெக்ட் ஆரம்பிச்சுச்சு.. நான் என்ன நினைச்சிருந்தனோ.. எந்தெந்த கேரக்டர்களை எப்படி கற்பனை பண்ணி வைச்சிருந்தனோ, அது மாதிரியே எனக்கு இத்தனை ஆர்ட்டிஸ்ட்டுகளும் கிடைத்தாங்க..

இந்தப் படம் இத்தனை பிரமாதமா வந்திருக்கிறதுக்கு, முதல் காரணம் எனக்குக் கிடைத்த ஆர்ட்டிஸ்டுகள்தான். அத்தனை பேரும் கொடுத்த ஒத்துழைப்பில் நான் நினைத்தது போல என்னால் எடுக்க முடிந்திருக்கிறது.

படத்தில் நடித்த நாசர் ஸார் கதையைக் கேட்டவுடனேயே நிறைய கேள்வி கேட்டார். ஆனாலும் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார். அதேபோல் சத்யராஜ் ஸாரும். செட்ல அவரும் ரம்யா கிருஷ்ணனும் எப்பவும சிரிச்சுக்கிட்டேதான் இருப்பாங்க. நான்தான் திரும்பத் திரும்ப அவர்கிட்ட, ‘ஸார்.. சிரிக்காதீங்க ஸார்.. சிரிக்காதீங்க ஸார்..’ன்னு சொல்லிட்டே இருப்பேன். ஆனால் ‘ஷாட்’டுன்னு சொல்லி கேமிராவுக்கு முன்னாடி வந்து நின்னுட்டாருன்னா, எல்லாத்தையும் மறந்து நடிச்சுக் கொடுப்பாரு. அவராலதான் அந்தக் ‘கட்டப்பான்’ற பேரு ரொம்ப, ரொம்ப பேமஸாகி அதுவே படத்துக்கு ஒரு விளம்பரமாயிருச்சு. அவருக்கும் எனது நன்றிகள்.

இதேபோல் தமன்னாவும், ராணாவும் இந்தப் படத்துக்காக போகாத ஊரில்லை. பேசாத இடமில்லை. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தின்னு எல்லா ஊர்லேயும் போயி இந்தப் படத்துக்காக பிரமோஷன் செஞ்சிருக்காங்க. ஹிந்தில கரண்ஜோகர்கூட மீட்டிங்கெல்லாம் வைச்சு பேசினாங்க.. அவங்களுக்கு எனது நன்றி.

எனக்குக் கிடைத்த தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் எல்லாருமே டெடிகேடட் ஆர்ட்டிஸ்ட்.. இவங்களை மாதிரியான ஆர்ட்டிஸ்ட்டுகள் எனக்குக் கிடைச்சது பெரிய விஷயம். இதனால்தான் இப்படி ஐந்து வருஷமா தொடர்ந்து ஒரு படத்தை எடுக்க முடிஞ்சது..

அடுத்து மை டார்லிங் பிரபாஸ்.. எனக்காக இந்த ஐந்து வருடங்களாக வேறு பிராஜெக்ட்டுகளையே ஒத்துக் கொள்ளாமல் உடன் இருந்து நடித்துக் கொடுத்தார். பெர்பெக்சன், டெடிகேஷன் என்பதற்கு அடையாளமாக இருந்தவர் பிரபாஸ்.

இங்க நிறைய பேர் கேட்டாங்க.. ‘பிரபாஸ் இல்லாமல் உங்களால் இந்தப் படத்தை எடுத்திருக்க முடியுமா..?’ ‘பிரபாஸுக்கு பதிலான்னா யாரை வைச்சு எடுத்திருப்பீங்கன்னு..?’ நான் இப்போ சொல்றேன்.. இந்த ‘பாகுபலி’ கேரக்டருக்கு மிக, மிக பொருத்தமானவர் பிரபாஸ்தான். இதில் எனக்கு சந்தேகமேயில்லை.. தேங்க்ஸ் பிரபாஸ்..!

என்னுடைய இசையமைப்பாளர் மரகதமணி அருமையான இசையை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அவர் வெறும் இசையமைப்பாளர் மட்டுமல்ல.. இசையை உயிர்ப்பித்துக் கொடுத்தவர். இந்தப் படத்தின் பாடல்களின் வெற்றிக்கு அவர்தான் காரணம்.

வசனகர்த்தா மதன் கார்க்கி எழுதிய அற்புதமான வரிகள் இந்தப் படத்துக்கு மிகப் பெரிய பலத்தைக் கொடுத்திருக்கு. அவருக்கும் எனது நன்றிகள்.

இந்த ‘பாகுபலி-2’ திரைப்படம் முந்தைய பாகத்தில் உங்களை எப்படி ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோ அதேபோல் இப்போதும் செய்யக் காத்திருக்கிறது. ‘பாகுபலி-1’-ஐ விடவும் அதிகமாகவே இதில் உழைத்திருக்கிறோம். அந்த உழைப்புக்கான பலன் எங்களுக்குக் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்..!

நான் என்னுடைய சின்ன வயதில் இங்கேயே கே.கே.நகர்லதான் குடியிருந்தேன். அப்போ அங்கேயிருந்து சைக்கிள்ல இந்த காலேஜுக்கு வந்திருக்கேன். இப்போ இத்தனை வருடம் கழித்து அதே காலேஜ்ல இப்படியொரு நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்திருக்காரு ராஜராஜன் ஸார்.

இந்த நிகழ்ச்சியை இத்தனை பிரமாண்டமாக நடத்துவார்கள் என்று நான் துளியும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் எதிர்பார்த்ததைவிடவும் அற்புதமாக நடத்தியிருக்கிறார்கள். மேடையே அழகுற அமைத்திருக்கும் செட் இயக்குநருக்கும், விழாக் குழுவினருக்கும் எனது நன்றிகள்..” என்றார் நெகிழ்ச்சியோடு..!

baahubali-audio-2

விழாவின் இறுதியில் படத்தின் இசை வெளியிடப்பட்டது. படத்தில் பங்கு கொண்ட கலைஞர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டவர்களும் மேடைக்கு வர அவர்கள் முன்னிலையில் படத்தின் இசை வெளியிடப்பட்டது.

இந்தக் கண் கவர் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் தாணு, ஆர்.கே.சுரேஷ், கே.ஆர்., தனஞ்செயன், ஐசரிவேலன், நடிகர் தனுஷ், நடிகை குட்டி பத்மினி, இயக்குநர்கள் விக்ரமன், யார் கண்ணன் தெலுங்கு இயக்குநர் ராகவேந்திரராவ், நடிகர்கள் சத்யராஜ், நாசர், சதீஷ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

Our Score