‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநரான ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக உருவாகி வரும் படம் ‘அயலான்’. இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
வரும் 2024 பொங்கல் தினத்தன்று இத்திரைப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘வேற லெவல் சகோ’ பாடல் காட்சி கடந்த 2021-ம் ஆண்டே வெளியானது.
இப்படத்தின் டீசர் கடந்த அக்டோபர் மாதம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. டீசர் விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் மீண்டும் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சிவகார்த்திகேயன் படத்திற்கு உலகளவில் பல நாடுகளில் மற்றும் திரை எண்ணிக்கையில் அதிகளவு வெளியாகும் திரைப்படம் அயலான் எனப் படக் குழு மகிழ்ச்சி தெரிவித்திருந்தது.
இப்படத்தின் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் எனவும் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 26-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் “தங்களிடம் போட்ட ஒப்பந்தத்தை மீறி ‘அயலான்’, ‘ஆலம்பனா’ படங்களை வெளியிடுவதாக” டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த மனுவில், “அயலான்’, ‘ஆலம்பனா’ ஆகிய படங்களைத் தயாரித்துள்ள கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் எங்களிடம் படத் தயாரிப்புக்காக வாங்கியிருந்த 10 கோடி ரூபாய் கடனில் 3 கோடி ரூபாய் மட்டுமே திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையைக் கொடுத்துவிட்டு அந்தப் படங்களை வெளியிட உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ மற்றும் நடிகர் வைபவின் ‘ஆலம்பனா’ ஆகிய இரு படங்களையும் 4 வாரங்களுக்கு வெளியிட தடை விதித்து இடைக்கால உத்தரவினை பிறப்பித்துள்ளது.









