full screen background image

ஏ.வி.எம்.நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் காலமானார்

ஏ.வி.எம்.நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் காலமானார்

தமிழ் சினிமாவின் மிகப் பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஏ.வி.எம். சரவணன் இன்று காலை 5.30 மணியளவில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 86.

இவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி, புதுச்சேரி அரசின் சிகரம் விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏவி.மெய்யப்ப செட்டியாருக்கு பின்னர் அந்த நிறுவனத்தை சரவணன்தான் நிர்வகித்து வந்தார்.

‘நானும் ஒரு பெண்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘சிவாஜி’, ‘வேட்டைக்காரன்’, ‘மின்சார கனவு’, ‘அயன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.

ஏ.வி.மெய்யப்ப செட்டியார் 1945-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஏ.வி.எம் நிறுவனம், கோலிவுட்டில் இன்றும் மதிக்கப்படும் தலையாய நிறுவனங்களில் ஒன்றாகும்.
 
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலம் முதல் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா எனப் பல தலைமுறை முன்னணி நடிகர்களுக்கு வெற்றிக் காவியங்களைத் தந்த பெருமை இந்த நிறுவனத்திற்கே உண்டு. ஒருமுறையாவது ஏ.வி.எம். நிறுவனத்தின் பேனரில் நடித்துவிட வேண்டும் என்பது பல நடிகர்களின் உச்சபட்ச கனவாக இருந்துள்ளது.

நிறுவனத்தின் ஸ்தாபகர் ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் சரவணன் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

ஏ.வி.எம் நிறுவனத்தின் பாரம்பரியம் மற்றும் வெற்றிப் பாதையில் எந்தவொரு தொய்வும் வந்துவிடக்கூடாது என்பதில் அவர் மிகுந்த முனைப்புடன் செயல்பட்டார்.

இவரது தலைமையின் கீழ் ஏ.வி.எம். நிறுவனம் தொடர்ந்து ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்து, பெரும் லாபத்தைக் கண்டதுடன், பல ஊழியர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கியது.

பெரும் சாம்ராஜ்யத்தை நிர்வகித்தபோதும், ஏ.வி.எம். சரவணன் அனைவரிடமும் எளிமையாகவும், பணிவுடனும் பழகக்கூடியவர். எந்தவித ஆடம்பரமும் இன்றி திரைத்துறை விழாக்களில் அவர் கலந்துகொள்வது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. ரஜினிகாந்த் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களும், ஏ.வி. மெய்யப்ப செட்டியார் மீது வைத்திருந்த அதே அளவு மரியாதையையும், அன்பையும் சரவணன் மீதும் வைத்திருந்தனர். மேலும், 1986-ம் ஆண்டு சென்னை மாநகரின் ஷெரீப் பதவியையும் வகித்துள்ளார்.

ஏவி.எம் மெய்யப்ப செட்டியார் நடத்தி வந்த நிறுவனத்தை ஏவி.எம்.சரவணன் கவனித்து வந்தார். தற்போது வயதானால் வீட்டில் ஓய்வில் இருந்தார். அவருக்குப் பின் அவரது மகன் எம்.எஸ்.குகன் தற்போது ஏவி.எம். நிறுவனத்தைக் கவனித்து வருகிறார்.

கடந்த சில நாட்களாக வயது மூப்பின் காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சரவணன், இன்று காலை காலமானார்.
 
அவரது உடல், அஞ்சலிக்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவின் மூன்றாவது தளத்தில் வைக்கப்பட்டுள்ளது.
 
திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
 
Our Score