வையாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து நடிகர் சித்தார்த் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான எடாகி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்திருக்கும் படம் ‘அவள்’.
மிலிந்த் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா ஜெர்மியா, அதுல் குல்கர்னி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் திரைக்கதையை இயக்குநர் மிலிந்த் உடன் இணைந்து எழுதியிருக்கிறார் நாயகன் சித்தார்த்.
இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
விழாவில் அனைவரையும் வரவேற்று பேசிய நாயகன் சித்தார்த், “நானும், இயக்குநர் மிலிந்தும் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநர்களாக ஒன்றாக வேலை பார்த்தோம். எங்கள் நட்பு 17 வருடங்களை தாண்டியது.
ஒரு உண்மைக் கதையை மையப்படுத்தி இந்த படத்தின் கதையை எழுதியிருக்கிறோம். நல்ல ஒரு ஹாரர் படத்தை எடுத்து மக்களை பயமுறுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் கனவு. அதை இந்த படத்தின் மூலம் செய்திருக்கிறோம். இந்தப் படத்துக்கு பின் இயக்குநர் மிலிந்த் நிச்சயமாக பெரிய அளவில் பேசப்படுவார்.
படத்தின் நாயகி ஆண்ட்ரியா நன்றாக தமிழ் பேசக் கூடிய நடிகை. அவர் படத்தின் மிகப் பெரிய தூண். ‘ரங்தே பசந்தி’ படத்துக்கு பிறகு 12 வருடங்கள் கழித்து இந்த படத்தில் அதுல் குல்கர்னியும், நானும் இணைந்து நடித்திருக்கிறோம்.
‘ஜில் ஜங் ஜக்’ படத்தில் வேலை செய்த டீம் இதிலும் பணியாற்றி இருக்கிறது. இப்படி ஒரு பெரிய பட்ஜெட் ஹாரர் படத்தை நாங்கள் எடுத்திருப்பது எங்களுக்கு பெருமையான விஷயம். வரும் நவம்பர் 3-ம் தேதி அவள் திரைப்படம் திரைக்கு வருகிறது..” என்றார்.
படத்தின் இயக்குநர் மிலிந்த் பேசும்போது, “ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து நாலரை வருடங்களாக நானும், சித்தார்த்தும் இணைந்து இந்த படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறோம். இந்த படத்தின் டிரைலரை பார்த்தால் தொழில் நுட்ப கலைஞர்களின் உழைப்பை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்…” என்றார்.
படத்தின் நாயகியான ஆண்ட்ரியா பேசும்போது, “எனக்கு மட்டும் எப்படி நல்ல, வித்தியாசமான படங்கள் அமைகிறது என்று எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. என் கேரியரில் ‘தரமணி’யை தொடர்ந்து இந்த ‘அவள்’ படமும் ஒரு சிறந்த படமாக இருக்கும். இந்த படம் ரொம்பவே பயமுறுத்தும். அதனால் நிச்சயமாக இந்த படத்தை நான் பார்க்க மாட்டேன்…” என்றார்.
“சென்னை எப்போதுமே எனக்கு ஸ்பெஷல். ஏனென்றால் இந்த சென்னைதான் என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது. உலக நாயகன் கமல் அவர்கள்தான் ‘ஹே ராம்’ படத்தில் என்னை ஒரு நடிகனாக அறிமுகப்படுத்தினார்.
‘ரங்தே பசந்தி’ படத்துக்கு பின் 12 வருடங்கள் கழித்து சித்தார்த்துடன் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி.
எப்போதுமே நல்ல சினிமா நல்ல ஒரு குழுவால்தான் உருவாகிறது. பாலிவுட் எப்போதும் தமிழ் சினிமாவை உற்று கவனித்துக் கொண்டேதான் இருக்கிறது. தொழில் நுட்பம், இசை போன்றவற்றில் தமிழ் சினிமா எப்போதும் முன்னோக்கியே இருக்கிற்து.
தமிழ, தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இந்த ‘அவள்’ படம் வெளியாக இருக்கிறது. இந்திய சினிமாவில் இது ஒரு முக்கியமான ஹாரர் படமாக இருக்கும்..” என்றார் நடிகர் அதுல் குல்கர்னி.
படத்தின் இசையமைப்பாளரான கிரீஷ் கோபாலகிருஷ்ணன் பேசும்போது, “2012-ல் ‘மெரினா’, 2014-ல் ‘விடியும் முன்’ படங்களுக்கு இசையமைத்தேன். எனக்கு பிடித்த விஷயங்களை மட்டுமே செய்வேன் என்பதால்தான் மிக குறைந்த படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து இசையமைத்து வருகிறேன். சித்தார்த், மிலிந்த் இருவரும் என்னை ஹாரர் படத்தில் வேலை செய்ய விருப்பமா எனக் கேட்டு இந்த படத்துக்குள் என்னை கொண்டு வந்தார்கள். கடந்த ஒரு வருடம் இந்த படத்தில் வேலை செய்தது மிகப் பெரிய அனுபவம்…” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, படத் தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர், கலை இயக்குநர் சிவஷங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கடைசியாக படத்தின் டிரெயிலர் ஒளிபரப்பானபோது அந்த ஏசி ஜில்லையும் தாண்டி நம்மை ஜில்லிட வைத்துவிட்டது ஆண்ட்ரியாவின் முத்தக் காட்சிகள். சாதாரண முத்தமாக இல்லாமல் ஆங்கிலப் படங்களில் வரும் அழுத்தமான முத்தங்களாக தொடர்ந்து பல முறை எண்ண முடியாத அளவுக்கு சித்தார்த்தும், ஆண்ட்ரியாவும் புகுந்து விளையாடியிருக்கிறார்கள்.
சித்தார்த் ரொம்பவே கொடுத்து வைத்தவர்தான்..!