full screen background image

ஆகஸ்ட் 16, 1947 – சினிமா விமர்சனம்

ஆகஸ்ட் 16, 1947 – சினிமா விமர்சனம்

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் தனது A.R.Murugadoss Productions  நிறுவனத்தின் மூலம், Purple Bull Entertainment நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

கௌதம் கார்த்திக் நாயகனாகவும், புதுமுக நடிகையான ரேவதி வெங்கட் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் புகழ், ரிச்சர்டு ஆஷ்டன், ஜேஸன் ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – என்.எஸ்.பொன்குமார், ஒளிப்பதிவு – எஸ்.கே.செல்வக்குமார், இசை – சீன் ரோல்டன், படத் தொகுப்பு – ஆர்.சுதரசன், கலை இயக்கம் – டி.சந்தானம், உடைகள் வடிவமைப்பு – பெருமாள் செல்வம், ஒப்பனை – அப்துல் ரசாக், நடன இயக்கம் – தினேஷ். சண்டை இயக்கம் – ராஜசேகர், புகைப்படங்கள் – டி.நரேந்திரன், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா, டி ஒன்.

இந்தப் படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநரான என்.எஸ்.பொன்குமார், இயக்குநர் முருகதாஸிடம் நீண்ட காலமாக இணை இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தை மையப்படுத்தி, அந்தக் காலங்களில்தான் கொஞ்சம் படங்கள் வந்தன. அவை உண்மைச் சம்பவங்களைத் தழுவிய படங்களாக அதிகம் இருந்தன. ஆனால், கற்பனையான ஒரு கதையை வைத்து சில நெகிழ வைக்கும் சம்பவங்களுடன் இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பொன்குமார்.

இது இந்திய சுதந்திரப் போராட்டக் கதையல்ல. ஆனால், நாட்டின் சுதந்திரத்திற்காக ஏங்கித் தவித்த அப்பாவி மக்களின் கதை..!

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு மலைப் பிரதேசத்தில் இருக்கும் சின்னஞ்சிறிய கிராமமான செங்காடு’தான் இந்தப் படத்தின் கதைக் களம்.

1947-ம் ஆண்டின் ஆகஸ்ட் 14, 15, 16 ஆகிய தேதிகளில் இந்தக் கிராமத்தில் நடக்கும் சம்பவங்கள்தான் படமே..!

அந்தக் கிராமத்தில் விளையும் பஞ்சு மிகத் தரமானது. அதனால் பிரிட்டிஷார் அந்தக் கிராமத்தை ஒரு சிறப்புக் கண்ணோடத்தில் பராமரித்து வருகின்றனர். அந்த ஊரை ராபர்ட் கிளைவ் என்ற பிரிட்டிஷ் அதிகாரி நிர்வகித்து வருகிறார். இவரது மகனான ஜஸ்டினும் அடுத்த அதிகாரமிக்க அதிகாரியாகத் திகழ்கிறான்.

ராபர்ட் இந்த ஊர் மக்களை கசக்கிப் பிழிகிறான். ஊர்க்காரர்கள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உழைத்தாக வேண்டும் என்கிறார். வேலையில் சிறிது கவனக் குறைவு என்றாலும் சவுக்கால் அடித்துத் துன்புறுத்துகிறான். இவரது மகனான ஜஸ்டினோ ஊரில் இருக்கும் அனைத்துப் பெண்களையும் தன் படுக்கைக்கு இழுத்துச் செல்கிறான். அந்த ஊரின் ஜமீன்தாராக இருக்கும் மதுசூதனனும் தனது குடும்பப் பெயருக்காக இந்தக் கொடுமைகளுக்குத் துணை போகிறார்.

அந்த ஊருக்கும். வெளியுலகத்துக்கும் தொடர்பே இல்லை. மாதத்துக்கு ஒரு முறை அந்த ஊரைச் சேர்ந்த ஒருவன் மட்டுமே மலையில் இருந்து கீழேயிறங்கிச் சென்று ஊருக்குத் தேவையான சமையல் பொருட்களை வாங்கி வருவான்.

இந்த நேரத்தில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் சூழலில் இந்தக் கிராமத்தில் கிடைக்கும் தரமான பஞ்சுவை இன்னமும் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு விளைவித்து தங்களது நாட்டுக்குக் கொண்டு போக நினைக்கிறது பிரிட்டிஷ் அரசு. இதற்காக நிர்வாக அதிகாரியான ராபர்ட்டை அழைத்துப் பேசி ஒப்பந்தம் செய்து கொள்ள நினைக்கிறார்கள் பிரிட்டிஷ் உயரதிகாரிகள்.

இன்னொரு பக்கம் அதே ஊரில் ஊதாரியாய் இருக்கும் பரமன்’ என்ற கெளதம் கார்த்திக் இப்போது ராபர்ட்டின் அரண்மனையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு, நாயகியான ஜமீன்தாரின் மகளான ‘தீபாலி’ என்ற ரேவதி மீது காதல். ரேவதிக்கு இது தெரியாது. அதே நேரம் ரேவதியை ஜஸ்டினிடம் இருந்து காப்பாற்ற வேண்டி அவள் எப்போதே இறந்துவிட்டதாகச் சொல்லி, அவளுக்கு வருடாவருடம் திவசமும் செய்கிறார் ஜமீன்தார்.

ஒரு கட்டத்தில் ரேவதி உயிருடன் இருப்பது ஜஸ்டினுக்குத் தெரிய வர.. வழக்கம்போல அவளைத் தன்னிடம் அனுப்பி வைக்குமாறு ஜமீன்தாருக்கு உத்தரவிடுகிறான் ஜஸ்டின். ஜமீன்தார் ஒரு நாள் அவகாசம் கேட்கிறார்.

இந்த இடைவெளியில் மகளை உயிருடன் சமாதியாகச் சொல்கிறார் ஜமீன்தார். ஆனால் இதில் இருந்து நாயகியை மீட்டெடுக்கும் கெளதம் கார்த்திக், ஜஸ்டினை அடித்துக் கொன்றுவிடுகிறார்.

ராபர்ட்டுக்கு தன் மகன் என்னவானான் என்பது தெரியாமல் போக.. ஊர்க்காரர்களை கொடுமைப்படுத்துகிறான். அதே நேரம் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்கிற விஷயம் அந்த ஊர் மக்களுக்குத் தெரியாமலேயே இருக்க.. அந்த ஊரின் சர்க்கிள் இன்ஸ்பெக்டரும் ராபர்ட்டுக்கு உதவிகளை செய்ய.. கெளதம் கார்த்திக் என்ன செய்கிறார்..? அவர் ரேவதியை கல்யாணம் செய்தாரா..? சுதந்திரம் கிடைத்த தகவல் அந்த ஊர் மக்களுக்குத் தெரிந்ததா..? ராபர்ட்டின் கதி என்னவானது..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

‘பரமன்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கௌதம் கார்த்திக் முதல் பாதி வரையிலும் பொறுப்பற்ற இளைஞனாக.. தனது தாயின் மரணத்துக்குக் காரணமான ஊர் மக்களை வெறுப்பேற்றுவதற்காக, அவர்களது வீடுகளில் உணவுகளை திருடித் தின்பதிலும், ‘பொறுக்கி’யென்று பெயர் எடுத்தவனாகவும் வாழ்ந்திருக்கிறார்.

படத்தின் பிற்பாதியில் தனது காதலின் காரணமாகவே.. சுதந்திர உணர்வு கொண்டவராக மாறுகிறார். ஜஸ்டினை கொலை செய்கிறார். ஊர் மக்களுக்குத் தைரியம் ஊட்டுகிறார். “கோழையா இருக்காதீங்க.. கேள்வி கேளுங்க.. சண்டை போடுங்க..” என்று ஊக்கம் கொடுக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில்தான் கவுதம் கார்த்தின் நடிப்பே தெரிய வருகிறது.

நாயகி ‘தீபாலி’யாக நடித்திருக்கும் ரேவதி ஷர்மாவின் அழகு முகம்தான் படத்தில் இடையிடையே நமக்குக் கிடைக்கும் ரிலாக்ஸ். பாடல் காட்சிகளில் அந்த அழகான பாவாடை, தாவணியில் ஜொலிக்கிறார் ரேவதி.

கெளதம் தன்னைக் காதலிக்கிறான் என்பதையே அறியாதவராக இருப்பவர், அது தெரிந்தவுடன் கெளதமுடனேயே இருக்க விரும்புவதாகச் சொல்லும் காதல் உணர்வை மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஊரில் இருக்கும் பெண்களையெல்லாம் ஜஸ்டினிடம் அனுப்பி வைக்கும் ஜமீன்தாரான தன் அப்பாவிடம், “இதுக்கெல்லாம் சேர்த்து உன் பொண்ணுக்கு பெரிய சாவுதாம்பா வரணும்” என்று வெறுப்போடு சொல்லும் காட்சியில் மனதைத் தொடுகிறார். அதேபோல் தானே சவக்குழியில் இறங்கும் காட்சியில் பரிதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

கவுதம் கார்த்திக்கின் நண்பராக நடித்திருக்கும் புகழ் தனது பண்பட்ட நடிப்பைக் காண்பித்திருக்கிறார். நாக்கு அறுபட்ட நிலையில் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்பதை மக்களுக்குச் சொல்லிச் சொல்லி களைத்துப் போகும் அந்தக் காட்சியிலும், கிளைமாக்ஸ் காட்சியிலும் நம்மை கண் கலங்க வைத்திருக்கிறார்.

இதேபோல் மலையிறங்கி சென்று சுந்திரம் கிடைத்துவிட்டதை உணர்ந்து ஆனந்த பள்ளு பாடி நடனமாடி சந்தோஷத்துடன் ஊருக்குத் திரும்பி வரும் வழியில் ராபர்ட்டிடம் மாட்டிக் கொண்டு பரிதாபமாக உயிரைவிடும் அந்த நடிகரும், இதுவரையிலும் தான் காட்டியிருக்காத நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

ஆங்கிலேயே அதிகாரி ராபர்ட்டாக நடித்திருக்கும் ரிச்சர்ட் அஷ்ஷூம், அவரது மகன் ஜஸ்டினாக நடித்திருக்கும் ஜேசன் ஷாவும் வில்லத்தனத்தில் மிரட்டுயிருக்கிறார்கள்.

ஜமீன்தாரான மதுசூதனராவ் தனது ஜமீன் பட்டத்தையும் இழக்க மனசில்லாமல் ஆங்கிலயேர்களையும் எதிர்த்துப் பேச முடியாமல் தவிக்கும் தனது நடிப்பில் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

25 வருடங்களாக தனது கணவருடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தும் அந்தக் கணவருடன் பேசாமல் இருக்கும் அந்தப் பாட்டியும் கிளைமாக்ஸில் நம் மனதைத் தொட்டுவிட்டார்.  

ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் மட்டுமே. பின்னணி இசை தேவையில்லாமல் இருக்கிறது, மறைந்த கலை இயக்குநர் சந்தானத்தின் கலையுணர்வுக்கு ஒரு ‘ஜே’ போடலாம்.

1947 காலத்திய தமிழகக் கிராமத்தை நம் கண் முன்னே காட்டியிருக்கிறார். அந்தக் காலத்தில் மக்கள் பயன்படுத்திய பொருள்கள் முதல், மக்கள் பேசும் தமிழ் வார்த்தைகள் வரை மிகுந்த கவனிப்புடன்தான் இயக்குநர் டீம் செயல்பட்டிருக்கிறது. அக்காலத்திய வீடுகளை அட்டகாசமாக அமைத்தவர்கள், ராபர்ட்டின் வீடாக ஊட்டி பங்களாவைக் காட்டியது ஏன் என்றுதான் தெரியவில்லை.

மக்கள் அணிந்திருக்கும் ஆடைகள்கூட ஒன்றுபோலவே இருப்பதும் நெருடலாகத்தான் இருக்கிறது.  ஆனால், நாயகி மட்டும் தினமும் புதிது, புதிதாக உடைகளை அணிந்து வலம் வருகிறாரே.. அவருக்கு மட்டும் அவைகளெல்லாம் எங்கிருந்து கிடைத்ததாம்?…

மக்களை ராபர்ட், ஜஸ்டின் இருவரும் கொடுமைப்படுத்தும் காட்சிகள் கோரமாக இருக்கிறது. சவுக்கடி பட்டவர்களின் கதறல் நம்மை பயமுறுத்துகிறது.

ராபர்ட் அடிக்கடி சொல்லும் “இந்திய மக்களுக்கு இருக்கும் ‘பயம்’ என்கிற உணர்வுதான் நமது பலம்” என்கிற வசனம்தான் இந்தப் படம் சொல்லியிருக்கும் உண்மை.

படத்தின் நாயகனான பரமனுக்கு இந்திய நாடு, சுதந்திரப் போராட்டம், காந்தியார், சுந்திர உணர்வெல்லாம் இல்லை. ஆனால் அவரது காதலியான ரேவதியை ஜஸ்டின் படுக்கைக்கு அழைத்ததால்தான் அவனைக் கொலை செய்கிறார். மேலும் கிளைமாக்ஸில் ராபர்ட்டை எதிர்த்துக் கேள்வி கேட்கும்படி தூண்டுவதுகூட அவனது அடக்குமுறைகளைக் கண்டு அஞ்சித்தானே ஒழிய, சுதந்திர உணர்வுக்காக இல்லை. இந்த நிலையில் அந்த நாயகன் மீதும், அவனது வீர, தீரச் செயல் மீதும் நமக்கென்ன காதல் வந்துவிடப் போகிறது..?

இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி செங்காடு’ கிராமத்து மக்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்ற சஸ்பென்ஸ்தான் இந்தப் படத்தில் முக்கியமானது. அதைச் சுற்றியே முழு திரைக்கதையும் அமைக்கப்பட்டிருந்தால், படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.  

சுதந்திரம் கிடைப்பது ஊர் மக்களுக்கு எப்படியும் தெரிந்துவிடும் என்ற கிளைமாக்சை ஆரம்பத்திலேயே நாம் யூகித்துவிடலாம். ஆனால், அது எப்படி தெரிய வரப் போகிறது என்ற பதைபதைப்பை படத்தின் திரைக்கதையில் சேர்க்கத் தவறிவிட்டார்கள்.

அதைத் தவிர்த்துவிட்டு இடையில் காதல், தேடல், கொலை என்ற மற்றைய விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டதால் இனி இந்த மக்களுக்கு சுதந்திரம் கிடைத்த செய்தி தெரிந்தால் என்ன…? தெரியாவிட்டால்தான் என்ன? என்ற சலிப்புணர்வே நமக்கு ஏற்படுகிறது.

முதல் பாதியைவிட இரண்டாம் பாதி விறுவிறுப்பாக சென்றாலும், சில தேவையற்ற காட்சிகளினால் படத்தில் தொய்வு ஏற்பட்டு, எப்போது கிளைமாக்ஸ் வரும் என்ற எதிர்பார்ப்பை உண்டு செய்துவிட்டார் இயக்குநர்.

கதையின் காலக்கட்டத்தை மட்டும் நிஜமாக வைத்துக் கொண்டு முற்றிலும் நடந்திராத ஒரு கற்பனைக் கதையில் நமக்குள் சுதந்திர போராட்ட உணர்வையும், தேச பக்தியையும் தூண்டிவிட நினைத்த இயக்குநர், அதில் பாதியளவுதான் ஜெயித்திருக்கிறார்.

RATING : 3.5 / 5

Our Score