‘ராஜாதிராஜ ராஜ குலோத்துங்க ராஜமார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன்’, ‘ராவணன்’, ‘வாழ்க ஜனநாயகம்’, ‘வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு’, ‘என்னைப் பார் யோகம் வரும்’, ‘லொள்ளு தாதா பராக் பராக்’ போன்ற படங்களைத் தயாரித்த ராஜ்கென்னடி பட நிறுவனம் தற்போது தயாரித்த்திருக்கும் திரைப்படம் ‘அதிரடி’.
இந்தப் படத்தில் மன்சூர் அலிகான், மௌமிதா சௌத்ரி(மேற்கு வங்காளம்), சஹானா, பூவிஷா, கவ்யா, காயத்ரி, ராதா ரவி, செந்தில், சிசர் மனோகர், ஸ்ரீரங்கநாதன், சங்கர், கிங்காங், நெல்லை சிவா, போண்டாமணி, சுப்புராஜ், மஞ்சப்பை சேகர், நடேசன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். செந்தில் படகோட்டியாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார்.
இப்போது தமிழகத்தில் கிட்டத்தட்ட மறைந்துபோய்விட்ட சிலம்பம், களறி, வாள் வீச்சு, மான் கொம்பு போன்ற சண்டைப் பயிற்சிகளை இளைஞர்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுக்கும் பயில்வானாக கதாநாயகன் மன்சூரலிகான் நடித்திருக்கிறார்.
காலையில் இளைஞர்களுக்குப் பயிற்சிக் கொடுப்பவர், மாலையில் சமூக சேவை செய்யும் கதாநாயகனாக மாறுகிறார். மதுபானக் கடைகளுக்குச் சென்று குடிப்பழக்கம் மற்றும் போதைப் பொருட்கள் ஆகியவை கேடு விளைவிக்கும் எனக் கூறி அந்தப் பழக்கத்தில் இருப்பவர்களின் காலில் விழுந்து தடுக்கிறார்.
நிஜமான பயில்வானை தேடிப் படமெடுக்க நினைக்கும் ஒரு தயாரிப்பாளருக்கு மனசூரலிகானுடைய இந்த அதிரடி நடவடிக்கைகள் பிடித்துப்போக அவரையே படத்தின் கதாநாயகனாக ஆக்குகிறார்.
அப்போது மன்சூருக்கு பல்வேறு இடங்களில் இருந்து எதிரிகளால் தொல்லை கொடுக்கப்படுகிறது. இன்னொரு பக்கம் தயாரிப்பாளருடன் இருப்பவர்கள் அவரை ஏமாற்றி பணத்தை விரயம் செய்கின்றனர். இதையெல்லாம் முறியடித்து படத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தாரா மன்சூரலிகான்..? எதிரிகளின் சூழ்ச்சி வெல்லப்பட்டதா..? என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையாம்.
சீனாவிலிருந்து பிரத்தியோகமாக சண்டை பயிற்சியாளர்களை வரவழைத்து ஒரு சண்டை காட்சி படமாக்கப்படவுள்ளது. மேலும் மூன்று அதிரடி சண்டைக் காட்சிகளும், பரபரப்பான 2 சேஸிங் காட்சிகளும் படத்தை பேச வைக்குமாம்.
இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில், மீனவ குப்பங்கள், கடற்கரை ஒரம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது.
தொழில் நுட்பக் கலைஞர்கள்
இயக்கம் – பாலு ஆனந்த்
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு – மன்சூர் அலிகான்
ஒளிப்பதிவு – பிரெடெரிக்
எடிட்டிங் – கேசவன்
கலை – சுரேஷ்
தயாரிப்பு நிர்வாகம் – அகமது ஷெரீப்
மக்கள் தொடர்பு – எஸ். செல்வரகு









