ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருகிறார் கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் C.J.ஜெயக்குமார்.
ஏற்கனவே கேமியோ பிலிம்ஸ் ஜெயக்குமார் மற்றும் ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் உருவான ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ திரைப்படம் பல இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது மட்டுமின்றி, வர்த்தக ரீதியாகவும், வணீக ரீதியாகவும் சக்கைப்போடு போட்டு விட்டது.
மேலும் ஜி.வி.பிரகாஷை தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், ஓர் நிலையான ஹீரோவாகவும் உருவாக்கியது கேமியோ பிலிம்ஸின் ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படம்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.
கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் தற்போது அதர்வா நடிக்கும் புதிய படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தை ‘டிமாண்டி காலனி’ படத்தின் இயக்குநரான அஜய் ஞானமுத்து இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தக ரீதியாக மட்டுமில்லாமல், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து, இந்த மூவர் கூட்டணியானது வெற்றி வாகையை சூடும் என்று நம்பிக்கையுடன் சொல்லலாம்.
“ஒரு தரப்பு மக்களை மட்டும் குறி வைத்து படத்தை தயாரிப்பது எங்களின் நோக்கம் கிடையாது. மாறாக எங்களின் படமானது குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோருக்கும் போய் சேர வேண்டும். அதுவே எங்களின் முதன்மை குறிக்கோள். அந்த வகையில், அதர்வா மற்றும் அஜய் ஞானமுத்துவின் கூட்டணி, எங்களின் எதிர்பார்ப்புகளைவிட ஒரு படி மேலாகவே இருக்கின்றது. என்னை பொறுத்தவரை அதர்வா, தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றுதான் சொல்லுவேன்.
எந்தக் கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அதை தத்ரூபமாக திரையில் வெளிப்படுத்தும் திறமையும், ஆற்றலும் அவரிடம் உள்ளது. நிச்சயமாக இந்த திரைப்படம் அவரை வெற்றி சிம்மாசனத்தில் அமர்த்தும்.
அதே போல் தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான கதைக்களத்தால் தனக்கென்று ஒரு இடத்தை மக்கள் மத்தியில் பெற்று, வெற்றி படிகளை ஏறி வரும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவை இந்த திரைப்படம் உலக தரத்திற்கு உயர்த்தும் என்பதிலும் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
வர்த்தக ரீதியாக வெற்றி பெற தேவையான அனைத்து அம்சங்களும் இந்த திரைப்படத்தில் அமைந்திருக்கிறது. தற்போது இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை தேர்ந்தேடுக்கும் தேர்வில் நாங்கள் மும்முரமாக செயல்பட்டு வருகிறோம்.
அதுமட்டுமின்றி. இந்திய அளவில் பிரபலமான ஒரு நட்சத்திர நடிகரை, ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் அது யாரென்று ரசிகர்களுக்கு கண்டிப்பாக தெரியப்படுத்துவோம்.
வருகின்ற செப்டம்பர் மாதம் எங்களின் படப்பிடிப்பு வேலைகள் துவங்க உள்ளது…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் கேமியோ பிலிம்ஸின் உரிமையாளரான தயாரிப்பாளர் C J.ஜெயக்குமார்.










