இயக்குநர் அறிவழகன் – நடிகர் அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து பெரும் பொருட் செலவில் படத்தை தயாரிக்கவுள்ளார் ‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளரான விஜய ராகவேந்திரா.
‘செக்கச் சிவந்த வானம்’, ‘தடம்’ ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியால் சக்சஸ் நாயகனாக வலம் வரும் அருண் விஜய், இந்தப் படத்திற்காக பக்காவாக தயாராகி நடிக்கவிருக்கிறார்.
நாயகியாக ரெஜினா கேஸண்ட்ரா நடிக்க, மற்றுமொரு நாயகியாக ஸ்டெபி பட்டேல் அறிமுகமாகிறார். நடிகர் பகவதி பெருமாள் படத்தில் முக்கிய வேடமேற்றிருக்கிறார்.
அருண் விஜய்யை வைத்து ‘குற்றம் 23’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய அறிவழகன், இம்முறை ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படத்தை இயக்குகிறார். பெரும் பொருட்செலவில் இந்தப் படம் தயாராகிறது.
அறிவழகன் இயக்கம் செய்த படங்களிலேயே இதுதான் அதிகப் பொருட் செலவில் தயாரிக்கப்பட்டதாக இருக்குமாம். சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
இத்திரைப்படம் குறித்து இயக்குநர் அறிவழகன் பேசும்போது, “குற்றம் 23′ படத்துக்குப் பிறகு மீண்டும் அருண் விஜய் சாரை இயக்கவிருப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
தமிழ் திரையுலகில் இதுவரையிலும் வந்திராத புதுமையான ஒரு ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் கதையைக் கொண்டது இந்தப் படம். எனது முந்தைய படங்களைவிட இதில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும். கண்டிப்பாக அது பேசப்படும்…” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இப்படத்திற்காக சிறப்பான தொழில் நுட்பக் குழுவினர் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். B.ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார். இவர் ‘ஆர்யா 2’, ‘ஆரஞ்ச்’ உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் பணிபுரிந்தவர். தற்போது இசையமைப்பில் தனிமுத்திரை பதித்து வரும் சாம் சி.எஸ், இசையமைப்பாளராக பணி புரிகிறார். ‘குற்றம் 23’ படத்துக்கு கலை இயக்குநராகப் பணி புரிந்த சக்தி வெங்கட்ராஜ் இதிலும் கலை இயக்குநராக ஒப்பந்தமாகியுள்ளார். ‘வல்லினம்’ படத்தின் சிறந்த படத் தொகுப்புக்காக தேசிய விருதினை வென்ற வி.ஜே.சாபு ஜோசப் இந்தப் படத்தில் படத் தொகுப்பாளராகப் பணிபுரிய இருக்கிறார், ரெட் டாட் பவன் விளம்பரப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
இன்று பூஜையோடு துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அருண் விஜய், இயக்குநர் அறிவழகன் உள்ளிட்ட படக் குழுவினரும், நடிகர் விஜயகுமார் உள்பட பல முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.











