இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இன்னும் பெயர் வைக்கப்படாத இத்திரைப்படம் அருண் விஜய் நடிக்கும் 33-வது திரைப்படமாகும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் 3-ம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு ஹரிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், படப்பிடிப்பு தடைப்பட்டது. பின்பு கரோனா 2-வது அலையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
கொரோனா அச்சுறுத்தல் குறைந்து தற்போது திரைப்பட படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டாலும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்காமலேயே இருந்தது.
தற்போது அனைத்து நடிகர்களின் தேதிகளும் கிடைத்திருப்பதால் நேற்று(ஜூலை 28) ராமேஸ்வரத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதனை நாயகன் அருண் விஜய் தனது டிவீட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தப் படத்தில் ப்ரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ராதிகா, அம்மு அபிராமி, ராஜேஷ், ‘தலைவாசல்’ விஜய், இமான் அண்ணாச்சி, போஸ் வெங்கட், ‘குக் வித் கோமாளி’ புகழ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சக்திவேல், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், படத் தொகுப்பாளராக ஆண்டனி, கலை இயக்குநராக சக்தி வெங்கட் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.