‘ஐ’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பாதியிலேயே கிளம்பிச் சென்றாலும், அர்னால்டு தமிழ் ரசிகர்களையும், இந்த விழாவையும் மறக்கவில்லை.. மனிதர் அமெரிக்கா போய் சேர்ந்தவுடனேயே மறக்காமல் கடிதம் மூலம் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
அந்தக் கடிதம் இது :
அந்த கடிதத்தில் அர்னால்ட் கூறியிருப்பது இதுதான்…
எனது சென்னை பயணத்தை வெற்றிகரமாக்கிய உங்களது அனைத்து நிகழ்வுகளுக்கும் எனது நன்றி..
‘ஐ’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் நானும் ஒரு அங்கமாக இருந்ததில் பெருமைப்படுகிறேன். நீங்களும், உங்கள் சகோதரரும் இது போன்ற ஒரு திரைப்படத்தை தயாரித்ததற்கு மட்டுமல்லாமல், நான் இதுவரையில் எங்கேயும் பார்த்திராத வகையில் நடத்திய இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்காக அதிகம் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
நான் அங்கு வந்து சேர்ந்த நொடியிலிருந்து என்னைக் கவனித்துக் கொண்டவிதத்தில் ஆச்சரியப்பட வைத்திருக்கிறீர்கள். தங்கும் இடம், சுவையான உணவு என எனக்குத் தேவையான அனைத்தும் கச்சிதமாக இருந்தது. இதையெல்லாம்விட பாடல் வெளியீட்டு விழா சிகரம் தொட்டதுபோல இருந்தது.
நான், ‘ஆஸ்கர் விருது’ வழங்கும் விழா, ‘கோல்டன் குளோப் விருது’ வழங்கும் விழா மற்றும் பல விழாக்களில் நான் கலந்து கொண்டிருக்கிறேன்.. ஆனால், ஒரு மேடை நிகழ்ச்சியை எப்படி நடத்த வேண்டும் என அவர்கள் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது.
நிகழ்ச்சி தங்கு தடையில்லாமல் நடந்தது. அரங்கத்தில் இருந்த ரசிகர்களின் உற்சாகம், ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் உத்வேகம் தருமளவுக்கு இருந்தது. பாடி பில்டர்களை மேடையேற்றியது சிறப்பான நிகழ்வு. அவர்களது நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களுடனேயே என்னால் மேடையேறுவதை தடுக்க முடியவில்லை. ஏனென்றால், அதுதான் நான் மேடையேற சிறந்த தருணமாக நினைத்தேன்.
உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நன்றி. உங்களுடன் இணைந்து மீண்டும் பணியாற்றும் நாளை எதிர்நோக்குகிறேன்.
இவ்வாறு கூறியிருக்கிறார் அர்னால்ட்.