இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் நடிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் திரைப்படம் ‘அரிசி’.
இந்தப் படத்தை மோனிகா புரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் P.சண்முகம் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளரான தோழர் இரா.முத்தரசன் விவசாயியாக நடிக்கிறார். அவரது மனைவியாக ரஷ்யா மாயன் நடிக்கிறார். இவர்களுடன் சிசர் மனோகர், கோவி.இளங்கோ, ராஜா திருநாவுக்கரசு, அர்ஜுன்ராஜ், மகிமை ராஜ், வையகன், அன்பு ராணி, சுபா, பழனி மணிசேகரன், கொண்டைமண்டை ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஜான்சன் ஒளிப்பதிவு செய்கிறார். அசோக் சார்லஸ் படத்தொகுப்பு செய்கிறார். சேது ரமேஷ் அரங்கம் அமைக்கிறார். மகேந்திர பிரசாத் இணைத் தயாரிப்பு செய்கிறார். பிரபல இயக்குநர்களிடம் பணியாற்றிய அனுபவம் கொண்ட புதியவரான S.A.விஜயகுமார் கதை, திரைக்கதை,வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்குகிறார்.
இந்த அரிசி படம் பற்றி இயக்குநர் S.A.விஜயகுமார் பேசும்போது, “இந்த ‘அரிசி’ படம் முழுக்க, முழுக்க விவசாய பின்னணியில் உருவாகும் படம். ‘அரிசி’ என்பது வெறும் உணவு தானியம் மட்டும் அல்ல..! மனித வாழ்வியலின் உயிர் நாடி என்பதனை இத்தலைமுறைக்கு எடுத்து சொல்வதே இந்த ‘அரிசி’ படத்தின் சிறப்பு!
இப்படத்தில் விவசாயியாக நடித்திருக்கும் தோழர் இரா.முத்தரசன் பேசும் ஒவ்வொரு வசனங்களும் அர்த்தம் நிறைந்ததாக இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் குடவாசல் அருகே உள்ள சிறு, சிறு கிராமங்களில் 35 நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. அப்பகுதி விவசாயிகளும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்…” என்றார் இயக்குநர் S.A.விஜயகுமார்.














