full screen background image

அரிமா நம்பி – சினிமா விமர்சனம்

அரிமா நம்பி – சினிமா விமர்சனம்

பார்த்துப் பார்த்துச் சலித்துப் போன கதைதான்.. ஆனால் விஷுவலில், புதிய திரைக்கதையில் அசத்தியிருக்கிறார்கள். ஒரு மத்திய அமைச்சரின் வேலைக்கே உலை வைக்கும்விதமான காட்சிகள் அடங்கிய மெமரி கார்டை மீட்க வேண்டி ஒரு டிவி சேனல் அதிபரின் மகளைக் கடத்துகிறார்கள். அவளுடைய காதலனான ஹீரோ தற்செயலாக இதில் சம்பந்தப்பட.. கடத்தப்பட்ட காதலியை  எப்படி மீட்கிறான் என்பதுதான் கதை..!

இந்த மெமரி கார்டு, சிம் கார்டு, செல்போன் இவைகளை வைத்து கடந்த சில ஆண்டுகளில் ஹாலிவுட், பாலிவுட், கோடம்பாக்கத்தில் நிறைய கதைகள் வந்துவிட்டன. இருந்தாலும் புத்திசாலித்தனமான வேகமான திரைக்கதையால் இந்தப் படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

முதல் காட்சியிலேயே ஒரு கலாச்சாரப் புரட்சியை எடுத்து வைத்திருக்கும் இயக்குநர் இதற்காக பிரஸ்மீட்டில் சொன்ன பதிலை கேட்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.. “பெண்கள் பாருக்கு சென்று குடிப்பது போல காட்சிகள் வைத்திருக்கிறீர்களே.. இது நல்லதா..?” என்ற கேள்விக்கு.. “ஆண்கள் மட்டும் குடிக்கிறார்களே.. பெண்களும் குடிக்கட்டுமே என்பதை சொல்லத்தான் அந்தக் காட்சியை வைத்தேன்..” என்றார் இயக்குநர். வாழ்வாங்கு வாழ்வீர் இயக்குநர் அவர்களே..! பாரில் மட்டுமல்ல.. ஹீரோவை வீட்டுக்கு அழைத்துச் சென்று அங்கேயும் வோட்கா பாட்டிலை காலி செய்கிறார் ஹீரோயின். தைரியமான கேரக்டர்தான்..

இதற்குப் பின்தான் அதகளம் ஏற்படுகிறது.. ஹீரோயினை கடத்த.. ஹீரோ போலீஸ் ஸ்டேஷனுக்கு போக.. சப்-இன்ஸ்பெக்டர் வந்து தேடிப் பார்க்க.. வீடு கலையாமல் அப்படியே இருக்க.. ஏதோ தவறு இருக்கிறதே என்று ஊகித்து ஹீரோவும், சப்-இன்ஸ்பெக்டரும் ஹீரோயினின் அப்பா வசிக்கும் ஈசிஆர் ரோடு வீட்டுக்குச் சென்று பார்க்க.. அங்கே நடக்கும் துப்பாக்கிச் சூட்டில் ஹீரோயினின் அப்பா சாகிறார். ரோட்டில் நடக்கும் சண்டையில் சப்-இன்ஸ்பெக்டர் இறக்கிறார்.

சாகும் தறுவாயில் அந்த நல்ல சப்-இன்ஸ்பெக்டர்.. “நீ நல்லா ஸ்டண்ட் போடுறப்பா.. இந்தப் பிரச்சினையை இப்படியே விட்ராத.. எப்படியாச்சும் தேடி உண்மையைக் கண்டுபிடி…” என்று சொல்லிவிட்டே சாகிறார்.. இதன் பின்பு ஹீரோ அவர்களைத் தேடி ஓட.. படமும் ரன் வேகத்தில் ஓடுகிறது.. ஆனாலும் அநியாயத்திற்கு லாஜிக் ஓட்டைகள்..!

அந்தப் பகுதி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் சொல்லிவிட்டுத்தான் கடத்தியிருக்கிறார்கள். அதே சம்பவத்தைப் பற்றி புகார் சொல்ல ஒருவன் வந்திருக்கிறான் என்றால் அந்த இன்ஸ்பெக்டருக்கு ஏதாவது அதிர்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டுமா இல்லையா..? ம்ஹூம்.. எரிந்து விழுகிறார் இன்ஸு..

ஒரு மத்திய அமைச்சர் செய்த கொலை அந்த மெமரி கார்டில் பதிவாகியிருக்கிறது. அது தற்செயலாக ஒரு டிவி சேனல் அதிபரின் கையில் சிக்கிவிட்டது. அதை மீட்க போலீஸை அனுப்பி மிரட்டுகிறார்கள். மகளைக் கடத்துகிறார்கள்.. இதெல்லாம் நடக்குற விஷயமா..? மீடியாவை இவ்வளவு எளிதா எடை போட்டுட்டாரே இந்த இயக்குநர்..? ஒரு இன்ஸ்பெக்டர் ஒரு சேனல் அதிபரை நேரில் சந்தித்து மிரட்டுகிறாராம்.. இது எந்த ஊர்ல..? (ஆனாலும் இது போன ஆட்சிக் காலத்தில் சென்னையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் என்று மீடியாவுலகம் இப்போது கிசுகிசுக்கிறது..)

சாகும் நிலையில் இருக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ஹீரோவிடம், “இதுல ஏதோ மர்மம் இருக்கு.. கண்டுபிடி”ன்னு சொன்னாலும் நம்பலாம்.. “நீ நல்ல சண்டை போடுற.. அவனுக துப்பாக்கிதான் வைச்சிருக்கானுக.. அதுனால உன்னால அவனுகளைத் தோக்கடிக்க முடியும்.. விடாத.. பிடி.”. என்கிறார்.. எதற்கு இந்த உசுப்பேற்றல்..?

ஒரு மத்திய அமைச்சர், மாநில ஆளும் அரசுடன் கூட்டணி கட்சியாகவே இருந்தாலும் அதிகப்பட்சம் என்ன செய்துவிட முடியும்..? மாநிலத்தில் இருக்கும் தன் துறையைத்தான்  கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.. ஆட்டிப் படைக்க முடியும்.. ஆனால், தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மாநில அரசின் உள்துறையை கட்டுப்படுத்துவது போலவும், மாநில போலீஸுக்கே ஆர்டர் போடுவது போலவும் காட்சிகளை வைத்து கொஞ்சம் சிரிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர்.

போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கே நேரில் வரும் மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஹீரோவை வடபழனி ஏரியாவில் பார்த்தவுடனேயே கொல்ல உத்தரவிடுகிறார். இவர் உத்தரவை கூடுதல் டிஜிபி ஒருவர் அப்படியே கடமையாற்றுகிறாராம்.. தெலுங்கு கதாசிரியர்கள் மட்டுமே இப்படியெல்லாம் நேக்காக யோசிப்பார்கள்..!

தமிழ்நாட்டில் இதெல்லாம் நடக்குற காரியமா..? ஏற்கெனவே மத்திய அமைச்சர்கள் மூன்று பேர் சிறைக்குள் தள்ளப்பட்ட கதையைத்தான் தமிழகம் சந்தித்திருக்கிறதே..? இயக்குநர் பேப்பரே படிப்பதில்லை போலும்..!

ஹீரோ விக்ரம் பிரபுவிற்கு இது மூன்றாவது படம்.. மனுஷனுக்கு ரொமான்ஸ்தான் வராமல் பாடாய்படுத்துகிறது. ஆனால் ஆக்சனில் பின்னுகிறார்.. போலீஸ் ஸ்டேஷனில் திக்கித் திணறி ஒப்பிக்கும் காட்சியில் நடிப்பை சொல்ல வைத்திருக்கிறார்.. பாரில் நடக்கும் காட்சிகளில் ரொம்ப ரொம்ப சாதாரணமாகத் தோன்றுகிறார். இது போன்ற படங்களின் ஹீரோக்களுக்கு பார்த்தவுடன் ஒரு கவர்ச்சி வேண்டும் என்பார்கள்.. அதுதான் மிஸ்ஸிங்.. மற்றபடி இறுதிவரையில் இவர் ஓடும் ஓட்டத்தினால்தான் படமே இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது..

ஹீரோயின் பிரியா ஆனந்த்.. ரொம்ப தைரியமாக மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடித்திருக்கிறார். அதற்காக ஒரு பாராட்டு. இத்தனை அழகா இவர்..? இதற்கு முன்பு இவர் நடித்த படங்களின் கேமிராமேன்களிடம் கேட்க வேண்டி கேள்வி இது..? வோட்காவை முழுதாக சோடா கலக்காமல் குடிக்க முடிவெடுத்து சொல்லும் காட்சியில் தயக்கமின்று கை தட்ட வைத்தார்.. பாடல் காட்சிகளில் காஸ்ட்யூம்ஸ் பாதி.. மீதியில் கால்வாசியை கேமிராவும் பிடுங்கிக் கொள்ள மிகச் சரியாக இவரது அழகே காட்சியை பரிபூரணமாக்குகிறது..

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது எம்.எஸ்.பாஸ்கரை.. ஒரு இன்வெஸ்டிகேட்டிவ் ஆபீஸர் எப்படி பேச வேண்டும் என்பதற்கு இவர் ஹீரோயினின் அப்பாவிடம் பேசுகின்ற காட்சியே சாட்சி.. மிகவும் யதார்த்தமாக, அடக்கமாக, அமைதியாக வாட்ச்மேனை அதட்டி வேலை வாங்கும்விதமும் அவர் போட்டிருக்கும் காக்கிச் சட்டைக்குப் பொருத்தமானது..! ஒரு சில காட்சிகளே ஆனாலும் மறக்க முடியாத கேரக்டர் பாஸ்கருக்கு..!

தெலுங்கு ஹீரோ சக்கரவர்த்தி வில்லனாக வந்திருக்கிறார்.. ஸ்டைலிஷான நடிப்பு.. ஒரு மத்திய அமைச்சருக்கே உரித்தான பந்தா.. அந்த உடல் மொழி.. எல்லாம் சரி.. ஆனால் “உன்னைப் போல அழகியை நான் பார்த்ததே இல்லை..” என்று லேகா வாஷிங்டனை பார்த்து சொல்கிறார் பாருங்கள்.. அது ஒன்றுதான் சகிக்கவில்லை..! ஐயோடா சாமி..!

கிளைமாக்ஸில் ஏதோ ஒன்று நடக்கிறது என்பதை நமக்கு ஊகிக்கக் கொடுத்துவிட்டு சக்கரவர்த்தியை அம்பவோவென விட்டுவிட்டார் இயக்குநர். அதுவும் டிவியில் லைவ் ரிலே ஆகி.. அந்தக் களபரத்திலும் மனிதரை ரசிக்க முடிந்தது..!

அருள்தாஸ் கச்சிதமான அடியாள் வேடம்.. பணத்தின் தேவை கருதி செல்போனில் நைச்சியமாகப் பேசுவதும்.. வங்கியில் இருந்து துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டவுடன் யார்ரா இவன் என்று தன் கையாளிடம் கேட்டுவிட்டு முழிப்பதும் நல்ல காமெடி.. இந்த காட்சியில் இருந்த பரபர திரைக்கதையில் இதனுள் இருந்த மிகப் பெரிய ஓட்டையை மறந்தே போனார்கள் ரசிகர்கள்..

பணத்திற்காகத்தான் இத்தனையும் செய்யும் அருள்தாஸ், அந்தப் பணமே தங்கள் கையைவிட்டுப் போய்விட்டதை உணர்ந்தும் சர்வசாதாரணமாக இருப்பதும்.. லாட்ஜுக்கு திரும்பியவுடன் அடியாளை ஒரு பெண் இழுக்க.. “போறியா.. போ..” என்று ஜாலியாக சிரித்தபடியே சொல்லிவிட்டுப் போவதும் என்னவொரு லாஜிக் ஓட்டை..? எப்படி முடியும் இந்த ரவுடிகளால்..?

இதுவரைக்கும் எத்தனையோ இசையமைப்பாளர்களுக்கு செவிட்ட்டி அடித்திருக்கும் டிரம்ஸ் சிவமணி முதல்முறையாக இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராகியிருக்கிறார். முதல் பாடலில் காது கிழிந்தது.. இரண்டாவது பாடலில் அதற்கு நேர் எதிர்.. வார்த்தைகளை வாசிக்கவிட்டு பின்பு மெதுவாக இடையிடையே டிரம்ஸை தடவியிருக்கிறார் சிவமணி.. ஆனால் பின்னணி இசையில் தாலாட்டியிருக்கிறார்.. மெல்லிய இசை.. தேவையான இடத்தில் மட்டுமே டிரம்ஸ்.. வெல்டன் ஸார்..!

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு இந்தப் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம். முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் ஸ்கிரீனைவிட்டு அகலவில்லை கண்கள்.. பெரிய பட்ஜெட்டுதான்.. பெரிய சம்பளம்தான் என்றாலும், இந்த அளவுக்கு குவாலிட்டி கிடைக்குமென்றால் நிச்சயமாக இவரை மாதிரியானவர்களை பயன்படுத்தலாம்..!

ஒரு சினிமாவுக்குத் தேவை தியேட்டருக்குள் இருக்கும் ரசிகனை வேறு எதையும் யோசிக்க வைக்கக் கூடாது என்பதுதான்.. ஆயிரம் குறைகள் இருந்தாலும், படத்தின் செய்நேர்த்தி அனைத்தையும் புறக்கணித்துவிட்டு படத்தை பார்க்கவும் வைத்து, மற்றவர்களிடத்தில் சொல்லவும் வைத்திருக்கிறது..!

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் பிரமாண்டமான செலவிற்கு உரிய மரியாதையை இந்தப் படத்தில் வழங்கியிருக்கிறார் படத்தின் இயக்குநர். அவருக்கு நமது பாராட்டுக்கள்..

ஒரு விறுவிறுப்பான திரில்லரை காண வேண்டுமெனில் அவசியம் இந்தப் படத்தை காணுங்கள்..

Our Score