புரட்சிகரமான ‘அரங்கேற்றம்’ படத்தினை அரங்கேற்றியவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்

புரட்சிகரமான ‘அரங்கேற்றம்’ படத்தினை அரங்கேற்றியவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்

பிறர் தொடத் தயங்கும் கதைகளை துணிந்து படமாக்கும் துணிச்சல்மிக்கவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். அந்த வகையில் அவர் எடுத்த முதல் படம் 'அரங்கேற்றம்' 1973-ம் ஆண்டு வெளிவந்தது.

Arrangetram

வறுமையினாலும், சந்தர்பப சூழ்நிலையினாலும் வழி தவறிச் செல்லும் ஒரு பெண்ணைச் சுற்றிச் சுழலும் கதை. வழுக்கி விழுந்த பெண்ணாக பிரமிளா நடித்தார். அவருக்கு வாழ்வு கொடுக்க முன் வரும் இளைஞனாக சிவகுமார் நடித்தார்.

'களத்தூர் கண்ணம்மா'வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமலஹாசன், வாலிபனாக இப்படத்தில் முதன் முதலாகத் தோன்றினார்.

இந்தப் படம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. கதையை சில பத்திரிகைகள் பாராட்டின; சில பத்திரிகைகள் தாக்கின. படம் பார்த்த பலர் படத்தை 'ஓகோ' என்று புகழ்ந்தனர்; சிலர் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.

கதாநாயகி ஒரு பிராமணப் பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருந்ததால், பிராமணர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

இது பற்றி இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அளித்த பேட்டியில், "சூழ்நிலை காரணமான தவறான பாதைக்குப் போனவர்கள் எந்த ஜாதியிலும் இல்லாமல் இல்லை. இந்தப் படத்தைப் பொறுத்தவரை, வறுமையின் எல்லையை படம் பிடித்துக் காட்ட விரும்பினேன். அதற்கு வைதீக பிராமணக் குடும்பம் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதை கருவாகக் கொண்டு, கற்பனையில் கதையை உருவாக்கினேன்.

திரைப்படத் துறை ஒரு தொழில்தான். மறுக்கவில்லை. ஆனால் அது கலப்படம் இல்லாமல் இருக்கவேண்டும். ஏதேனும் ஒரு விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும் என்ற ஆர்வத்தின் அடிப்படையில் திரைப்படங்கள் அமையும்போதுதான், திரைப்படத் தொழில் சமுதாயத்திற்கு தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடித்ததாக கருதமுடியும்.

ஏற்கனவே சில திரைப்படங்களில் ஆங்காங்கே `குடும்பக் கட்டுப்பாடு' மென்மையாக வலியுறுத்தப்பட்டு இருந்தது. என்றாலும், முழுத் திரைக்கதை அமைப்பிலும் குடும்பக் கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டு இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால், `இல்லை' என்ற பதில்தான் என் நினைவுக்கு எட்டியவரை தோன்றியது. எனவேதான், 'அரங்கேற்ற'த்தின் மூலக் கருத்தாக அதை வைத்தேன்.

எந்த ஒரு விஷயத்தை மேலெழுந்தவாரியாகவும் சொல்ல முடியும். ஆனால் 'அரங்கேற்றம்' கதையைப் பொறுத்தவரை அவ்வாறு சொல்ல நான் விரும்பவில்லை.

கற்பனையைவிட உண்மை சில நேரங்களில் விசித்திரமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஏன், பயங்கரமான உண்மைகளும் உண்டு. சில உண்மைகளைச் சொல்வதற்கு நாம் அஞ்சுகிறோம். ஆனால் 'அரங்கேற்ற'த்தில் அதைச் சொல்ல நான் அஞ்சவில்லை..'' என்றார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.

'அரங்கேற்றம்' படத்தின் கதை பற்றி வாதப் பிரதிவாதங்களும், பட்டிமன்றங்களும் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், படம் மக்கள் ஆதரவுடன் வெற்றிநடைபோட்டது.

தமிழ்த்திரை உலக வரலாற்றில் 'அரங்கேற்றம்' ஒரு மைல் கல் என்றால் அது மிகையல்ல.