“அழகு மனதில்தான் இருக்கிறது. உடம்பில் அல்ல..” நடிகை அனுஷ்காவின் பொன்மொழி..!

“அழகு மனதில்தான் இருக்கிறது. உடம்பில் அல்ல..” நடிகை அனுஷ்காவின் பொன்மொழி..!

ஆர்யா-அனுஷ்கா ஜோடியாக நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் படம், ‘இஞ்சி இடுப்பழகி.’ இந்த படத்தை பி.வி.பி. நிறுவனம் தயாரித்து இருக்கிறது. பிரபல தெலுங்கு டைரக்டர் கே.ராகவேந்திரராவின் மகன் கே.எஸ்.பிரகாஷ்ராவ் டைரக்டு செய்து இருக்கிறார்.

படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.பாடல்களை, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் வெளியிட்டார்.

IMG_0232

விழாவில் நடிகர்கள் ஆர்யா, கிருஷ்ணா, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி.சிவா, இந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் ரவி கொட்டாரக்கரா, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை செயலாளர் காட்ரகட்ட பிரசாத், முன்னாள் செயலாளர் எல்.சுரேஷ், பட அதிபர்கள் கே.ஈ.ஞானவேல்ராஜா, ஏ.எல்.அழகப்பன், தனஞ்செயன், கே.எஸ்.சிவா, டைரக்டர்கள் மோகன் ராஜா, மகிழ் திருமேனி, இசையமைப்பாளர் மரகதமணி, பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

IMG_0138

இந்த விழாவில் நடிகை அனுஷ்கா பேசும்போது, “இந்த ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் நல்ல கதையும் இருக்கிறது. நல்ல கருத்தும் இருக்கிறது. இது எனக்கு மிகவும் முக்கியமான படம். காரணம் வெறும் கதாநாயகியாக மட்டுமில்லாமல் பெண்களுக்கு உள்ள பிரச்சினையை பேசும் படமாகவும் இது இருக்கிறது.

சின்ன வயதில் என்னை அழகாக இருப்பதாக பலர் சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்டு, கேட்டு எனக்குப் பழகி விட்டது. எனவேதான் இந்தப் படத்தில் குண்டு பெண்ணாக வர வேண்டும் என்று டைரக்டர் சொன்னதும், உடனே நடிக்க சம்மதித்தேன்.

கேமிரா வித்தைகளெல்லாம் இல்லாமல் நிறைய சாப்பிட்டு, சாப்பிட்டு குண்டாகி நடித்தேன். பொதுவாக ஆண்கள் எல்லாரும் ஒல்லியாக இருக்கும் பெண்களைத்தான் திருமணம் செய்ய விரும்புவார்கள். குண்டாக இருக்கும் பெண்களை வெறுத்து ஒதுக்குவார்கள். இது அந்தப் பெண்களுக்கு எவ்வளவு பெரிய மன வலியை ஏற்படுத்தும் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

ஒவ்வொரு பெண்ணும் தான் குண்டாக இருக்கிறோமே... அல்லது ஒல்லியாக இருக்கிறோமே என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். அழகு மனதில்தான் இருக்கிறது. உடம்பில் அல்ல. அதனால் அழகாக இல்லையே என்று எந்த பெண்ணும் கவலைப்பட தேவையில்லை.

இந்தப் படம் வெளியான பிறகு குண்டாக இருக்கும் பெண்களை ஆண்களும் விரும்புவார்கள். அப்படியொரு சூழலை இந்தப் படம் நிச்சயம் ஏற்படுத்தும்..” என்றார் நம்பிக்கையாக.

பட அதிபர் பி.வி.பொட்லூரி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை நடிகை ஆர்த்தி தொகுத்து வழங்கினார்.