இப்போதுதான் வருமான வரித் துறை பஞ்சாயத்தில் இருந்து தப்பித்தார் சமந்தா. அதற்குள்ளாக அடுத்த பிரச்சினை..!
10 எண்றதுக்குள்ள திரைப்படத்தின் சமந்தா இரட்டை வேடத்தில் நடித்துள்ளது தெரிந்ததே. அதில் வட மாநிலப் பெண்ணின் கேரக்டராக வரும் ஒரு காட்சியில் புகை பிடிப்பார். அந்தக் காட்சியை திரைப்படத்தின் திருட்டு விசிடியில் படம் பிடித்து யாரோ இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்தப் புகைப்படத்தை தனது ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார் சமந்தார். புகைப்பிடிப்பதை பெருமையாக நினைத்து வெளியிட்டது ஒரு சர்ச்சை என்றால், படத்தின் டிவிடியே இன்னமும் வெளியாகாமல் இருக்கும்போது திருட்டு விசிடியில் படம் பிடிக்கப்பட்ட காட்சியை அப்படத்தின் ஹீரோயினே இப்படி பகிரங்கமாக பதிவேற்றலாமா என்ற சர்ச்சையும் சேர்ந்து சமந்தாவை சூழ்ந்து கொண்டது.
இந்தச் சர்ச்சை கண்டனக் குரல்களாக சமந்தாவுக்கு எதிராக எழ.. சட்டென்று அந்தப் புகைப்படங்களை சமர்த்தாக நீக்கிவிட்டார் சமந்தா. ஆனாலும் டவுன்லோடிட்டவர்கள் இதனை வைரலாக பரவச் செய்ய.. சமந்தா பதிவிட்டதைவிடவும் அதிகமாக இது இப்போது இணையத்தில் பரவி வருகிறது.
திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கலைப்புலி சேகரன் இது தொடர்பாக நடிகை சமந்தாவுக்கு கடும் கண்டனத்தினை தெரிவித்துள்ளார்.
“புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு எதிராக இப்போது விழிப்புணர்வு இயக்கங்கள் நடத்தப்படுகின்றன. தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் வீடு, வீடாக போய் புகைப்பிடிப்பதால் வரும் தீமைகளை எடுத்துச் சொல்லி வருகிறார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்களே புகைப் பிடிக்கும் காட்சியில் இனிமேல் நடிப்பதில்லை என்று உறுதியுடன் உள்ளனர். இந்த நிலையில் சமந்தா புகைப் பிடிக்கும் காட்சியில் நடித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.
அது படத்தோடு முடிந்துவிட்டது என்று நினைத்தால் திருட்டு வி.சி.டியில் இருந்து எடுக்கப்பட்ட அந்த சர்ச்சைக்குரிய புகைப்பிடிக்கும் படங்களை சமந்தா தனது ட்விட்டரில் வெளியிட்டு பெருமைப்பட்டு இருக்கிறார். இது பெண்களை புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு தூண்டுவது போல் உள்ளது. திருட்டு வி.சி.டிக்கு ஆதரவான செயலாகவும் இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது…” என்று சொல்லியிருக்கிறார்.
யார் இந்த சேகரன் என்று சமந்தா கேட்காமல் இருந்தால் சரி..!