full screen background image

ராதிகாவின் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘அண்ணாதுரை’ திரைப்படம்

ராதிகாவின் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘அண்ணாதுரை’ திரைப்படம்

குறுகிய காலத்தில், தமிழ்த் திரையுலகில், தனக்கென்று ஒரு தனித்துவமான அடையாளத்தை பெற்று இருக்கிறார், இசைமைப்பாளர் – கதாநாயகன் விஜய் ஆண்டனி.

ரசிகர்களை கவரக் கூடிய தரமான கதையம்சம், வர்த்தக வெற்றிக்கு தேவையான கதைக் களம்… என இந்த இரண்டும் ஒருங்கே இணைந்து இருக்கும் திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பதால், மொழிகளை கடந்து, தென்னிந்திய திரையுலகில் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி.  

தன்னுடைய திரைப்படங்களுக்கு எப்போதுமே வித்தியாசமான தலைப்புகளை தேர்ந்தெடுப்பது விஜய் ஆண்டனியின் தனித்துவமான சிறப்பு. அவருடைய வெற்றிக்கு அதுதான் முக்கிய காரணம் என்று சொன்னால் அதுவும் மிகையாகாது.

‘பிச்சைக்காரன்’, ‘சைத்தான்’, மற்றும் ‘எமன்’ ஆகிய தலைப்புகள் அந்தந்த படங்களின் கதைக்கு மிகப் பொருத்தமாக அமைந்திருந்தது என்பதில் சந்தேகமேயில்லை. இப்போது வெற்றிகரமான கதாநாயகனாக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனியின் இந்த வித்தியாசமான தலைப்பு பாணி, இவருடைய அடுத்தப் படத்திலும் தொடர்ந்துள்ளது.

அந்த வகையில், அவர் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தின் தலைப்பு, தமிழக மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து வரும் தலைசிறந்த தலைவரான ‘அண்ணாதுரை’யின் பெயரை பெற்று இருக்கிறது.  

‘ஐ பிச்சர்ஸ்’ சார்பில் ஆர்.சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் தயாரிக்கும் இந்த ‘அண்ணாதுரை’ படத்தை, அறிமுக இயக்குநர் ஸ்ரீனுவாசன் இயக்க இருக்கிறார். இவர் இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.  

“விஜய் ஆண்டனி போன்ற நட்சத்திர கதாநாயகனோடும், ‘ஐ பிச்சர்ஸ்’ போன்ற மிக பெரிய தயாரிப்பு நிறுவனத்தோடும் என்னுடைய முதல் படத்திலேயே இணைந்து பணியாற்றுவதை நான் பெருமையாக கருதுகின்றேன்.

தமிழகத்தின் தலை சிறந்த தலைவர்களுள் ஒருவரான பேரறிஞர் ‘அண்ணாதுரை’யின் பெயரை தலைப்பாக கொண்ட இந்த படம், அவரின் வாழ்க்கையை சார்ந்து இல்லாமல், வேறொரு கதைக் களத்தில் உருவாக இருக்கிறது.

நிச்சயமாக எங்களின் ‘அண்ணாதுரை’, விஜய் ஆண்டனியின் ரசிகர்களையும், பொதுவான சினிமா ரசிகர்களையும் அதிகளவில் உற்சாகப்படுத்தும். தற்போது படப்பிடிப்புக்கான பணிகளில் நாங்கள் மும்மரமாக  ஈடுபட்டு வருகிறோம்.

இன்னும் ஒரு வாரத்தில் எங்கள் ‘அண்ணாதுரை’ படத்தின் மற்ற நடிகர் – நடிகைகள் மற்றும் ஏனைய தொழில் நுட்ப கலைஞர்களின் விவரங்களை வெளியிட முடிவு செய்து இருக்கிறோம்…” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் ஸ்ரீனுவாசன்.

Our Score