‘அஞ்சுக்கு ஒண்ணு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணி அளவில் திருச்சியில் உள்ள சங்கம் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் விஷால் தலைமையிலான நடிகர் சங்க எதிர்ப்புப் புள்ளிகளும் கலந்து கொண்டு தங்களது பிரச்சார மேடையாகவும் இதனை பயன்படுத்திக் கொண்டனர்.
நடிகர்கள் நாசர், விஷால், பொன்வண்ணன், கருணாஸ் மற்றும் சரவணன் ஆகியோர் இந்த ‘அஞ்சுக்கு ஒண்ணு’ படத்தின் இசைத்தட்டை வெளியிட அதனை படக் குழுவினரே பெற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய நடிகர் கருணாஸ், “இந்த விழாவை நாங்கள் நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு முதலாவதாக கலந்து கொள்ளும் விழாவாகவே கருதுகிறேன். நாங்கள் நடிகர் சங்கத்தில் வெற்றி பெற்றதும், சின்ன பட்ஜெட் படங்களை பெரிதும் ஊக்குவிப்போம், சிறிய பட்ஜெட் படங்களுக்கு குறைந்தது 100 – 150 திரையரங்குகள் கிடைக்க வழிவகை செய்வோம்…” என்று உறுதி அளித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய நடிகர் விஷால், “இது போன்று சிறிய பட்ஜெட் படங்கள் அதிகமாக வெளிவர வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படம் வெளிவந்த பின்புதான், அது சிறிய படமா, பெரிய படமா என்று தீர்மானிக்க முடியும். அதேபோல் புதுமுக நடிகர்கள் பொறுமையையும், நேர்மையையும் கடைப்பிடித்தால் நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறலாம். அவ்வாறுதான் நானும் வெற்றி பெற்றேன்..” என்றார்.
விழாவில் தயாரிப்பாளர் எவர்கிரீன் S சண்முகம் சிறப்பு விருந்தினர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இசையமைப்பாளர் சாஹித்யா அவர்களுக்கு நடிகர் விஷால் அவர்கள் பொன்னாடை போர்த்தினார். இவ்விழாவில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் கலந்துகொண்டனர். இயக்குநர் ஆர்வீயார் நன்றியுரை வழங்கினார்.