full screen background image

அந்த ஏழு நாட்கள் – சினிமா விமர்சனம்

அந்த ஏழு நாட்கள் – சினிமா விமர்சனம்

பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் அஜிதேத் நாயகனாகவும், ஸ்ரீஸ்வேதா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் கே.பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், .பி.ஜனகன், வாசு சீனிவாசன், ராகவன், சாய் கோபி, விதுஷ்ணவி, ஆதித்யா, கவிப்ரியா, ராம்ஜி, மோகனா, செம்புலி ஜெகன், பாரதிராஜா, அற்புதன் விஜயன், பேபி வைணுவ ஸ்ரீ, பரோட்டா முருகேசன், சாந்தகுமார், கார்த்தி, பிரதீப், ஜனா, ராம்குமார், தனசேகரன், மூர்த்தி, அப்பல்லோ ஹரி, விஜயராஜ், இளங்கோவன், ஜெய்மன், யூசுப், ஆர்.ரூபகரன், சோபியா, ரவி மற்றும் பங்கஜ் எஸ்.பாலாஜி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 

இப்படத்திற்கு கோபிநாத் துரை ஒளிப்பதிவு செய்துள்ளார். சச்சின் சுந்தர் இசையமைக்க, முத்தமிழன் ராமு படத்தொகுப்பு மற்றும் வி.எஃப்.எக்ஸ் பணிகளை கவனிக்கிறார். டி.கே.தினேஷ்குமார் கலை இயக்குநராக பணியாற்ற, மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார்.

இன்னும் ஏழு நாட்கள்தான் தன்னுடைய காதலி உயிருடன் இருப்பார் என்பதை உணரும் ஹீரோ, அந்தக் காதலியை மீட்பதற்காக என்ன செய்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

வானியல் ஆய்வுத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கும் ஆராய்ச்சி மாணவர் ஹீரோஅஜிதேத். ஒரு நாள் சூரிய கிரகணத்தின்போது ஏற்படும் வானியல் மாற்றங்களை ஆய்வு செய்கிறார். அப்பொழுது சூரியனை நேரடியாக அவர் பார்த்த பார்வையில் அஜிதேத்துக்குள் ஒரு சக்தி வந்து விடுகிறது.

அதன்படி அவர் யாருடைய கண்களையாவது கூர்ந்து பார்த்துவிட்டால் அவர்களுக்கு அடுத்து நடக்கப் போகும் கெட்ட நிகழ்வுகள் நாயகன் அஜிதேத்துவுக்கு தெரிந்து விடுகிறது.

அப்படி அவர் கவனித்த மூன்று பேர் அவர் நினைத்தது போலவே மரணம் அடைய பயங்கர குழப்பம் ஆகிறார் அஜிதேத். இந்தக் குழப்பத்தில் இவருக்கு ஆறுதல் சொல்ல வந்த ஹீரோயின் ஸ்வேதாவுக்கும் இதே போல ஒரு பிரச்சனை வரப் போகிறது என்பதை அறியும் அஜிதேத் ஹீரோயினை காப்பாற்ற துடிக்கிறார்.

அவருடைய அந்த முயற்சி வெற்றி அடைந்ததா? தோல்வி அடைந்ததா? என்பதுதான் இந்த அந்த ஏழு நாட்கள் என்ற திரைப்படத்தின் திரைக்கதை.

ஹீரோவாக நடித்திருக்கும் புதுமுக நடிகர் அஜிதேத் ஏற்கனவே பல படங்களில் நடித்திருப்பவர் போலத்தான் இந்தப் படத்திலும் தோற்றமளிக்கிறார். நடித்திருக்கிறார். தன்னுடைய காதலை வளர்த்தெடுக்கும் போதும் தன்னுடைய காதலிக்கு இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை இருக்கிறது என்பதை அறிந்து அவரை காப்பாற்ற துடிக்கும் போதும் படத்தில் பிற்பாதில் பல காட்சிகளில் நம்மை கண் கலங்க வைத்திருக்கிறார் ஹீரோ.

ஹீரோவுக்கேற்ற ஜோடியாக நடித்திருக்கும் புதுமுக நடிகையான ஸ்ரீஸ்வேதா கேமராவுக்கு ஏற்ற முகம்தான். அவ்வளவு அழகு இல்லை என்றாலும் திராவிட பெண்ணாக பார்த்தவுடன் பிடித்துப் போவதை போல தோற்றமளிக்கிறார்.

ஹீரோவுக்கு இருக்கும் புதிய சக்தியை பற்றி அறிந்த அவருக்கு ஆறுதல் சொல்லும் போதும், இறுதியில் அந்த ஏழு நாட்கள் மட்டுமே தனக்கான நாட்கள் என்பதே அறிந்த பின்பு அவர் ஹீரோவிடம் காட்டுகின்ற அன்பும், பாசமும் நிச்சயம் நம் மனதை கவர்கிறது.

கிளைமாக்ஸ் காட்சியில் தன்னுடைய ஒட்டுமொத்த நடிப்பையும் காண்பித்து இருக்கிறார் ஸ்ரீஸ்வேதா. ரேபிஸ் நோயால் தாக்கப்பட்டால் அவர்கள் எப்படி எல்லாம் கஷ்டப்படுவார்கள்.. எப்படி துன்பப்படுவார்கள்.. என்பதை நேரில் பார்த்திருக்கிறாரோ இல்லையோ.. ஆனால் நம் கண் முன்னே அப்படியே காண்பித்திருக்கிறார் ஸ்ரீஸ்வேதா. பாராட்டுக்கள்.

அமைச்சராக நடித்திருக்கும் கே.பாக்யராஜ் மற்றும் ஹீரோவின் அப்பாவாக நடித்திருக்கும் மாவட்ட செயலாளர் நமோ நாராயணன் இருவருமே படத்தின் திரைக்கதையை நகர்த்துவதற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சச்சின் சுந்தரின் இசையில் பாடல்கள் நம் மனதில் நிற்கவில்லை என்றாலும், பின்னணி இசை மட்டுமே கொஞ்சம் ஆறுதலை தந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் கோபிநாத் துரை இடைவேளைக்கு முன்பான நகரத்தின் வாழ்வியலை படமாக்கிவிட்டு இடைவேளைக்கு பின்பு ஊட்டியில் அவர்கள் இருக்கும் அந்த இருப்பிடத்தை சுற்றிலும் வீட்டுக்குள்ளும் படமாக்கியிருக்கும்விதம் சூப்பர்.

அதோடு நாயகன், நாயகி இருவரின் கடைசி நாள் நிலைமையை அதீதமாக பயமுறுத்தும் அளவுக்கும், திகைத்துப் போகும் அளவுக்கும் கேமரா கோணத்தில் அவர்களை படம் பிடித்து காட்டி இருப்பது பாராட்டுக்குரியது.

படத் தொகுப்பாளர் இடைவேளைக்குப் பின்பான காட்சிகளில்தான் தன்னுடைய கத்திரி வித்தையை காட்டி இருக்கிறார்கள்போலும்!

எங்கேயோ ஆரம்பித்த எங்கேயோ போய் முடியும் என்பார்களே.. அது இந்தப் படத்தின் கதைக்கு கச்சிதமாக பொருந்துகிறது. ஒரு வானவியல் ஆராய்ச்சி செய்யும் மாணவன் தனக்கான காதலியை தானே கண்டறிந்து காதல் ஜெயிக்கும் நேரத்தில் இந்த காதலிக்கே உலை வைக்கும்படியான இறைவனின் திருவிளையாடலை உணர்ந்து அதிலிருந்து தப்பிக்க என்னென்ன வழிகளை செய்கிறார் என்பதை எல்லாம் திரைக்கதையில் நீட்டாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

ஆனால் அதே நேரம் வெறி நாய் கடிக்கு முன்பே சிகிச்சை பெறாவிட்டால் கடைசி நேரத்தில் வருபவர்களை எந்த ஒரு மருத்துவத்தாலும் காப்பாற்ற முடியாது என்பதுதான் நிஜம்.

ஆனால் இந்தியாவின் பழமையான மருத்துவ முறையான சித்த வைத்தியம் மற்றும் மூலிகை மருந்தினால் ரேபிஸ் நோயை குணப்படுத்தி விடலாம் என்று இயக்குநர் இப்படி சொல்லி இருப்பது நமக்கு ஆச்சரியமாகவும் இருக்கிறது. அதே சமயம் நம்ப முடியாததாகவும் இருக்கிறது.

சென்சாரில் எப்படி இதனை அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. உண்மையில் மூலிகை மற்றும் சித்த வைத்தியத்தினால் குணப்படுத்த முடியுமா என்பதை மருத்துவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும். அந்த வகையில் இந்த அந்த ஏழு நாட்கள் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்றே சொல்லலாம்.

பழைய திரைப்படம் போல் புதிய திரைப்படங்கள் அமைவதில்லை என்று அனைவரும் சொல்வது போலவே இந்தப் படம் முந்தைய அந்த ஏழு நாட்கள் படம்போல, எந்தவிதத்திலும் நம்மை பாதிக்கவில்லை என்பது வருத்தமான விஷயம்.

போனவாரம்தான் இதே திரைக்கதையில் கிஸ் என்கின்ற ஒரு திரைப்படம் வெளியாகி இருந்தது. அந்தப் படத்திலும் படத்தின் ஹீரோவுக்கு காதல் ஜோடிகளை எங்கேயாவது பார்த்துவிட்டால், அவர்கள் லிப்ஸ் கிஸ் செய்து கொண்டிருப்பதை நேரில் பார்த்துவிட்டால், ஹீரோவுக்கு அவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரிந்து விடுகிறது.

அதே திரைக்கதையை வைத்து இப்போது இந்த படமும் வெளிவந்திருக்கிறது! இந்தக் கதையின் கரு, இரண்டு படங்களுக்கும் ஒன்றானது எப்படி என்பது விசாரிக்கப்பட வேண்டிய விஷயம்.

RATING : 3 / 5

 

Our Score