full screen background image

வானவியல் அறிவியலை மையப்படுத்திய காதல் திரைப்படம் ‘அந்த 7 நாட்கள்’!

வானவியல் அறிவியலை மையப்படுத்திய காதல் திரைப்படம் ‘அந்த 7 நாட்கள்’!

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரைப்படங்களில் ‘அந்த 7 நாட்கள்’ ஒன்று. தற்போது அதே தலைப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகியுள்ளது.

பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் கே.பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன், வாசு சீனிவாசன், ராகவன், சாய் கோபி, விதுஷ்ணவி, ஆதித்யா, கவிப்ரியா, ராம்ஜி, மோகனா, செம்புலி ஜெகன், பாரதிராஜா, அற்புதன் விஜயன், பேபி வைணுவ ஸ்ரீ, பரோட்டா முருகேசன், சாந்தகுமார், கார்த்தி, பிரதீப், ஜனா, ராம்குமார், தனசேகரன், மூர்த்தி, அப்பல்லோ ஹரி, விஜயராஜ், இளங்கோவன், ஜெய்மன், யூசுப், ஆர்.ரூபகரன், சோபியா, ரவி மற்றும் பங்கஜ் எஸ்.பாலாஜி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 

இப்படத்திற்கு கோபிநாத் துரை ஒளிப்பதிவு செய்துள்ளார். சச்சின் சுந்தர் இசையமைக்க, முத்தமிழன் ராமு படத்தொகுப்பு மற்றும் வி.எஃப்.எக்ஸ் பணிகளை கவனிக்கிறார். டி.கே.தினேஷ்குமார் கலை இயக்குநராக பணியாற்ற, மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் பத்திரிகையார் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ், பெஸ்ட் காஸ்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டி.செல்வகுமார், இயக்குநர் எம்.சுந்தர் மூவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.

படத்தின் இயக்குநரான எம்.சுந்தர் படம் பற்றிப் பேசும்போது, “நான் கே.பாக்யராஜ் சாரிடம் ‘சொக்கத் தங்கம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன், பிறகு அவருடைய டிவி சீரியல்களுக்கான கதை விவாதங்களில் பங்கேற்றேன். இந்தப் படத்தின் கதையை படமாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன், அப்போதுதான் சார் கதை கேட்கும் தகவல் கிடைத்தது, அவரிடம் கதை சொன்னேன், அவருக்குப் பிடித்திருந்ததால் உடனேயே இந்தப் படம் துவங்கியது.

நான் இந்த கதையை எழுதி முடித்ததுமே, பாக்யராஜ் சாரிடம் பணியாற்றியதால், அவரது பட தலைப்புகளை பயன்படுத்த வேண்டும், என்று முடிவு செய்தேன். அதன்படி, ’டார்லிங் டார்லிங் டார்லிங்’ மற்றும் ‘அந்த 7 நாட்கள்’ தலைப்புகளை தேர்வு செய்தேன். பாக்யராஜ் சாரிடம் கதையைச் சொல்லிவிட்டு, இந்த இரண்டு தலைப்புகளில் எதை கொடுத்தாலும் எனக்கு சம்மதம் என்றேன். அவர்தான் ‘அந்த 7 நாட்கள்’ தலைப்பு இந்தக் கதைக்குப் பொருத்தமாக இருக்கும் என்றார்.

பாக்யராஜ் சார் படத்திற்கும், எனது இந்த ‘அந்த 7 நாட்கள்’ படத்திற்கும் கதை உள்ளிட்ட எந்த விசயத்திலும் ஒரு சதவீதம்கூட சம்பந்தம் இருக்காது. ஆனால், இந்த தலைப்பு என் கதைக்கு மிக, மிக பொருத்தமான தலைப்புதான். காரணம், படத்தில் 7 நாட்களுக்குள் ஒரு விசயத்தை செய்து முடிக்க கூடிய கெடு ஹீரோவுக்கு இருக்கும். அது என்ன என்பது சஸ்பென்ஸ். அதே சமயம், இது திரில்லர் படம் இல்லை. முழுக்க முழுக்க காதல் கதைதான். அதில் திரில்லரை லேசாக சொல்லியிருக்கிறேன்.

படத்திற்கும் சூரிய கிரகணத்திற்கும் மிக முக்கியமான தொடர்பு இருக்கிறது. கடந்த ஜூன் அல்லது ஜூலையில் ஒரு சூரிய கிரகணம் நிகழ்ந்தது. அதற்கு முன்பாக 300 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சூரிய கிரகணத்திற்கும் கதைக்கும்கூட தொடர்பு இருக்கிறது. வானவியல் அறிவியலை சார்ந்த அம்சங்களோடு, வித்தியாசமான காதல் கதையாக இது இருக்கும்.

படத்தின் நாயகனுக்காக சுமார் 15 நபர்களை பார்த்தோம், ஆனால் யாரும் அமையவில்லை. பிறகு இன்ஸ்டாகிராம் மூலம் அஜித் தேஜ் என்ற நபரை பார்த்தபோது அவர் சரியாக இருப்பார் என்று தோன்றியது, அவரை அழைத்து பேசி, ஆடிஷன் செய்தபோது, அவர் கதைக்கான ஹீரோவாக சரியாக இருந்தார்.

அவர் தெலுங்கு மொழி பேசுபவர். அவருக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. அவரிடம் ஏழு மணி நேரம் ஆங்கிலத்தில் கதையைச் சொன்னேன். அவரும் கதையை நன்றாக உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநாயகியையும் இன்ஸ்டா மூலமாகத்தான் தேர்வு செய்தோம், அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

நான் உட்பட படத்தில் பணியாற்றியிருக்கும் முக்கியமான தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் புதியவர்கள்தான். இசையமைப்பாளர் சச்சின் சுந்தர் என் மகன்தான். என் மகன் என்பதற்காக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, அவருடைய திறமைக்காகத்தான் தயாரிப்பாளர் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

படத்தை தயாரித்தோம். பணம் கொடுத்தோம் என்று இல்லாமல் கதை மற்றும் நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு என அனைத்திலும் தயாரிப்பாளர் இணைந்து செயல்பட்டார். முக்கியமாக புதியவர்களாக இருக்க வேண்டும். திறமையானவர்களாக இருக்க வேண்டும். என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு தயாரிப்பாளர் அனைவரையும் தேர்வு செய்தார். அதில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு பெருமைதான்” என்றார்.

தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் படம் பற்றி கூறுகையில், “முதலில் படம் தயாரிக்கும் எண்ணமே எனக்கு இல்லை, நான் ஸ்டுடியோ வைத்திருப்பதால், சுந்தர் மற்றும் சச்சின் சுந்தரை தெரியும். அவர்களுக்கு வாய்ப்பு பெற்றுத் தர சில முயற்சிகளை மேற்கொண்டேன், அது நடக்கவில்லை, சரி நாமே ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுக்கலாம் என்று நினைத்துதான் இந்தப் படத்தை தயாரிக்க முன் வந்தேன்..” என்றார்.

சென்னை மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் 45 நாட்கள் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் பின்னணி வேலைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

படம் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் படத்தை வெளியிட படக் குழு திட்டமிட்டுள்ளது.

Our Score