தயாரிப்பாளர்களில் இருந்து பார்வையாளர்கள்வரை சினிமா மீதான காதல் மட்டுமே அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. இவர்கள் அனைவரின் ஒரே நோக்கம் நல்ல சினிமாவை கொண்டாடுவது மட்டுமே! இந்த நோக்கமே பல நல்ல தயாரிப்பு நிறுவனங்களை உருவாக்கியுள்ளது. இவை பெருமைமிகு பல படங்களை காலம் கடந்தும் தமிழ் சினிமாவில் உருவாக்கி உள்ளது.
இத்தகைய ஆர்வம் மிக்க தயாரிப்பாளர்களில் பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸூம் ஒருவர். அவர் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், தனித்துவமான, தரமான கதைகள் மூலம் பார்வையாளர்களுக்கு நல்ல சினிமா அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார்.
இவர் உருவாக்கியுள்ள ‘அந்த 7 நாட்கள்’ திரைப்படத்தில் அஜித்தேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன், வாசு சீனிவாசன், ராகவன், சாய் கோபி, விதுஷ்ணவி, ஆதித்யா, கவிப்ரியா, ராம்ஜி, மோகனா, செம்புலி ஜெகன், பாரதிராஜா, அற்புதன் விஜயன், பேபி வைணுவ ஸ்ரீ, பரோட்டா முருகேசன், சாந்தகுமார், கார்த்தி, பிரதீப், ஜனா, ராம்குமார், தனசேகரன், மூர்த்தி, அப்பல்லோ ஹரி, விஜயராஜ், இளங்கோவன், ஜெய்மன், யூசுப், ஆர்.ரூபகரன், சோபியா, ரவி மற்றும் பங்கஜ் எஸ்.பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எம்.சுந்தர் இயக்கியுள்ளார். பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் தலைவர்: செல்வகுமார் .டி., ஒளிப்பதிவு: கோபிநாத் துரை, இசை: சச்சின் சுந்தர், படத்தொகுப்பு & VFX : முத்தமிழன் ராமு, சண்டைப்பயிற்சி: ராகேஷ் ராக்கி, கலை இயக்குநர்: டி.கே.தினேஷ் குமார், ஆடை வடிவமைப்பு: எஸ். மாலினி பிரியா, இணை இயக்குநர்: விஷ்ணு பிரியன், தயாரிப்பு நிர்வாகி: பாரதிராஜா, நிதி மேலாளர்: ஜீவன் ராம் .ஜே, காஸ்ட்யூம் சீஃப்: சாரங்கபாணி, காஸ்ட்யூம்: ஆறுமுகம், பாடல் வரிகள்: மோகன்ராஜா, DI-IGENE, ஒப்பனை: மணி, ஸ்டில்ஸ்: ரஞ்சித், கலவை -UKI: அய்யப்பன் ஜி ஸ்டுடியோஸ், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்: ஆம்ஸ்ட்ராங், போஸ்டர் வடிவமைப்பு: ரஞ்சித் குமார், மோஷன் போஸ்டர்: அஷ்விந்த், டிரெய்லர் & டீசர் கட்: அர்ஜுன், பத்திரிக்கை தொடர்பு: சுரேஷ் சந்திரா – அப்துல் ஏ.நாசர்.
சச்சின் சுந்தர் இசையமைத்த இப்படத்தின் முதல் தனிப்பாடல் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருவதுடன் படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் பேசும்போது, “நான் படம் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தபோது ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திராத நல்ல கதைகள் மற்றும் நல்ல சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.
சொல்லப்படாத பல ஜானர்களும் கதைகளும் இருக்கிறது. இதெல்லாம் இன்றைய இளம் தலைமுறையினர் எடுத்து செய்ய வேண்டும். அதேபோன்ற திறமையாளர்களுக்கு பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் வாய்ப்பளிக்க தயாராக உள்ளது. தமிழ் சினிமாவில் ஒரே மாதிரியான கதைகளை திரும்ப திரும்ப சொல்வதைவிட புதுவிதமான கதைகளை சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.
தனித்துவமான கதைகள் தேடிக் கொண்டிருந்தபோதுதான் பல திருப்பு முனைகளைக் கொண்ட எம்.சுந்தரின் கதை கேட்டேன். இதற்கு மேல் கதை பற்றி நான் அதிகம் சொன்னால் அது திரையனுபவத்தை குறைத்துவிடும்.
சுந்தர் கதை சொல்லி முடித்த உடனே இந்தப் படத்தை தயாரிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டேன். நடிகர்கள் தேர்வில் இருந்து தொழில் நுட்பக் குழுவினர்வரை அனைத்தும் சரியாக அமைந்தது. அஜித்தேஜ், ஸ்ரீஸ்வாதி மற்றும் மற்ற நடிகர்களும் திறமையாக நடித்து படத்தை அடுத்த லெவலுக்கு எடுத்து சென்றுள்ளனர்.
இந்தக் கதையின் ஆன்மாவை புரிந்து கொண்ட ஒருவர்தான் இந்தக் கதைக்கு இசையமைக்க வேண்டும் என தீர்மானித்தோம். அப்படி பல சாம்பிள் டிராக்குகள் பார்த்த பின்பு இயக்குநர் சுந்தரின் மகன் சச்சின் சுந்தர் எங்களுக்கு சரியான தேர்வாக இருந்தார். அவரது இசை படத்திற்கு புது எனர்ஜி கொடுத்துள்ளது. ஒட்டு மொத்த தொழில் நுட்பக் குழுவினரின் பங்களிப்பும் சிறப்பானதாக அமைந்தது.
இந்தப் படத்தின் கதையைக் கேட்டு முடித்ததும் லெஜெண்ட்ரி இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களின் ‘அந்த 7 நாட்கள்’ படத் தலைப்புதான் இந்தக் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம். எங்கள் கதைக்கு இந்த தலைப்பு தேர்ந்தெடுத்திருப்பது இயக்குநர் பாக்யராஜ் அவர்களுக்கும் நிச்சயம் மரியாதை செய்யும்விதமாக அமையும். இதற்காக அவரிடம் அனுமதி கேட்டபோது உடனேயே ஒத்துக் கொண்டார்.
எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதன்மை நோக்கமே திறமையான இளைஞர்களை சினிமாத்துறைக்கு எடுத்து வருவதுதான். அவர்கள்தான் சினிமாவின் எதிர்காலம்…” என்றார் பெருமையுடன்.
சென்னை மற்றும் கொடைக்கானல் போன்ற இடங்களை சுற்றிலும் 45 நாட்களில் இந்தக் கதை படமாக்கப்பட்டுள்ளது.
 
 
                                                                     
     
                                                             
                                
 
  
  
 







