மலையாளத்தில் அன்னாபென் நடிப்பில் முத்துக்குட்டி சேவியர் இயக்கத்தில் 2019-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றபடம் ஹெலன்.விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனிலும் நல்ல பாசிட்டிவ் ரிசல்ட் ஹெலன் படத்திற்கு. அந்தப்படத்தின் தமிழ் உரிமையை தயாரிப்பாளர் மற்றும் நடிகரான அருண்பாண்டியன் வாங்கி தன் மகள் கீர்த்திபாண்டியனை நாயகியாக்கி அன்பிற்கினியாள் படமாக தயாரித்திருக்கிறார். சக்திவேலன் பிலிம்பேக்டரி சக்திவேலன் படத்தை வெளியிட்டுள்ளார்.
மலையாள ஹெலனை தமிழின் அன்பிற்கினியாள் எப்படி ஓவர்டேக் செய்கிறாள் என்பதை விடவும் மலையாளத்தில் படம் ஏற்படுத்தி இருந்த தாக்கத்தை தமிழிலும் ஏற்படுத்தி பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார்கள் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
பீனீக்ஸ் மாலில் ஒரு இரவு நேர சிக்கன்பர்கர் ரெஸ்ட்ராண்டில் வேலை செய்யும் கீர்த்திபாண்டியனுக்கு ஓர் ஆபத்து வருகிறது. அந்த ஆபத்தில் இருந்து அவர் எப்படி மீண்டார் என்பது தான் படத்தின் ஒன்லைன். கிளைக்கதையாக அவருக்கு ஒரு காதல் உண்டு .கனடா செல்ல வேண்டும் என்ற கனவு உண்டு. படம் துவங்கிய 35-வது நிமிடத்தில் நிமர்ந்து உட்காரும் நாம் படம் முடியும் வரை எந்தப்பக்கமும் நகர மாட்டோம். அந்தளவிற்கு படத்தை மூலக்கதை போலவே நகர்த்திச் சென்றுள்ளார் இயக்குநர் கோகுல்! பாராட்டுக்கள்
கீர்த்திபாண்டியனின் நடிப்பு தான் இந்தப்படத்தின் ஆன்மா எனலாம். சின்ன சின்ன ரியாக்ஷன்களிலும் அநாயசமாக ஸ்கோர் செய்கிறார். ஒரு தனியறைக்குள் மாட்டிக்கொண்டு அவர் அடையும் துயரத்தை நமக்குள்ளும் கடத்தி அவரோடு நம்மை ஒன்றிப்போக வைத்துள்ளார். கீர்த்தியின் தந்தையாக அருண்பாண்டியனே நடித்துள்ளார். பெரிதாக குறை சொல்ல முடியாத நடிப்பு அவருடையது. கீர்த்தி பாண்டியனின் காதலராக வரும் பிரவீன், இன்பெக்டர் கேரக்டரில் வருபவர், மாலின் வாட்ச்மேன், ரெஸ்ட்ராண்டின் மேனஜர், என படத்தில் முக்கியமான கேரக்டர்களில் வரும் அனைவருமே நன்றாக கவனம் ஈர்க்கிறார்கள்.
படத்தில் கேமராமேன் மகேஷ்முத்துசாமியும் இசை அமைப்பாளர் ஜாவித்தும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர்கள். தங்கள் வேலைக்கு 100% உண்மையாக இருந்து படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.படத்தின் முதல் இருபது நிமிடங்கள் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். என்றாலும் பெண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும் பெரும் நம்பிக்கையைத் தரும் படத்தின் முடிவுக்காக நாம் அன்பிற்கினியாளுக்கு பணம் கொடுத்து வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும்!