சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் T.G.தியாகராஜன் தயாரித்துள்ள திரைப்படம் ‘அன்பறிவு’.
இந்தப் படத்தில் நடிகர் ‘ஹிப்ஹாப்’ ஆதி நாயகனாக நடித்துள்ளார். மேலும், நெப்போலியன், சாய்குமார், ஆஷா சரத், விதார்த், விஜய் டிவி தீனா, காஷ்மீரா, ஷிவானி ராஜசேகர் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
முதல் முறையாக இப்படத்தில் ‘ஹிப்ஹாப்’ ஆதி கிராமத்து பின்னணியில் மதுரை வட்டார வழக்கு பேசி நடித்துள்ளார்.
இப்படத்தின் வசனத்தை பொன் பார்த்திபன் எழுதியுள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் E.ராகவ் படத் தொகுப்பு செய்துள்ளார். ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
நெப்போலியன், ‘ஹிப்ஹாப்’ ஆதி இருவரும் இணைந்து தோன்றும் காட்சிகள் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும். மேலும் ‘திரிஷ்யம்’ புகழ் ஆஷா சரத் மற்றும் காஷ்மீரா, விதார்த் ஆகியோர் முன்னெப்போதும் கண்டிராத பாத்திரத்தில் இப்படத்தில் தோன்றியுள்ளனர்.
இந்த ‘அன்பறிவு’ திரைப்படம் கிராமத்து பின்னணியில் மட்டுமல்லாது, தமிழ் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ரஷ்யாவின் வெகு அழகான இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.
திறமையான, புத்தம் புது நாயகியான ஷிவானி ராஜசேகர் பங்கு பெறும் காட்சிகள் ரஷ்ய பின்னணியில் அனைவர் மனதையும் கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
சரியான அளவில் காமெடி, காதல், செண்டிமெண்ட், கிராம மற்றும் நகர பின்னணி என அனைத்தும் கலந்த வகையில் குடும்பத்துடன் கொண்டாடும் வகையிலான திரைப்படமாக இந்த ‘அன்பறிவு’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.
படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி மற்றும் ரஷ்யா ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. இன்னமும் 8-லிருந்து 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், படத்தினை விரைவில் வெளியிட தீவிரமான பணிகள் நடந்து வருகிறது.
பரபரப்பான ஃபர்ஸ்ட் லுக்கை தொடர்ந்து, சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் ட்ரெயலர் மற்றும் இசை வெளியீட்டை சிறப்பாக செய்திட திட்டமிட்டு வருகிறது.