இந்தப் படத்தை கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் ஜெகபதிபாபு, சுகாசினி மணிரத்னம், ஒய்.ஜி.மகேந்திரா, தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, ரஞ்சனி, அபாரமி வெங்கடாச்சலம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
எழுத்து, இயக்கம் – சுரேஷ் கிருஷ்ணா, வசனம், பாடல்கள் – பா.விஜய், இசை – தேவா, ஒளிப்பதிவு – சஞ்சய், படத் தொகுப்பு – ரிச்சர்டு, தயாரிப்பு வடிவமைப்பு – வாசுதேவன், நடன அமைப்பு – கலா, உடைகள் – தட்ஷா தயாள், பத்திரிக்கை தொடர்பு – ரியாஸ் கே.அஹமத், பராஸ் ரியாஸ்.
தமிழ் சினிமாவில் பேய்களை வைத்து படம்.. சாதிய கொடுமைகளை வெளிப்படுத்தும் படங்கள்.. கிராமத்து வாழ்வியலை சொல்லும் படம்.. குற்றங்களை கண்டுபிடிப்பது பற்றிய திரைப்படம்.. அரசியலை அக்குவேறு ஆணிவேராக சித்தரிக்கும் திரைப்படங்கள்… என்று சில டெம்ப்ளேட்டான கதை அம்சங்களை மையமாக வைத்தே திரைப்படங்கள் இப்போது வந்து கொண்டிருக்கின்றன.
1985-களில் இருந்ததுபோல வருடத்திற்கு ஒரு பக்தி படமாவது வருமா என்று இப்போதும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறோம். ஆனால் சமீப வருடங்களில் அப்படி எதையுமே நம் பார்க்க முடியவில்லை. அந்த வருத்தத்தை போக்குவதற்காகவே வந்திருக்கிறது இந்த ‘அனந்தா’ என்ற பக்தித் திரைப்படம்.
ஆந்திராவில் ‘புட்டபர்த்தி’ என்ற ஒரு ஊரின் பெயரை உலகளாவிய அளவுக்கு கொண்டு சென்றவர், அந்த இடத்தை ஆன்மீக தலமாக உருமாற்றிய பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபா.
கோடான கோடி இந்திய பக்தர்களையும் தாண்டி, வெளிநாடுகளிலும் இந்த ஸ்ரீசத்ய சாய்பாபாவிற்கு பக்தர்களும், தொண்டர்களும் இருக்கிறார்கள்.
இந்த ஆண்டு பகவான் ஸ்ரீசத்ய சாய்பாபாவிற்கு நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர் நிகழ்த்திய அதிசயங்கள், அற்புதங்கள், பக்தர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி வைத்த தெய்வீகத் தன்மை… இதையெல்லாம் கதைக் கருவாக வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதுதான், இந்த ‘அனந்தா’ என்ற திரைப்படம்.
பகவான் ஸ்ரீசத்ய சாயி பக்தர்களுக்கு நேர்ந்த துயரங்களையும், அவர்கள் அதை நினைத்து பகவானிடம் வேண்டிக் கொண்ட பொழுது அவர்களின் துயரங்கள், பிரச்சனைகளையெல்லாம் உடனடியாக தீர்த்து வைத்த பகவானின் ஆசிகளையும், பெருமைகளையும் இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறார்கள்.
ஒரு திரைப்படத்தின் நீளம் அதிகப்பட்சம் இரண்டு மணி பத்து நிமிடங்களாக இருத்தல் வேண்டும் என்பதுதான் பெருவாரியான இயக்குநர்களின் கருத்து. இந்த இரண்டு மணி, பத்து நிமிடத்திற்குள்ளாக பகவான் சாய்பாபாவின் மொத்த வாழ்க்கையையும் சொல்லிவிட முடியாது. அதனால் அதிகப்பட்சமாக அவருடைய சீடர்கள் ஐந்து பேரின் கதைகளை மட்டுமே இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
முதல் நபர் பெரும் தொழிலதிபரான ஜெகபதிபாபு. தன்னுடைய தொழிலுக்காகவே 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டே இருக்கிறார். ஓடிக் கொண்டே இருக்கிறார். “நான் உழைக்கிறேன். பணம் எனக்கு வருகிறது. நான் சம்பாதிக்கிறேன். செலவழிக்கிறேன்..” என்று சொல்லிக் கொண்டிருந்த ஜெகபதி பாபுவுக்கு ஒரு கட்டத்தில் பகவானின் தயவு தேவைப்படுகிறது.
வங்கியை கொள்ளையிட வரும் ஒரு திருடர்கள் கூட்டத்திடம் உழைப்பின் ரகசியத்தையும், உழைப்பின் அருமையையும் சொல்லி.. “அடுத்தவர் சொத்தை பறிக்கக் கூடாது. அதுவொரு பாவச் செயல்” என்கின்ற ஒரு விஷயத்தை பாபு அவர்களுக்கு சொல்லித் தருகிறார். அந்த நேரத்திலேயே அவர்கள் வந்த வேலையை மறந்து விட்டு “இனி நாங்கள் உழைத்து சாப்பிடுவோம்” என்று சொல்லிவிட்டு போகிறார்கள்.
சாய்பாபாவின் தீவிரமான பக்தர்கள் ஒய்.ஜி.மகேந்திரனும், அவருடைய மனைவி ஸ்ரீரஞ்சனியும். திடீரென்று ஒரு நாள் ஸ்ரீரஞ்சனி காலமாகிவிட இந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் ஒய்.ஜி.மகேந்திரன், “பாபா இல்லை.. சாய்பாபா இல்லை.. கடவுளில்லை…” என்று கத்திக் கோட்பாடு போடுகிறார்.
ஆனால் சில நாட்களிலேயே அவருடைய மனைவியின் மறைவு குறித்து உண்மையான அதிர்ச்சி தரும் செய்தியொன்று குடும்ப மருத்துவரிடம் இருந்து ஒய்.ஜி.மகேந்திரனுக்கு கிடைக்க, மனம் திருந்துகிறார் ஒய்.ஜி.மகேந்திரன்.
பிரபலமான நடன கலைஞரான அபிராமி வெங்கடாசலம் ஒரு நடன போட்டிக்கு வந்திருக்கிறார். வந்த இடத்தில் திடீரென்று அவரது காலில் சுளுக்கு ஏற்பட நடனமாட முடியாத நிலைமைக்கு உள்ளாகிறார்.
அவருடைய தந்தையான தலைவாசல் விஜய்க்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அதனால் “இன்றைய போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம், மருத்துவரிடம் செல்வோம்” என்று மகளை அழைக்கிறார். ஆனால், மகளோ “பாபா இருக்கிறார்.. நிச்சயமாக என்னை காப்பாற்றி விடுவார்” என்று சொல்லி மருத்துவமனைக்கு வர மறுக்கிறார்.
சிறிது நேரத்திலேயே அபிராமியின் வேண்டுகோளை ஏற்று அவரது காலை சரிப்படுத்திவிடுகிறார் சாய்பாபா. இந்த அதிசயத்தை பார்த்த தலைவாசல் விஜய்யும் உடனடியாக பாபாவிடம் சரண்டர் ஆகிறார்.
தன்னுடைய ஒரே மகன் காசி கங்கை நதியில் மூழ்கிவிட அவனை பெரும் பாடுபட்டு காப்பாற்றி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கிறார் சுகாசினி. இப்போது அவன் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான்.
இந்த நிலைமையில் சுகாசினி சாய்பாபாவின் தீவிர பக்தையாக இருப்பதால் மனமுருகி சாய்பாபாவை வேண்டுகிறார். “என்னுடைய மகனை மீட்டுக் கொடு” என்று கோரிக்கையை வைக்கிறார். இந்த கோரிக்கையையும் சாய்பாபா ஏற்றுக் கொள்ள, மகன் எதுவுமே நடக்காததுபோல திடீரென்று எழுந்து அமர்கிறான்.
கடைசியாக அமெரிக்காவில் வசிக்கும் சாய்பாபாவின் பக்தர்களான இரண்டு அமெரிக்க குடிமக்களின் அவர்களது வீட்டை சுற்றிலும் காட்டு தீ பரவி வந்த நிலையில் இவர்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து சாய்பாபாவை வேண்டிக் கொள்ள… இவர்களது வீடு மட்டும் தீ பிடிக்காமல் இருந்து இவர்களும் உயிர் தப்புகிறார்கள்.
பெரும் தொழில் அதிபராக நடித்திருக்கும் ஜெகபதி பாபு, அமைதியான முறையில் அதை சமயம் அழுத்தமாகவும் இருக்கும்வகையில் சாய்பாபாவின் பெருமைகளை பேசி கொள்ளைக்காரர்களை மனம் மாற வைக்கிறார். அந்த கட்சியில் அவருக்கான நடிப்பு போதுமானதுதான்.
நாடக மேடை உலகில் ‘சிவாஜி’ என்று போற்றப்படும் ஒய்.ஜி.மகேந்திரன் இந்தப் படத்தில் அந்தப் பெயரைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய மனைவியை இழந்த சோகத்தில், கோபத்தில் செய்கின்ற கடவுள் துவேசமும், “யாரும் இல்லை.. எந்த சாமியும் இல்லை..” என்று அவர் கதறும்பொழுது உண்மையான ஒரு கணவராகவே நம் கண்ணுக்குத் தெரிகிறார்.
நாடக நடிகர் என்பதால் வசனங்களை ஏற்ற இறக்கத்தில் மிக அழகாக உச்சரித்து நம் மனதை கொள்ளை கொள்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன். அதேபோல் அவருடைய மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனியின் நடிப்பும் அழகு.
இவர்கள் இருவருக்குமே அதிகப்படியான குளோசப் சாட்டுகளை வைத்து அவர்கள் வசனம் பேசும்விதத்தையும், வசனம் பேசியபடியே நடித்துக் காட்டி இருக்கின்றவிதத்தையும் படமாக்கியிருப்பதை மனதார பாராட்டலாம்.
அபிராமி வெங்கடாசலம் மிகுந்த தன்னம்பிக்கையோடு “சாய்பாபா இருக்கிறார். நிச்சயம் என்னை காப்பாற்றுவார்…” என்று தன் தந்தையிடம் சண்டையிடும்பொழுது அவரது நடிப்பும், அந்தப் பாடல் கட்சியில் அவர் ஆடுகின்ற நடனமும் அசத்தல் என்று சொல்லலாம்.
மகன் மீதான பாசத்தில் சுகாசினி பேசுகின்ற அந்தப் பேச்சுக்களும், சாய்பாபாவிடம் “என் மகனை திருப்பிக் கொடு” என்று கேட்கின்ற நடிப்பிலும் சீனியர் மோஸ்ட் நடிகை என்ற பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
அதோடு அன்றைய இரவில் டாக்டர் வேடத்தில் வந்து சென்ற சாய்பாபாவை “ஒரு டாக்டர் வந்தார்… ஒரு டாக்டர் வந்தார்…” என்று மிக அலட்சியமாக சொல்லிவிட்டு பின்பு உண்மை தெரிந்து சாய்பாபாவை போற்றுகின்ற அந்த கணத்தில் சுகாசினியின் நடிப்பு அபாரம்..!
இந்தப் படம் முழுக்கவே சாய்பாபா என்ற கடவுளை விதந்தோதுகிறது என்பதால் படம் கொஞ்சம் போர் அடிக்காமல் போகவும் டாக்குமெண்டரி திரைப்படமாக ஆகிவிடக் கூடாது என்பதற்காகவும் மிகவும் நுணுக்கமாக யோசித்து சாய்பாபா பற்றிய வீடியோக்களையும் புகைப்படங்களையும் இடையிடையே இணைத்து படத்தை கடைசிவரையிலும் ஒரு எதிர்பார்ப்புடன் பார்க்க வைத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.
ஒளிப்பதிவாளர் சஞ்சய் தன்னுடைய அழகான ஒளிப்பதிவில் புட்டபர்த்தி கோவிலையும், சாய்பாபாவின் மடத்தையும் அழகாக காட்டியிருக்கிறார். அதேபோல் காசி சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் கேமராவின் அழகு பாராட்டக் கூடிய ஒன்று.
இசையமைப்பாளர் தேவாவின் இசையில் இரண்டு பாடல்களும் கேட்கக் கூடிய பாடல்கள். அதிலும் அபிராமி நடனமாடும் அந்தப் பாடலும் மனதில் நிற்கிறது.
இன்னொரு பக்கம் இந்தப் படம் முழுக்க, முழுக்க இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கானது என்பதை சொல்லாமல் சொல்வதுபோல திரைக்கதை அமைத்திருப்பது படத்தை மேலும் ரசிக்க வைத்திருக்கிறது.
சாய்பாபா பற்றிய வீடியோக்களை அவர் தன்னுடைய பக்தர்களுக்கு காட்டுகின்ற அன்பையும், ஆசீர்வாதத்தையும் ஒரு சிலரை கூர்ந்து கவனிக்கும் அவருடைய கண் பார்வையினால் கிடைக்கும் தெய்வீக சக்தியையும். அவருடைய பக்தர்கள் அவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.
அவருடைய கடைசி காலம்… அவர் மரணித்த நாள்… அதன் பின் நடந்தவைகள்… அனைத்தையுமே ஒரு சோக சிச்சுவேஷனாக பக்தர்களின் கண்ணீரோடு அந்தக் காட்சிகளையும் தொகுத்தளித்திருக்கிறார்கள்.
இதுவொரு ஆன்மீக படம் மட்டுமே என்று நினைக்காமல் ஒவ்வொருவரின் கதையிலும் அவர்களுக்குக் கிடைத்த இழப்புகள் இறைவனால் வடிவமைக்கப்பட்டு வந்தது. ஆனாலும், அதே இறைவனிடம் நாம் வேண்டினால் நிச்சயம் நல்லதே நடக்கும் என்பதையும் சொல்லி சாய்பாபாவின் பக்தர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையையும், ஆன்மீக பலத்தையும் கொடுப்பதுபோல இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா.
உண்மையான நம்பிக்கையினால் கடவுளை தேடினால் நிச்சயம் அவர் நமக்கு நல்லதே செய்வார். பகவானின் அருள் நம்மை சூழ்ந்திருக்கும் பொழுது எந்த ஒரு கெட்டவைகளும் நமக்கு நடக்காது என்ற ஒரு தைரியத்தை இந்த ‘அனந்தா’ திரைப்படம் சொல்கிறது.
பகவான் ஸ்ரீசத்யசாய் பாபாவின் பக்தர்கள் மட்டுமல்லாமல், கடவுள் நம்பிக்கையுள்ள எந்த மனிதனாக இருந்தாலும் நிச்சயமாக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
RATING : 3.5 / 5









