பிரபல நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் மூன்றாவது படம் ‘அம்மணி’.
தமிழ் திரையுலகில் அனைவராலும் மதிக்கப்படும் தயாரிப்பாளர் Tag Entertainment நிறுவனத்தின் தயாரிப்பாளர் வெண் கோவிந்தா தயாரிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.
‘அம்மணி’ திரைப்படம் பற்றி தயாரிப்பாளர் வெண் கோவிந்த் கூறுகையில், “நிஜ வாழ்க்கையின் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டது இந்தப் படத்தின் கதை. ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையும் சக மனிதர்களிடையே அன்பை நிலை நிறுத்தத்தான் என்ற அற்புதமான கருத்தை அடிப்படையாகக் கொண்டது இந்த ‘அம்மணி’ திரைப்படம். இத்தகைய நல்ல கதையுடன் கூடிய படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை எனக்களித்த எனது இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.
‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்தில் நடித்த சுப்புலட்சுமி பாட்டிதான் இப்படத்தில் முதன்மையான ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். பகல், இரவென பாராமல் பரபரவென ஷூட்டிங்கில் உற்சாகத்துடன் இருப்பார். ‘பாட்டி’ என்றழைத்தால் அவருக்குப் பிடிக்காது. 82 வயதான தன்னை ‘‘அக்கா’ன்னு கூப்பிடுங்க’ என்பார். அவரது உற்சாகம் எங்களையும் உற்சாகப்படுத்தியது. தற்போதைய காலக்கட்டத்தில் யதார்த்த சினிமாக்களுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது, அதேபோல இந்த ‘அம்மணி’யும் அனைவரும் கொண்டாடும் ஒரு திரைப்படமாய் அமையும்…” என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்.