full screen background image

மலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ சொந்தக் கட்டிடத்தில் குடியேறியது..!

மலையாள நடிகர் சங்கம் ‘அம்மா’ சொந்தக் கட்டிடத்தில் குடியேறியது..!

மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் சொந்தக் கட்டிடம் இன்று கொச்சியில் திறக்கப்பட்டது.

கொச்சியில் கல்லூர், தேசபிமாணி சாலையில் இருந்த ஒரு பழைய கட்டிடத்தை விலைக்கு வாங்கி அதைப் புத்தம் புதிதாக தங்களுடைய சங்கத்திற்கென 10 கோடி ரூபாய் செலவில் வடிவமைத்திருக்கிறார்கள் அம்மா அமைப்பினர்.

இந்தக் கட்டிடத்தின் திறப்பு விழா இன்று காலை கொச்சியில் இருக்கும் அந்த அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மலையாள சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்மூட்டி மற்றும் அம்மா அமைப்பின் நிர்வாகிகளான முகேஷ், ஜெகதீஷ், கே.பி.கணேஷ்குமார், சங்கத்தின் செயலாளரான எடவலா பாபு மற்றும் நடிகர், நடிகைகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கட்டிடம் 5 மாடி கொண்டதாக அமைந்துள்ளது. கட்டிடத்தின் ஒரு மாடியில் 200 பேர் அமரக் கூடிய அளவுக்கான அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளேயே கேண்டீன் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கதாசிரியர்கள், இயக்குநர்கள் அமர்ந்து பேசுவதற்கேற்றவாறு ஒரு அரங்கமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அம்மா அமைப்பின் நிர்வாகிகளுக்கு ஒரு மாடி முழுக்க ஒதுக்கப்பட்டு அங்கே அனைவருக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த பில்டிங்கும் கண்ணாடிகள் சூழ கண்ணாடி மாளிகையாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இதுவரையிலும் அம்மா அமைப்பின் அலுவலகம் மூன்று முறை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் சொந்தக் கட்டிடத்தை அமைக்க வேண்டும் என்கிற ஒரு லட்சியத்தோடு உழைத்து இந்தக் கட்டிதத்தை உருவாக்கியிருக்கிறார்கள் அம்மா அமைப்பினர்.

இன்றைய துவக்க விழாவில் பேசிய சங்கத்தின் செயலாளர் எடவலா பாபு, “எங்களுடைய அம்மா அமைப்பின் புதிய கட்டிடம் ஸ்மார்ட் பில்டிங்காக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டிடத்தின் உள்ளரங்குகளின் கட்டுப்பாடுகள் முழுக்க, முழுக்க நம்முடைய செல்போன் வழியாகவே செயல்படுத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு நான் என்னுடைய வீட்டில் இருந்தபடியே இந்தக் கட்டிடத்தில் இருந்த சில லைட்டுகளையும், ஏ.சி. மிஷின்களையும் ஆபரேட் செய்து பார்த்தேன். அனைத்தும் கச்சிதமாக வேலை செய்தது…” என்றார்.

அம்மா அமைப்பின் தலைவரான நடிகர் மோகன்லால் பேசும்போது, “அம்மா அமைப்பு உருவாகி 25-வது ஆண்டான இந்த வருடம் எங்களுடைய அமைப்பிற்கு புதிய சொந்தக் கட்டிடத்தை நிர்மாணித்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்தக் கட்டிடத்தில் இருந்து மலையாள சினிமாவை மென்மேலும் உயர்த்த நாங்கள் நிச்சயமாக பாடுபடுவோம்…” என்றார்.

Our Score