“ஆறு படங்களைத் தயாரித்ததால் நான் கடனாளியாக மாறிவிட்டேன்” என்கிறார் நடிகர் ராதாரவி.
பிரசாத் லேப் தியேட்டரில் நேற்று நடைபெற்ற ‘கடலை போட ஒரு பொண்ணு வேணும்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது ராதாரவி இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசும்போது, “இந்த படத்தின் நாயகன் அசார் டிவியிலிருந்து வந்தவர். உனக்கு உதாரணமாக பலரை சொல்லுவார்கள். அதைக் காதில் கேட்கவே கூடாது. உனக்கு என்று தனியாக பெயர் கிடைக்கும், இந்தப் படத்தின் ஒரிஜினல் எனக்குத் டைட்டில் தெரியும். ஆனால், சொல்ல மாட்டேன்,
நாஞ்சில் சம்பத் “நான் நடிகன் இல்லை.. ஆனால் என் கையில் இரண்டு படம் இருக்கு” என்றார். ஆனால் இங்கு நடிகனுக்கு படமே இல்லை. உங்களுக்கு படமிருக்கு என்று சந்தோசப்படுங்கள்.
சினிமாவில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும். அதற்காகத்தான் நான் இன்றும் டிரெண்டிங்கில் இருக்கிறேன். வசதி இலவசமாக வருவது இந்த சினிமா துறையிதான்.
தயாரிப்பாளர்களால்தான் இந்த சினிமாவுலகம் வாழ்கிறது. இந்தப் படத்தில் பாடல்கள் எல்லாம் அற்புதமாக உள்ளது. ஒளிப்பதிவாளர் மிரட்டியிருக்கிறார். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும்.
நான் இதுவரையிலும் ஆறு படங்களைத் தயாரித்துள்ளேன். அதனாலேயே பெரிய கடனாளியாகிவிட்டேன். ஆனாலும் விடமாட்டேன். அடுத்ததாக 10 சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரிக்கப் போகிறேன்.
சினிமா வாழ வேண்டுமானால் இந்த மாதிரி சின்ன படங்களும் ஓட வேண்டும். மிக விரைவில் தயாரிப்பாளர்களுக்கும், பெப்சிக்கும் இடையேயான சம்பள ஒப்பந்தம் அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகப் போகிறது. அதனால் தமிழ்ச் சினிமா கண்டிப்பாக வளரும்.
இந்தப் படம் இந்த வித்தியாசமான டைட்டிலுக்காகவே நிச்சயமாக ஓடும்..” என்றார்.









