full screen background image

அகிலன் – சினிமா விமர்சனம்

அகிலன் – சினிமா விமர்சனம்

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகியிருக்கும் இப்படத்தில் இதுவரை ஏற்றிராத வேடங்களில் ஜெயம் ரவி நடித்துள்ளார். பிரியா பவானி ஷங்கர் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் ஹரீஷ் பெராடி, தருண் அரோரா, சிராக் ஜானி, ஓ.ஏ.கே.தேவர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.  விவேக் ஒளிப்பதிவை கையாள, விஜய் முருகன் கலை இயக்கம் செய்துள்ளார்.

ஜெயம் ரவி நடிப்பில் பூலோகம்’ படத்தை இயக்கிய இயக்குநர் என்.கல்யாண கிருஷ்ணன்தான் இந்தப் படத்தையும் இயக்கிருக்கிறார்.

முழுக்க, முழுக்கத் துறைமுகத்தின் பின்னணியில் இந்த அகிலன்’ படம் உருவாகியுள்ளது.

இந்த பூமி என்னும் உலக உருண்டையை 70 சதவிகிதம் ஆக்கிரமித்திருக்கும் கடல் வழியாக உலகளாவிய வகையில் கடத்தல் தொழில் செய்யும் டான் தருண் அரோரா.

அவருக்குக் கீழ் இந்தியப் பெருங்கடலில் நடைபெறும் கடத்தல் தொழிலை செய்து வருபவர் ‘பரந்தாமன்’ என்ற ஹரீஷ் பெராடி. இவருடைய பிரதான தளபதிதான் இந்தப் படத்தின் நாயகனான ‘அகிலன்’ என்ற ஜெயம் ரவி.

துறைமுகத்தில் இறக்கி, ஏற்றி அனுப்பப்படும் கன்டெய்னர்களில் போதைப் பொருட்கள், கருப்புப் பணம், தங்கம், கள்ள நோட்டுக்கள் என்று அனைத்துவிதமான இல்லீகல் சமாச்சாரங்களையும் லீகலாக செய்து தருகிறார் அகிலன்.

இதற்காக துறைமுகத்தில் இருக்கும் கஸ்டம்ஸ், பாதுகாப்பு அதிகாரிகளை சமாளிப்பது, எதிர்க்கும் அதிகாரிகளை சுட்டுக் கொல்வது, அடித்துக் கொல்வது.. பணியும் அதிகாரிகளுக்கு வேண்டியதை செய்வது என்று அத்தனை உள்ளடி வேலைகளையும் செய்து துறைமுகத்தையே தன் கண்ட்ரோலில் வைத்திருக்கிறார் ‘கிரேன் ஆப்ரேட்டர்’ என்ற ஐடியை வைத்திருக்கும் ஜெயம் ரவி.

ஆனால், ஜெயம் ரவிக்கு இன்னொரு முகமும் உண்டு. மற்றுமொரு நோக்கமும் உண்டு. அவர் தனக்கு வாழ்வளித்திருக்கும் ஹரிஷ் பெராடிக்கும் உண்மையாக இல்லை. அரசுக்கும் உண்மையாக இல்லை. துறைமுகத்தில் யாருடைய கன்ட்ரோலிலும் அவர் இல்லாமல் தனித்தே இயங்குகிறார்.

இந்தத் திருடன் போலீஸ் விளையாட்டில் தனக்கு உதவியாக இருக்குமே என்பதற்காகவே தனது காதலியான பிரியா பவானி சங்கரை படிக்க வைத்து, எஸ்.ஐ.யாக்கி துறைமுகம் போலீஸ் ஸ்டேஷனிலேயே போஸ்டிங்கும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். தனது இல்லீகல் வேலைகள் பலவற்றுக்கு ப்ரியா பவானியையும் அவ்வப்போது பயன்படுத்திக் கொள்கிறார் அகிலன்.

பரந்தாமனிடம் சொல்லாமலேயே பரந்தாமனுக்காக பல கொலைகளை செய்திருக்கும் அகிலன், தற்போது கஸ்டம்ஸ் அதிகாரியான ஓ.ஏ.கே.தேவரை சுட்டுக் கொல்கிறார். இதற்குப் பின்பு பரந்தாமனுக்கே தெரியாமல் ஒரு வேலையை எடுத்து செய்ய பரந்தாமனுக்கும், அகிலனுக்கும் இடையில் மோதல் பிறக்கிறது.

இதற்கிடையில் சர்வதேச போலீஸாரால் தேடப்பட்டு வரும் ஒரு பயங்கர குற்றவாளியை இந்தியாவைவிட்டு ரகசியமாக வெளியே அனுப்பும் வேலையை அகில உலக டான், அகிலனிடம் ஒப்படைக்கிறார். அகிலன் இதைக் கச்சிதமாக செய்து முடிக்க.. “இனிமேல் இந்தியப் பெருங்கடலின் தளபதி அகிலன்தான்” என்று சர்வதேச டான் அறிவிக்கிறார்.

தனது பதவி பறிபோன கோபத்தில் பரந்தாமன் கொதி நிலையின் உச்சத்திற்கே போகிறார். அகிலனைத் தீர்த்துக் கட்ட முனைகிறார். அதேபோல் அகிலனும் பரந்தாமனை மட்டுமல்ல.. ஒட்டு மொத்த டான் சாம்ராஜ்யத்தையே அழிக்க முற்படுகிறார். இது ஏன்..? எதற்காக..? என்பதுதான் மீதமான திரைக்கதை.

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாகவே வலம் வந்து கொண்டிருந்த ஜெயம் ரவியை ‘பூலோகம்’ படத்தில் ஒரு குத்துச் சண்டை வீரனாக முழுக்க, முழுக்க ஆக்சன் பாதையில் திசை திருப்பியவர் இதே  இயக்குநரான கல்யாண்தான். அதைத் தொடர்ந்து, இந்தப் படத்திலும் ஜெயம் ரவியின் இன்னொரு முரட்டு முகத்தைக் காட்டியிருக்கிறார்.

இத்தனை முரட்டுத்தனமான ஜெயம் ரவியை வேறெந்தப் படத்திலும் இதற்கு முன்னர் நாம் பார்த்ததில்லை. படம் முழுவதும் முகமும், மனதும் இறுகிப் போயிருக்கும் தோற்றத்தில் வலம் வருகிறார் ஜெயம் ரவி.

அந்த கட்டுமஸ்தான உடம்பும், முரட்டுத்தனமான பார்வையும், அடாவடி கலரும் ஜெயம் ரவியின் நடிப்பு கேரியரில் புதுசுதான். காதல் உணர்வைக் காட்டும் தருணத்தில் மட்டுமே ஒரு மெல்லிய பூங்காற்று, அந்த முரட்டு முகத்தில் வந்து செல்கிறது.

பரந்தாமனையே மறைமுகமாக மிரட்டிவிட்டுச் செல்வதும், ஓ.ஏ.கே.தேவரிடம் சவால்விட்டு சுட்டுக் கொல்வதிலும், பிரியா பவானியிடம் பார்த்தத் தருணத்தில் கட்டிப் பிடித்துக் கொஞ்சு திரைக்கதையை நகர்த்துவதிலும் ரவுடி அகிலனார் ரவுடித்தனத்தை செமத்தியாகக் காட்டியிருக்கிறார்.

சர்வதேச டானிடம் ஆள் கடத்தலை தான் செய்வதாகக் கூறி பரந்தாமன் முகத்தில் கரியைப் பூசும் காட்சியிலும் ஒரு எதிர்பார்ப்பை உண்டு செய்திருக்கிறார் அகிலனான ஜெயம் ரவி.

படத்தின் இடைவேளைக்குப் பின்பான ஃப்ளாஷ் பேக் காட்சியில் வரும் இன்னொரு ஜெயம் ரவியின் முகம் இதற்கு நேர் எதிராக அமைந்திருக்கிறது. ஆனாலும் அந்த சாந்த சொரூபியும் நேரம் வந்தால் சண்டையிடவும் தயங்கமாட்டான் என்பதைப் போல கதையும் அமைந்துள்ளது. அந்த ஜெயம் ரவி சில காட்சிகளே ஆனாலும், அந்தத் தமிழன்னை கப்பலைப் போலவே நம் மனதில் பதிகிறார்.

இந்த அடிதடி கதையில் காதலுக்கு இட ஒதுக்கீடு செய்யாததால் இரண்டு நாயகிகள் இருந்தும் அது அவர்கள் சும்மா வந்து போவதற்காகவே இருக்கிறது. தான்யாவும், பிரியாவும் சில காட்சிகளில் மட்டுமே வந்து போகிறார்கள்.

மத்திய அரசின் போதை தடுப்புப் பிரிவு உயரதிகாரியான சிராக் ஜானியும் சிறப்பாக நடித்திருக்கிறார். எப்பாடுபட்டாவது கடத்தல் தொழிலையும், அதைச் செய்பவர்களையும் முறியடிக்க வேண்டும் என்று துடிக்கும் அவரது ஆர்வமும், நடிப்பும் பரபரப்பாகவே இருக்கிறது.

ஜெயம் ரவியின் திட்டங்களை இவர் முறியடிப்பதும், போலீஸின் திட்டங்களை முன்கூட்டியே யோசித்து ஜெயம் ரவி முறியடிப்பதும் சுவாரசியமானவை. அதிலும் துறைமுகத்திற்கு வெளியே திட்டமிட்டு டிராபிக் ஜாம் ஆகும்வரையிலான திரைக்கதையை அகிலன் அமைக்க.. இதில் சிக்கிய சிராஜ் ஜானி அல்லல்படுவதும் சூப்பரான திரைக்கதை என்றே சொல்லலாம்.

பரந்தாமனான ஹரீஷ் பெராடி மதுசூதனனை திட்டமிட்டு கொலை செய்துவிட்டு ஆடும் டிராமாவும், அதை ஜெயம் ரவி நிமிடத்தில் முறியடிப்பதும் சட்டென்று முடியும் கதையாகவே ஆகிவிட்டது.

ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்த் சந்தோஷத்தின் ஒளிப்பதிவு படத்தின் பிரம்மாண்டத்தை கூட்டியிருக்கிறது. கன்டெய்னர்களின் டிராபிக் ஜாம் காட்சியை படமாக்கியிருக்கும்விதம் பாராட்டுக்குரியது.

இசையமைப்பாளர் சாமின் இசையில் குத்தாட்டம் போட வைக்கும் முதல் பாடலும், அகதிகளின் வாழ்க்கையை ஒட்டிப் பாடும் பாடலும் கேட்கும் ரகம்தான். ஆனாலும் அந்த சோக பீலிங் மட்டும் அந்த நேர திரைக்கதை காரணமாக நமக்குள் எழவில்லை என்பதுதான் உண்மை.

அவ்வப்போது காண்பிக்கப்படும் ஏரியல் ஷாட்டுகளும், துறைமுகத்தின் அழகை மட்டுமல்ல.. சரக்குக் கப்பல்களின் பிரம்மாண்டத்தையும் ரசிக்க வைத்திருக்கிறது. இப்படி காட்சிக்கு காட்சி பிரம்மாண்டமாக லைவ் லொகேஷனில் எந்தப் படமும் இதுவரையிலும் வந்ததில்லை என்றே சொல்லலாம்.

இதுவரையிலும் நாம் தெரிந்து வைத்திருக்காத கடல் வழி போக்குவரத்து, துறைமுகத்தின் நடைமுறைகள், நீளம், நீளமான கன்டெய்னர் லாரிகள், அவை வரிசையாக துறைமுகத்துக்குள் வருவதும், போவதுமான காட்சிகள், பிரம்மாண்டமான சரக்கு கப்பல்கள், அவற்றில் கண்டெய்னர்களை ஏற்றும்விதம், அவற்றுக்கான நடைமுறை யுக்திகள் என்று பொது அறிவுக்கான அத்தனை விஷயங்களையும் இந்த ஒரே படத்திலேயே தாராளமாக அள்ளிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கல்யாண கிருஷ்ணன்.

முதல் பாதியில் காரணமே சொல்லப்படாமல் அனைவரையும் வரிசையாக பகைத்துக் கொள்ளும் ஜெயம் ரவியின் திரைக்கதை நமக்குக் குழப்பத்தைத்தான் தருகிறது. இருந்தாலும் இடைவேளைக்குப் பின்பு அந்தக் கதை தெரிந்தாலும் அதில் அழுத்தம் இல்லாததால் நமக்குள் அது விழவில்லை என்பதோடு நாமும் முழு படத்துடன் ஒன்ற முடியவல்லை என்பதும் உண்மைதான்.

அதோடு பல கொலைகளை செய்தவர்.. சட்டத்திற்குப் புறம்பான செயல்களை செய்பவர்.. இவரை எப்படி நல்லவர் என்று ஒரே நாளில் நாம் கொண்டாட முடியும்? இதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய சறுக்கலான திரைக்கதை. இந்தக் காரணத்திற்காகவே இவரை நாயகனாக கொண்டாட முடியாமல் போகிறது.

அதே சமயம் படத்தின் முடிவும் பொத்தாம்பொதுவாக அமைக்கப்பட்டிருப்பதால் படம் பற்றிய தாக்கம் ரசிகர்களுக்குள் ஏற்படவில்லை என்பதையும் நாம் சொல்லியாக வேண்டும்.

இருந்தாலும் இப்படி படம் முழுவதும் கடல் மற்றும் துறைமுகம் என்ற பிரம்மாண்டத்தைக் காட்டி, திரையில் இருந்து நம் கண்களை ஒரு நொடிகூட நகரவிடாமல் செய்து நமக்குள் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்திருக்கும் இந்த அகிலன்’ பாராட்டுக்குரியவன்தான்..!

RATING : 3.5 / 5

Our Score