full screen background image

கொன்றால் பாவம் – சினிமா விமர்சனம்

கொன்றால் பாவம் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை EINFACH ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் பிரதாப் கிருஷ்ணா, மனோஜ் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் வரல‌ஷ்மி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் இருவருடன், ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், T.S.R.ஸ்ரீனிவாசன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோரும் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – EINFACH ஸ்டுடியோஸ் – ப்ரதாப் கிருஷ்ணா & மனோஜ் குமார், இணை தயாரிப்பு – தயாள் பத்மநாபன், டி பிக்சர்ஸ், கதை, திரைக்கதை, இயக்கம் – தயாள் பத்மநாபன், வசனம் – தயாள் பத்மநாபன் மற்றும் ஜான் மகேந்திரன், மூலக் கதை – மோகன் ஹப்பு, இசை – சாம்  C.S., ஒளிப்பதிவு – செழியன்.R., படத் தொகுப்பு – ப்ரீத்தி பாபு. கலை இயக்கம் – விதல் கோசனம், பாடல்கள் – பட்டினத்தார், கபிலன், தயாள் பத்மநாபன், நடன இயக்கம் – லீலா குமார், ஒலிக்கலவை – உதயகுமார், நிர்வாகத் தயாரிப்பு – வினோத்குமார், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா- ரேகா  D’One., ஒப்பனை – சண்முகம், உடைகள் – சக்ரி, ஆடை வடிவமைப்பு – மீரா சித்திரப்பாவை, விளம்பர வடிவமைப்பு – நவீன் குமார்.

இந்தப் படத்தின் மூலம் 1915-ம் ஆண்டில் ஆங்கில எழுத்தாளர் ராபர்ட் புரூக் எழுதிய ‘Lithuania’ என்ற நாடகம்தான். இதைத் தழுவி கன்னடத்தில் மோகன் ஹப்பு என்ற எழுத்தாளர் மேடை நாடகமாக எழுதினார்.

கன்னடத்தில் இரு முறை சிறந்த படத்திற்கான மாநில விருதுகளை பெற்ற இயக்குநரான தயாள் பத்மனாபன், இந்தக் கதையை 2018-ம் ஆண்டு கன்னடத்தில்  ‘ஆ காரால்ல ராத்திரி’ என்ற பெயரில் இயக்கினார். இத்திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்கநர் மற்றும் சிறந்த துணை நடிகைக்கான கர்நாடக மாநில அரசின் விருதுகளை பெற்றது.

பிறகு, பிரபல தயாரிப்பாளரான அல்லு அரவிந்தின் தயாரிப்பில் தெலுங்கில் ‘Anaganaga O Athidhi’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியது. இப்போது தமிழில் வந்திருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் தயாள் பத்மநாபனே இயக்கியுள்ளார்.

தமிழகத்தின் விழுப்புரத்தில் பிறந்து வளர்ந்தவரான இயக்குநர் தயாள் பத்மநாபன் இதுவரையிலும் கன்னடத்தில் மட்டுமே 20 படங்களை இயக்கியிருக்கிறார். 2 முறை சிறந்த இயக்குநருக்கான கர்நாடக மாநில அரசின் விருதினைப் பெற்றிருக்கிறார்.

ஒரு இரவில், ஒரு வீட்டில் நடக்கும் திரில்லர் கதைதான் படம். இதற்கு முன்பு இது போன்ற திரைக்கதை யுக்தியில் எந்தப் படமும் வந்ததில்லை.

சந்தர்ப்பமும், சூழ்நிலையும்தான் ஒரு மனிதனை தவறு செய்யத் தூண்டுகிறது என்பது பொதுவான விதி. இந்த விதியை நியாயப்படுத்துகிறது இத்திரைப்படம்.

பணத்திற்கு ஆசைப்பட்டு வீட்டுக்கு வரும் விருந்தாளியை கொலை செய்யவும் துணியும் ஒரு குடும்பத்தின் கதை இது.

இந்தப் படம் சொல்லும் கதை1981-ம் ஆண்டு காலத்தில் நடக்கிறது. தர்மபுரி பக்கத்தில் உள்ள பெண்ணாகரம் அருகேயிருக்கும் ஒரு குக்கிராமம்தான் கதைக் களம். சற்றே ஒதுக்குப்புறமான கிராமம்.

அந்தக் கிராமத்தில் வெகு தூரம் தள்ளித் தள்ளியே வீடுகள் இருக்கின்றன. அதில் ஒன்றில் குடியிருக்கிறது சார்லியின் குடும்பம். விவசாயம் பொய்த்துப் போனதால் வெறும் ஐம்பதாயிரம் ரூபாய் கடனுக்காக நிலத்தையும், வீட்டையும் ஒருவனுக்கு அடமானம் வைத்ததன் விளைவாய் இப்போதும் வட்டிகூட கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் சார்லி.

அவரது மனைவியாக ஈஸ்வரி ராவ், மகளாக வரலட்சுமி சரத்குமார். குடும்ப வறுமையினால் கல்யாண வயதைத் தாண்டியும் திருமணமாகாத நிலைமை வரலட்சுமிக்கு. இதனாலேயே தாய் தந்தை மீது கடும் கோபத்தில் இருக்கிறார் வரலட்சுமி. முதிர் கன்னிகளுக்கே உரித்தான ஏக்கமும், பரிதவிப்புமாக அவருடைய வாழ்க்கை கழிகிறது.

இந்த நேரத்தில்தான் அவர்களது வீட்டுக்கு கையில் சூட்கேஸ், பையுடன் வருகிறார் இளைஞரான சந்தோஷ் பிரதாப். ஊர், ஊராகச் சுற்றி வருவதாகச் சொன்ன அவர், “இன்று இரவு மட்டும் இந்த வீட்டில் இருந்துவிட்டு போய்விடுகிறேன்” என்கிறார்.

அரைகுறை மனதுடன் அனைவரும் ஒத்துக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் சந்தோஷ் பிரதாப் கையில் நிறைய பணம் மற்றும் நகைகளை வைத்திருப்பதை அறிகிறது அந்தக் குடும்பம்.

வீட்டில் இப்போது பெரும் பணச் சிக்கல். கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால் கடன் கொடுத்த கபோதி வீடு தேடி வந்து உட்கார்ந்து கொண்டு நாட்டாமைத்தனம் பேசி, வரலட்சுமியையும் லுக் விட்டுக் கொண்டு போக.. அனைத்தையும் அறிந்தும் தடுக்க முடியாமல் தவிக்கிறார்கள் பெற்றோர்கள்.

இந்த நிலைமையில் வரலட்சுமி சந்தோஷூக்கு வலை வீசுகிறார். அது நடக்கவில்லை என்றதும் சந்தோஷை கொலை செய்து அவரது பணத்தையும், நகைகளையும் கையாடல் செய்ய நினைக்கிறார் வரலட்சுமி.

இந்தச் சதி வேலைக்கு தனது அம்மாவையும், அப்பாவையும் ஒப்புக் கொள்ள வைக்கிறார் வரலட்சுமி. இந்தக் கொலை சம்பவத்தை செய்ய திட்டம் தீட்டுகிறார்கள். இது ஏதுமறியாத சந்தோஷ் பிரதாப் சந்தோஷமாக, அப்பாவித்தனமாக கோழி குழம்புடன் தனக்கு இரவு விருந்து காத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்.

கடைசியில் என்னவாகிறது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

வரலட்சுமி சரத்குமார் தேர்ந்த நடிப்புக்கு முக அழகு தேவையில்லை என்பதை இந்தப் படத்தில் நிரூபித்திருக்கிறார். சந்தோஷ் பிரதாப் வந்தவுடன் அவரை விரும்பாதவராக தன்னைக் காண்பித்துக் கொண்டவர், பின்பு போகப் போக அவருடன் நெருக்கமாகும் தோரணையில் பேசும்போது அவரது வயதையொத்த இளைஞிகளின் நடத்தையை காண்பிக்கிறார்.

சந்தோஷ் கர்லா கட்டையை எடுத்து சுத்தும்பொழுது, அவருடைய உடம்பை பார்வையாலேயே தின்பதைப் போல பார்க்கும் அந்தக் காட்சியிலும், சந்தோஷிடம் இருக்கும் பணம், நகைகளைப் பார்த்துவிட்டு சந்தோஷை மயக்க நினைக்கும் அந்தத் தருணத்தில் தன்னுடைய கேரக்டராகவே அவர் மாறியிருக்கிறார்.

மேலும் கொலை சதியை எதிர்க்கும் அம்மாவிடம் தனது முதிர் வயது நிலைமையைச் சொல்லி சீறுமிடத்திலும், சார்லியின் பொறுப்பற்றத்தனத்தைச் சுட்டிக் காட்டும் இடத்திலும் ஓஹோ’ என்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார் வரலட்சுமி.

ஈஸ்வரி ராவுக்கும் இந்தப் படம் நிச்சயமாக மிகப் பெரிய பெயரைப் பெற்றுத் தரும். பொறுப்பில்லாத கணவன், யாரையும் எடுத்தெரிஞ்சு பேசும் மகள் என்று இருவரையும் சமாளித்துக் கொண்டு வீட்டையும் கவனிக்கும் அந்தத் தாய்மையுணர்வையும், மகளின் நல்ல வாழ்க்கைக்காக இன்னொரு உயிரையெடுக்கவும் துணியும் காட்சியிலும் அவரது நடிப்பில் குறையே இல்லை.

ஆனால் அதே சமயம் அதே தாய்மையுணர்வோடு சந்தோஷுக்கு விஷத்தை வைக்காமல் தவிர்த்துவிட்டு கண் கலங்கும் காட்சியிலும் நம்மை நெகிழ வைத்திருக்கிறார். கிளைமாக்ஸில் அந்த சாப்பாட்டை முதல் ஆளாக எடுத்துச் சாப்பிடும் வேகத்திலும், நடிப்பிலும் அசத்தியிருக்கிறார் ஈஸ்வரி ராவ்.

சார்லிக்கும் இத்திரைப்படம் பெயர் சொல்லும் படம்தான். குடிகாரர்களின் வாழ்க்கை நிலையில்லாதது. அவர்களது பேச்சு நம்பகத்தன்மையில்லாதது.. செயல் அர்த்தமற்றதாக இருக்கும் என்பதைக் காட்டுவதைப் போல இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சும் அமைந்துள்ளது.

சந்தோஷ் வீட்டில் தங்குவதற்கு முதலில் தடை சொல்லும் சார்லி காபித் தூள் வாங்க பணம் கொடுத்தவுடன் அப்படியே பல்டியடித்து நம்ம வீட்டுப் பையனாக நினைத்து சந்தோஷிடம் பேசும் தோரணையில் மிக இயல்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார் சார்லி.

மேலும் கிளைமாக்ஸ் காட்சி முழுவதும் சார்லியால்தான் பார்வையாளர்களுக்கு சொல்லப்படுகிறது. தோராயமாக 10 ரவுண்டு சாராயத்தை அடித்த பின்பும் கிடைத்த அதிர்ச்சி செய்தியால், சார்லி தன் முகத்தில் காட்டும் நடிப்பே பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

சைக்கிளில் வீட்டுக்கு ஓடோடி வந்து நிலைமையைப் பார்த்துவிட்டு கதறியழுவதும், முடிவை நோக்கி குடும்பத்தினரை இழுத்துச் செல்லும் வேக நடிப்பிலும் சார்லி, நடிப்பில் அனைவரையும் ஒரு படி தாண்டி சென்றுவிட்டார் என்றே சொல்லலாம்.

சந்தோஷ் பிரதாப் சாதாரணமாக இருப்பதுபோலவே படம் நெடுகிலும் வலம் வருகிறார். ஒரேயொரு காட்சியில் மட்டுமே கோபப்படுகிறார். அது சரியானதுதான் என்பது பின்புதான் தெரிகிறது. இந்தப் படத்திற்கு பிறகு இவருக்கு நிறைய வாய்ப்புகள் உறுதியாக வரும்.

மேலும் கண் பார்வையற்றவராக நடித்திருக்கும் சென்றாயன், சாராயக் கடை முதலாளியாக நடித்திருக்கும் சுப்ரமணிய சிவா, கடன் கொடுத்த முதலாளியான சீனிவாசனும் அவரவர் நடிப்பில் சோடை போகவில்லை. இயக்குநரின் சிறப்பான இயக்கத்தினால் அனைவருமே ரசிக்கும்படி நடித்திருக்கிறார்கள்.

படத்தில் பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்திலேயே நடப்பதால் ஒளிப்பதிவாளர் செழியன் படத்தின் இன்னொரு ஹீரோவாகவும் திகழ்கிறார். கதையோட்டத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது ஒளிப்பதிவு. படத்தின் கடைசி ஏரியல் ஷாட்டை மறக்கவே முடியவில்லை. அற்புதம்..!

இசையமைப்பாளர் சாமின் பின்னணி இசையும் இந்தப் படத்தின் சஸ்பென்ஸ், திரில்லர் குணத்திற்கேற்றபடி அமைந்திருப்பதால் நம்மால் ஆழ்ந்து ரசிக்க முடிந்திருக்கிறது. 2 பாடல்களுமே கேட்கும் ரகம். முதல் கனவு பாடலின் மாண்டேஜ் காட்சிகளை ரசிக்கும்படி அமைத்திருக்கிறார் இயக்குநர்.

ஒரேயொரு வீடுதான் கதைக் களம் என்பதால் பக்கவான கிராமத்து வீட்டை அட்மாஸ்பியராக அமைத்து அதில் கதைக்கேற்றபடி காட்சிகளை அமைக்க உதவியிருக்கிறார் கலை இயக்குநர். பாராட்டுக்கள்.

சஸ்பென்ஸ், திரில்லர் படம் என்பதால் அதற்கேற்றவாறு கதையையும், திரைக்கதையையும் வரிசைப்படியாக வடிவமைத்திருக்கிறார்கள் கதாசிரியரும், இயக்குநரும்.

லாஜிக்கே பார்க்க முடியாதபடிக்கு சந்தோஷின் கேரக்டர் ஸ்கெட்ச்சை வடிவைத்து, ஒரு நாள் இரவில் தங்கிவிட்டுப் போவதற்கான திரைக்கதையை அமைத்திருக்கிறார்.

அதே நேரம் பக்கத்து ஊரில் ஒரு வீட்டில் ஒருவன் கொள்ளையடித்து பணத்தையும், நகைகளையும் கொள்ளையடித்து சென்றுவிட்ட தகவலையும் இணைக்கிறார்கள்.

சென்றாயன் முதல் காட்சியில் மோதி நின்ற அதே ஷூவை மீண்டும் கிளைமாக்ஸில் கொண்டு வந்திருக்கிறார்கள். போதாக்குறைக்கு திருடனைத் தேடி வரும் போலீஸ் ஏட்டுவும், கான்ஸ்டபிளும் கிளைமாக்ஸில் டென்ஷனை ஏற்றுகிறார்கள். நாயின் திடீர் மரணமும் எதிர்பாராத ஒன்று.

13 நாட்களில் மொத்தப் படத்தையும் எடுத்து முடித்திருக்கிறார்கள். ஆச்சரியமாகத்தான் உள்ளது. கதை, திரைக்கதை உள்ளிட்ட முழுமையான ஸ்கிரிப்ட் கைவசம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

இந்தக் ‘கொன்றால் பாவம்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு மிகச் சிறந்த இயக்குநர் ஒருவர் கிடைத்திருக்கிறார் என்று உறுதியாக சொல்லலாம்.

ஒரு சிறந்த படத்தை சிறந்த முறையில் கொடுத்திருக்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன் மற்றும் அவரது குழுவினருக்கு நமது பாராட்டுக்களும், வாழ்த்துகளும் உரித்தாகட்டும்..!

அவசியம் பார்க்க வேண்டிய படம் இது. மிஸ் பண்ணிராதீங்க..!

RATING : 4.5 / 5

Our Score