full screen background image

‘அக்னி தேவி’ படத்தை வெளியிட கோவை நீதிமன்றம் தடை..!

‘அக்னி தேவி’ படத்தை வெளியிட கோவை நீதிமன்றம் தடை..!

நடிகர் பாபி சிம்ஹா, நடிகை மதுபாலா, நடிகை ரம்யா நம்பீசன் மற்றும் சதிஷ் ஆகியோர் கூட்டணியில்  உருவாகி வரும் மார்ச் 22-ம் தேதி திரைக்கு வரவிருந்த ‘அக்னி தேவி’ படத்தை வெளியிடக் கூடாது என்று கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த ‘அக்னி தேவி’ படத்தினை சியாண்டோ ஸ்டூடியோ மற்றும் ஜெய் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். 

இப்படத்தை ‘சென்னையில் ஒரு நாள்-2’ பட இயக்குநரான ஜான் பால்ராஜ் தயாரித்து இயக்கியுள்ளார்.

இந்த ‘அக்னி தேவி’ படத்தில் முக்கியக் கேரக்டரில் நடித்தாகச் சொல்லப்படும் நடிகர் பாபி சிம்ஹா படத்தில் தனக்குப் பதிலாக ஒருவரை நடிக்க வைத்தும், வேறொவரை டப்பிங் குரல் கொடுத்தும் படத்தினை தயாரித்திருக்கிறார்கள் என்று சொல்லி படத்திற்குத் தடை கேட்டு கோவை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.

இதற்கு முன்னதாக இத்திரைப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான கோவையைச் சேர்ந்த ஜான் பால்ராஜ் மீது, சென்னை, பரங்கிமலை போலீஸ் துணை கமி‌ஷனர் முத்துசாமியிடம் புகார் மனு அளித்தார் நடிகர் பாபி சிம்ஹா.

அந்த புகார் மனுவில், “கடந்த ஆண்டு கோவையைச் சேர்ந்த ஜான் பால்ராஜ் என்பவர் இயக்கி, தயாரித்த ‘அக்னி தேவ்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி 5 நாட்கள் நடித்தேன். அப்போது என்னிடம் கூறிய கதைப்படி எடுக்காமல் வேறு கதையில் படம் எடுக்கப்பட்டதால் நான் அந்தப் படத்தில் தொடர்ந்து நடிக்கவில்லை.

actor bobby simha

மேலும் ஏற்கனவே நான் நடித்த காட்சிகளை போட்டு காண்பிக்க மறுத்ததால் ஏற்பட்ட பிரச்சினையால் அந்த படத்தில் இருந்து நான் முற்றிலுமாக விலகிவிட்டேன்.

இது தொடர்பாக நான் இயக்குநர் ஜான் பால்ராஜ் மீது போட்டுள்ள வழக்கு கோவை சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில்,  ‘அக்னி தேவ்’ என்கிற படத்தின் பெயரை ‘அக்னி தேவி’ என்று மாற்றி வரும் மார்ச் 22-ந் தேதி வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

இப்போது வெளியாகவிருக்கும் ‘அக்னி தேவி’ என்ற படத்திற்கும் எனக்கும் எந்த ஒப்பந்தமும் இல்லை. நான் ‘அக்னி தேவ்’ படத்தில் நடித்த சில காட்சிகளை வைத்து மோசடியாக எனது முகத்தை மாற்றியமைத்தும், குரல் மாற்றம் செய்தும் படத்தை தயாரித்து இப்போது வெளியிட இருக்கிறார்கள். ஆகவே இந்தப் படத்தை வெளியிடுவதை தடுத்து நிறுத்தி, படத்தின் தயாரிப்பாளர், இயக்குநரான ஜான் பால்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..” என்று கோரியிருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் ‘அக்னி தேவி’ படத்தின் இயக்குநரான ஜான் பால்ராஜ் மீது நந்தம்பாக்கம் போலீசார் மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட (குற்ற எண் 406, 420, 469 & 470) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

இந்நிலையில், இது தொடர்பாக பாபி சிம்ஹா கோவை மாவட்ட முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் ‘அக்னி தேவி’ படத்திற்கு தடை கோரி வழக்குப் பதிவு செய்தார்.

அதன் பேரில், கோவை மாவட்ட முதலாவது கூடுதல் சார்பு நீதிமன்றம் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜான் பால்ராஜ் ‘அக்னி தேவி’ படத்தினை வெளியிட ‘ஸ்டேட்டஸ் கோ’ உத்தரவினை இன்று பிறப்பித்துள்ளது.

மேலும், “படத்தினை வெளியிடுவதில் உள்ள உண்மைத் தன்மையை கண்டறிய நீதிமன்ற ஆணையாளராக வழக்கறிஞர் திருமதி. எம்.கார்த்திகா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இரு தரப்பினரிடமும் விசாரித்து நீதிமன்ற ஆணையாளர் கொடுக்கவிருக்கும் அறிக்கையினை சமர்ப்பித்து நீதிமன்றம் மறு உத்தரவினை பிறப்பிக்கும்வரை, மேற்படி படத்தினை வெளியிடக் கூடாது” எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Our Score