சினிமா நடிகர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்வதைப்போல் சினிமாவில நடிக்கிறார்கள். அதனை ரசிகர்களும் காசு கொடுத்துப் பார்க்கிறார்கள். “பார்க்கிறதோட போயிரணும். அந்த நடிகனை தெய்வமேன்னு கொண்டாடுறது.. பூஜை செய்றது.. தலைவான்னு கத்திக்கிட்டு திரியறது இதெல்லாம் அவங்களுக்கு பைசா காசுக்கு பிரயோசனமில்லாதது…” என்று பல முறை அந்தந்த நடிகர்களே சொல்லிவிட்டார்கள். ஆனாலும் ரசிகர்கள் திருந்தியபாடில்லை. அப்படி திருந்தாத நான்கு அதி தீவிர ரசிகர்களின் கதைதான் இந்த ‘அட்ரா மச்சான் விசிலு’.
தமிழகத்தின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன். இவரது அதி தீவிர ரசிகர்கள் ‘சிம்மக்கல் சேகர்’ என்னும் மிர்ச்சி சிவா, ‘பழங்காநத்தம் பாபு’ என்னும் சென்ட்ராயன், மற்றும் அருண் பாலாஜி. சிவாவின் வீடு முழுக்க சீனியின் படங்களாகத்தான் இருக்கின்றன. சம்பாதிக்கிற பணமெல்லாம் ரசிகர் மன்றத்தின் செலவுகளுக்கே சரியாகிறது. இதே போலத்தான் சென்றாயன் மற்றும் அருண் பாலாஜியின் வீட்டிலும்.
சென்றாயனின் அப்பா ஹோட்டல் வைத்து நடத்துகிறார். அவர் வாங்கிக் கொடுத்த ஆட்டோவை ஓட்டினாலும் அதை பகுதி நேரமாக்கிவிட்டு, முழு நேரத் தொழிலாக ரசிகர் மன்றத்தில் ஈடுபாட்டுடன் இருக்கிறார் சென்றாயன். இதேபோல் அருண் பாலாஜியும் ஊர் முழுக்க கடன் வாங்கி அதையும் சீனியின் ரசிகர் மன்றத்திற்காக செலவழித்து வருகிறார்.
இடையில் சீனியின் போட்டி நடிகரான அப்புக்குட்டி ரசிகர்களுடன் இவர்களுக்கு தீராத பகை. அடிக்கடி அவர்களுடன் முட்டல், மோதல்.. சண்டை, அடிதடி என்று போலீஸ் ஸ்டேஷனுக்கும் தவறாமல் சென்று வருகிறார்கள். அந்தப் பகுதி இன்ஸ்பெக்டரான இயக்குநர் ராஜ்கபூர் நல்ல மனிதராக இருப்பதால் இவர்களுக்கு நிறைய அட்வைஸ் செய்து அனுப்பி வைக்கிறார்.
“இப்படியே எவனுக்கோ காவடியெடுத்து, பெத்தவங்க காசை அழிக்கிறதுக்கு பதிலா அவனை வைச்சே காசு சம்பாதிக்கிற வழியைப் பாருங்கப்பா..” என்று ஒரு முறை சொல்லியனுப்புகிறார் ராஜ்கபூர்.
அந்த நேரம்தான் சீனியின் ‘பட்டத்து ராஜா’ என்னும் படம் ரிலீஸாக காத்திருக்கிறது. அந்தப் படத்தின் மதுரை பகுதி விநியோகத்தை தாங்களே எடுத்து வெளியிடுவதாக மூன்று நண்பர்களும் திட்டமிடுகிறார்கள். இதற்காக சீனியின் மேனேஜர் சிங்கமுத்துவை அணுகுகிறார்கள்.
அவரும் இவர்களை சென்னைக்கு அழைத்து சீனியிடம் அறிமுகப்படுத்தி வைத்து படத்தின் மதுரை பகுதி விநியோகத்தை இவர்களுக்கே பெற்றுத் தருகிறார். படம் வெளியாகிறது. ஆனால் ஓடவில்லை. அட்டர் பிளாப் ஆக.. போட்ட காசு அத்தனையும் 2 மணி நேரத்தில் அம்பேல். அதிர்ச்சியாகிறார்கள் மூவரும்.
சிவா தனது காதலியான தேவி கொடுத்த நகைகளை விற்று இதில் பணம் போட்டிருக்கிறார். இதேபோல் சென்றாயன் தனது தந்தை 30 வருடமாக சம்பாதித்து சேர்த்து வைத்திருந்த மொத்தப் பணத்தையும் பிடுங்கிக் கொண்டு போய் கொட்டியிருக்கிறார். அருண் பாலாஜியும் தனது அண்ணன் பெயரைச் சொல்லி கடன் வாங்கிக் கொடுத்திருக்கிறார். மூவருக்குமே இந்தப் படத்தினால் கிடைத்த நஷ்டம் வாழ்க்கை பிரச்சினையாகிறது.
என்ன செய்வது என்று யோசித்து சென்னை சென்று தலைவரை பார்த்து நியாயம் கேட்கலாம் என்று சொல்லி சென்னை வருகிறார்கள். சூப்பர் ஸ்டாரை சந்திக்கிறார்கள். படம் தோல்வியடைந்ததால் பணத்தைத் திருப்பிக் கேட்கிறார்கள். சீனி பணத்தைத் திருப்பித் தர மறுத்து, அவர்களை அவமானப்படுத்தி அனுப்புகிறார்.
இதனால் வெகுண்டெழும் இந்த மூன்று பேரும் சென்னையிலேயே இருந்து சீனிக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்காக சிங்கமுத்துவை பாலோ செய்கிறார்கள்.
வருமான வரித்துறை ரெய்டு வரும்போதெல்லாம் சீனி, பணத்தை ஆம்புலன்ஸ் வேனில் வைத்து நகரை வலம் வர வைத்துவிட்டு ரெய்டு முடிந்து அதிகாரிகள் சென்றவுடன் திரும்பவும் வீட்டுக்கு வரவழைத்து பணத்தை பத்திரப்படுத்துவார் என்பதை தெரிந்து கொள்கிறார்கள் நண்பர்கள்.
இதையே துருப்புச் சீட்டாக வைத்து சீனியிடம் விளையாட துவங்குகிறார்கள். ஒரு பொய்யான போன்காலில் வருமான வரித்துறை ரெய்டு வரவிருப்பதாக சீனிக்கு தகவலை கொடுக்கிறார்கள். அதிர்ச்சியான அவர் இருக்கின்ற பணத்தையெல்லாம் ஆம்புலன்ஸ் வேனில் வைத்து சிங்கமுத்துவிடம் கொடுத்து பத்திரப்படுத்தச் சொல்கிறார்.
அவரையே வளைத்துப் போட்டிருக்கும் நண்பர்கள், சிங்கமுத்துவுக்காக காத்திருக்கிறார்கள். சிங்கமுத்து வந்தாரா..? பணம் பறி போனதா..? சீனி ஏமாற்றப்பட்டாரா என்பதையெல்லாம் வெள்ளித்திரையில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
நடிகர் ஜீவாவை வைத்து ‘கச்சேரி ஆரம்பம்’ என்றொரு படத்தைக் கொடுத்த இயக்குநர் திரைவண்ணன் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது. இந்தப் படத்தை இயக்கவெல்லாம் ஒரு தைரியம் வேண்டும். இயக்குநரின் தைரியத்திற்கு ஒரு சபாஷ்.
படம் யாரைக் குறிப்பிடுகிறது..? சம்பவங்கள் எதைச் சொல்கின்றன..? என்பதை படம் பார்க்கும் சின்னப் பிள்ளைகளே சொல்லிவிடுவார்கள். அந்த அளவுக்கு சமீபத்தில் நடந்த ‘லிங்கா’ பட நஷ்டத்தில் விநியோகஸ்தர்களின் போர்க்கொடி சம்பவங்களையே இதில் திரைக்கதையாக்கம் செய்திருக்கிறார்கள்.
அதையும் சுவைபட நகைச்சுவை கலந்து சொல்லியிருப்பதாலும், இந்தப் பிரச்சினையில் ரசிகர்களைத்தான் அதிகம் குறை சொல்ல வேண்டும் என்று பெரும்பாலான இடங்களில் சொல்லிக் காட்டியிருப்பதால் இது தவறான படமில்லை என்கிற லிஸ்ட்டில் இடம் பிடிக்கிறது. படத்தின் கிளைமாக்ஸுக்கு முன்பு ஆஸ்பத்திரி காட்சியிலும், அதைத் தொடர்ந்து சிங்கமுத்து அல்லல்படும் காட்சியிலும் நகைச்சுவை எட்டுத் திக்கும் பறக்கிறது.
ஒரு மாறுதலாக ஹீரோயினின் அப்பாவை பண்பட்ட மனிதராக்க் காட்டி ஹீரோவைத் தேடி கண்டுபிடிக்க 10 நாட்கள் நேரமும் கொடுத்து மகளை அனுப்பி வைக்கிறார். மகள் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும்போது தேடி வந்து இழுத்துப் போகிறார். இந்தப் பக்குவமான கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஒரு சபாஷ்..
அதேபோல் இது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு எதிரான படம் என்று தெரிந்திருந்தும் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் மிர்ச்சி சிவாவின் தைரியத்துக்கு ஒரு சல்யூட். அதிகமாக நடிப்பிற்கு வேலை கொடுக்காமல், தன்னிடம் இருப்பதை மட்டுமே காட்டி திரைக்கதையின் வேகத்தில் தான் தப்பித்து மற்ற நேரங்களில் உடன் நடித்தவர்களின் ஆக்சனிலும் எஸ்கேப்பாகியிருக்கிறார் மிர்ச்சி சிவா. இப்படியே இன்னும் எத்தனை நாளைக்கு எஸ்கேப்பாவார் என்று பார்ப்போம்..?
பவர் ஸ்டார் சீனிவாசனெல்லாம் நடிகரா என்று திட்டித் தீர்க்காத மீடியாக்காரர்கள் இல்லை. ஆனாலும் கோடம்பாக்கத்தில் இன்னமும் நிற்கிறார் என்றால் அவருடைய மொக்கை நடிப்புக்கும், ‘ஆஹா’ சொல்லும் ரசிகர்கள்தான் காரணம். அவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும். பல ரஜினி ஸ்டைல் பன்ச் டயலாக்குகளை இதிலும் உருமாற்றி பேசுகிறார் சீனி. ஒவ்வொரு பன்ச்சுக்கும் தியேட்டரில் விசில் சப்தம் பறக்கிறது. எல்லாமே கிண்டல்தான். சீனிவாசனுக்கும் இது நிச்சயம் புரிந்திருக்கும்.
சென்றாயன், அருண் பாலாஜி இருவரும் நடிப்பில் சாதனை புரியவில்லை. ஆனால் நடித்திருக்கிறார்கள். சென்றாயனின் அப்பா, அம்மாவாக நடித்தவர்களுக்கு ஒரு ஷொட்டு. அமர்க்களம். பையனை கண்டிக்கவும் முடியாமல், திட்டவும் முடியாமல் தவிக்கும் பெற்றோரின் உணர்வை நன்கு வெளிக்காட்டியிருக்கிறார்கள்.
சிங்கமுத்து வழக்கம்போல.. டைமிங்சென்ஸ் காமெடியில் பின்னுகிறார். படத்தில் பாதி காட்சிகளை இவர்தான் கடத்தியிருக்கிறார். பாராட்டுக்கள். இவருடைய மனைவியாக நடித்திருக்கும் மதுமிதாவுக்கு ஒரு கிரேட் சல்யூட். மனுஷி என்னமா நடித்திருக்கிறார்..? ஆஸ்பத்திரியில் சிங்கமுத்துவை பாடாய் படுத்திக் கொண்டு தனது கள்ளக்காதலுடன் இணைந்து அவர் நடத்தும் சரச சல்லாப வசனக் காட்சி ஏ ஒன். இதில் சிங்கமுத்துவின் ரியாக்ஷன்களும், கூடுதலாக நகைச்சுவையை தெளித்திருக்கின்றன.
அறிமுக நாயகி நைனா சர்வாரின் வருகை பெரிதாக எடுபடவில்லை. டப்பிங் வாய்ஸும் அவ்வப்போது ஒட்டாமல் போக.. பல இடங்களில் ஸ்லிப்பாகி நிற்கிறது. இணை இயக்குநர்கள் என்னதான் வேலை செய்தார்களோ தெரியவில்லை.. இதையெல்லாம் கவனிக்க வேண்டாமா..? அம்மணி இப்போதே இன்னும் 2 படங்களில் நடித்து வருகிறாராம். அதிலெல்லாம் எப்படி நடிக்கிறார் என்று பார்ப்போம். இதில் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் பாடல் காட்சிகளில் குளுமையாக தெரிகிறார்.
காசி விஸ்வநாதனின் ஒளிப்பதிவு பிரேம் பை பிரேம் அழகு. பாடல் காட்சிகளில் இன்னும் அழகு. இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே மீண்டும், மீண்டும் கேட்கும் ரகம். ரொம்ப நாட்கள் கழித்து ஒரு படத்தின் அனைத்து பாடல்களையுமே காது குளிர கேட்க முடிந்த்தென்றால் அது இந்தப் படத்தில்தான்.
‘தலைவன் பொறந்த நாளு’, ‘கண்ணாமூச்சி கண்ணாமூச்சி’ பாடல்களை ஆர்ப்பாட்டமாக படமாக்கியிருக்கிறார்கள். ‘கண்ணாமூச்சி’ பாடல் காட்சியில் ‘மெட்டி ஒலி’ சாந்தியின் நடனம் சிம்ப்ளி சூப்பர்ப். இந்தாண்டு கடைசிவரையிலும் இந்தப் பாடல் அனைத்து தொலைக்காட்சிகளிலும் திரும்பத் திரும்ப வரும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்து ‘யாரு இவ’, ‘தேவதை தேவதை’ பாடல்களின் இசையும் ரம்மியம். என்.ஆர்.ரகுநந்தன் தமிழ்ச் சினிமாவில் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டும்.
தொழிலில் இறங்குவதற்கு முன்பு அதில் தங்களுக்கு முன் அனுபவம் இருக்கிறதா..? போட்ட காசு திரும்பி வருமா..? நஷ்டமடைந்தால் என்ன செய்யப் போகிறோம் என்பதையெல்லாம் யோசிக்காமல் தனது தலைவனை மட்டுமே நம்பி பணத்தை முதலீடு செய்யும் இவர்களைப் போன்ற முட்டாள் ரசிகர்களை இன்னும் அதிகமாகவே திட்டியிருக்க வேண்டும். அந்தக் கோணத்தில் மட்டும் ஏதும் சொல்லாமல் விட்டமைக்காக இயக்குநருக்கு நமது கண்டனங்கள்.
சாதாரண பெட்டிக் கடை வைப்பவர்கள்கூட மிகுந்த திட்டமிடலுடன்தான் வியாபாரத்தைத் துவக்குவார்கள். இப்படி திடுதிப்பென்று யார் பேச்சையோ கேட்டு தொழிலில் இறங்கினால், இதற்கான நஷ்டத்தையும் இவர்கள்தான் ஏற்றாக வேண்டும். “உன்னை நம்பித்தான் காசு போட்டேன். நஷ்டப் பணத்தைத் திருப்பிக் கொடு” என்று நடிகரிடம் திருப்பிக் கேட்பதே தவறாச்சே..? இதை இயக்குநர் படத்தில் குறிப்பிடாதது ஏன் என்றுதான் புரியவில்லை.
ஆனால் நடிகர்களுக்கு வைக்கப்படும் கட்அவுட்டுகள். பாலாபிஷேகம், வாழ்க கோஷம்.. ரசிகர் மன்றம் என்று இளைஞர்கள் வெட்டியாய் அலைவது.. பணத்தை வாரியிறைப்பது.. பெற்றோர்களுக்கு சுமையாய் இருப்பது.. இதையெல்லாம் படத்தில் பல இடங்களில் கண்டித்திருக்கிறார்கள். இதேபோல், நடிகர்களுக்கு ரசிகனாக மட்டுமே இருங்கள். ஒருபோதும் அடிமையாய் இருக்காதீர்கள் என்று சொல்லியிருக்கும் ஒரு நல்ல விஷயத்துக்காகவே இந்தப் படத்துக்கு ஒரு ‘ஜே’ போடலாம்..!
காமெடி ரசிகர்கள் மிஸ் பண்ணக் கூடாத படம்..!